படித்தது
சாதாரண குடும்ப பின்னணி கொண்ட ஹேமா அண்ணாமலை, கோவையிலுள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், கணினி தொழில்நுட்ப மற்றும் தகவல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். அதன்பின், ஆஸ்திரேலியாவில், எம்.பி.ஏ., படித்தவர். என் வாசகியும் கூட.
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக, 'ஆம்பியர்' என்ற பெயரில், எலக்ட்ரிக் டூ வீலர் தொழிற்சாலை நிறுவி, பத்தே ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் நிறுவனமாக மாற்றி, வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்த நிலைமைக்கு வர, தான் சந்தித்த பிரச்னைகள், பெற்ற பாடங்கள், கற்ற உத்திகள் மற்றும் அனுபவங்களை, 'தடைகளைத் தகர்த்து...' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.
அப்புத்தகத்திலிருந்து சிறு பகுதி இதோ:
முதன் முதலில் தயாரிப்பு தொழில் தொடங்கலாம் என்று தீர்மானித்தபோது, நிறுவனத்துக்கான பெயர் அர்த்தமுள்ளதாகவும், பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்; அதேசமயம், 'ஸ்டைல்' ஆக, மக்கள் மனதில் எளிதில் இடம்பிடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
பல பெயர்களை அலசி பார்த்த பின், 'ஆம்பியர்' என்ற பெயர் தேர்வானது. காரணம், 'ஆன்றே மேரி ஆம்பியர்' என்ற பிரெஞ்சு இயற்பியல் வல்லுனர் தான், எலக்ட்ரோ மேக்னடிசத்தை கண்டுபிடித்தவர். எங்கள் பேட்டரி வண்டிகள் அனைத்தும், எலக்ட்ரோ மேக்னடிசத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்து, பதிவு செய்தேன்.
தொழில் முயற்சியில் ஏற்பட்ட சறுக்கல்களும், அதன் வழியாக கற்றுக்கொண்ட பாடங்களும் நிறைய உண்டு. ஆரம்பத்தில், எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது, நிதித் தேவையை பூர்த்தி செய்வதும், பணப்புழக்கத்தைக் கையாள்வதும் தான்.
அடுத்து, தலைமைப் பண்பு. ஒரு நல்ல தலைவராக இருக்க வேண்டுமென்றால், விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொண்டேன்.
யாரிடம் என்ன பேச வேண்டும், எவ்வளவு பேச வேண்டும் என்ற தெளிவு, பல தவறுகள் செய்து அடிபட்ட பிறகே வந்தது. சொல்ல வேண்டிய வார்த்தைகளைச் சரியான நேரத்தில், சரியான விதத்தில், சரியான நோக்கத்துடன் சொல்லி விட்டாலே போதும்... பல தடைகள் தாமாகவே விலகி, நமக்கு முன்னேற வழிகொடுக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தேன்.
புதிதாக தொழில் முனைவோர் முக்கியமாக கருத்தில் கொண்டு செயல்பட வேண்டிய மூன்று விஷயங்கள்...
1. சிதறாத கவனம்
2. எதிர்காலம் குறித்த தேவையற்ற அச்சங்களைத் தவிர்த்தல்
3. முன்னேற்பாடுகள்
எங்கு யாரிடம் பேசினாலும், நம்மைப் பார்த்தால் கத்துக்குட்டியாகத் தெரியக் கூடாது. 'தெளிவாக இருக்கிறார், விஷயம் இருக்கு... ஏமாற்ற முடியாது...' என்ற அளவுக்கு, நம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து, நல்ல வழிகாட்டிகளை அடைவது. ஒருநல்ல வழிகாட்டி கிடைத்தாலே போதும். அடுத்தடுத்து நல்ல மனிதர்களிடம் அவர்களே நம்மை கொண்டு சென்று விடுவர்.
ஒரு நிறுவனம் வளர வேண்டுமா?
10 திறமையான ஆட்களை தேர்ந்தெடுத்து, நம் தொழிலுக்கேற்ப அவர்களுக்கு பயிற்சி கொடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கண் அசைவிலேயே நாம் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களை தயார்படுத்திக் கொண்டாலே, பாதி வெற்றி தான்.
ஒரு தொழில் முனைவோர், முதலாளியாக, புரொமோட்டராக, அனைத்திலும் வல்லுனராக இருப்பது இயலாது. அதே நேரத்தில், அத்தனை துறைகள் குறித்தும் நல்ல புரிதலும், கவனமும் இருந்தால், பல விஷயங்களைச் சாத்தியமாக்கி விடலாம்.
ஒவ்வொரு மாதமும், கடந்த மாத நிகழ்வுகள், பயணங்கள், சந்தித்த மனிதர்கள், செய்த தவறுகள், கற்றுக்கொண்ட பாடங்கள் என, அனைத்தையும் உடன் பணியாற்றுபவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், வரும் மாதங்களில் எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை தர வேண்டும், என்னென்ன செயல்பாடுகள் செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட வேண்டும்.
கடந்த, 2011ல், மாற்றுத்திறனாளி உபயோகிக்கும் பேட்டரி வண்டிக்கான அரசு, 'ஆர்டர்' எங்களுக்குக் கிடைத்தது. அப்போது, எல்லாரும் சேர்ந்து ஒரு மாதம் கடினமாக உழைத்தோம். கிட்டத்தட்ட, 700 வண்டிகளை தயார் செய்து கொடுத்தோம்.
வண்டிகளை, 'அசெம்பிள்' செய்யும்போது, இதை ஓட்டுபவர்களுக்கு எந்த விபத்தும் நேர்ந்துவிடக் கூடாது. அவர்கள் தொழில் சிறக்க வேண்டும் என்று, இரண்டு நிமிடம் ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்துவிட்டு, வேலை செய்யச் சொல்வேன்.
தொழிலில், வெற்றியோ - தோல்வியோ நம்பிக்கை உள்ளவர்கள் நம்முடன் இருக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம். நம்மால் முடியும் என்று நினைத்தால், எதுவும் முடியும். அப்படிப் போராடியதால் தான், என்னால் மத்திய அரசு மானியத்தைப் பெற முடிந்தது.
மத்திய அரசு, பல நல்ல திட்டங்களை வழங்குகிறது.
உண்மையில், எந்த எதிர்பார்ப்புமின்றி கடமையாற்றும் நல்ல அரசு அலுவலர்கள், நமக்கு உதவத் தயாராக இருக்கின்றனர். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்முடைய தேவைகளுக்கான சரியான அலுவலகங்களைத் தேர்ந்தெடுத்து, துணிந்து அணுகுவதே.
இந்தியாவில், பரம்பரையாக குடும்பத் தொழில் செய்பவர்கள் தான், தொழிலில் முன்னேற முடியும் என்ற கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கின்றனர். அந்த கட்டமைப்பை உடைத்து முன்னேறினால் மட்டும் தான் வெற்றியடைய முடியும் என்பதையும், அது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதையும் என்னுடைய இந்தத் தொழில் முனைவுப் பயணத்தில் தெளிவாகத் தெரிந்து கொண்டேன்.
என் குடும்பத்தையும், தொழிலையும், முடிந்த வரை, நல்ல முறையில் நடத்தி வருகிறேன். வெற்றிக்கான அடித்தளமே, அன்பான குடும்பம். தொழில் முனைவோரின் வெற்றியில் குடும்பத்தின் பங்கு, மறுக்க முடியாதது.
எத்தனை வெற்றிகள் அடைந்தாலும், அதைப் பகிர்ந்து கொள்ள, நம்மை நேசிக்கிற ஒரு குடும்பம் அவசியம். அவர்களின் ஆதரவும், அன்பும்தான் தொழிலில் வலுவாக வேரூன்ற உதவும்.
எப்போதும் நல்லது மட்டுமே நடக்காது. அவ்வப்போது கசப்பான சம்பவங்களும், அனுபவங்களும் ஏற்படத்தான் செய்யும். என்றாலும், இவை அனைத்தும் வாழ்வின் அங்கம் என்றே கருத வேண்டும்.
'இப்புத்தகத்தைப் படித்து, 10 பெண்களாவது தொழில் முனைவோராக உருவாக வேண்டும். அதுவே தன் வாழ்நாள் சாதனையாக இருக்கும்...' என்கிறார்.
இப்படி, முன்னேற்ற பாதையில், தான் சந்தித்த சவால்களையும், அதை எதிர்கொண்ட நடவடிக்கைகளையும் விரிவாக எழுதியுள்ளார். இது, புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வழி காட்டுவதாக அமையும்.
புத்தகம் கிடைக்குமிடம்:
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்
55/7, R - பிளாக், 6வது அவென்யூ,
அண்ணாநகர், சென்னை - 40.
போன்: 98400 65000; விலை: ரூ.250-.