ஆர். பிரசன்னா, திருச்சி: 'பா.ஜ., தமிழகத்தில் காலுான்றுவதை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தடுக்கும்...' என, அக்கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளாரே...
முதலில், இவரின் கட்சி, தமிழகத்தில், ஊன்றுகோல் இல்லாமல் நிற்க முயற்சி செய்யட்டும்... அதன் பிறகு, பா.ஜ., பற்றி பேசட்டும்!
வி. லோகாம்பாள், தாராபுரம்: பா.ம.க., இன்னும் எத்தனை காலத்திற்கு தான், 'நிழல் பட்ஜெட்' வெளியிடும்?
ராமதாஸ், அன்புமணி இருக்கும் வரையில், 'நிழல் பட்ஜெட்' தான்!
* அ. ரவீந்திரன், கன்னியாகுமரி: 'குடித்து விட்டு வாகனம் ஓட்டாதே...' என, ஆங்காங்கே அரசின், 'அட்வைஸ்' பலகைகள் வைக்கப்பட்டுள்ளதே...
சரி தான்... அதனால், உயிர் போய் விட வாய்ப்புண்டு... மேலும், அக்குடும்பமே சீரழிந்து விடும். பல குடும்பங்கள் அழிந்து போகும் மதுவை ஏன் தடை செய்யாமல் இருக்கிறது அரசு?
கி. வித்யா, தென்காசி: அந்தமான் தீவுக்கு சென்றுள்ளீர்களா... அங்கே மறக்க முடியாதது எது?
நானும், லென்ஸ் மாமாவும் பல முறை சென்று இருக்கிறோம்... அங்கு மறக்க முடியாதது, 'விண்ட் சர்பிங்' தான்! ஒருவரை ஒருவர் கடலில் முந்த முயலுவோம்!
* ஆர். சுப்பு, விருதுநகர்: 'பாலிடெக்னிக்கில்' 1.10 லட்சம் இடங்கள் காலியாக உள்ளதாக, அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறாரே... தொழில் கல்வி படிப்பதில், மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதா?
அதை படிப்பதால் இப்போது வேலை கிடைப்பதில்லை... இதே நிலை தான், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மருத்துவ படிப்புகளுக்கும் வரப்போகிறது.
எஸ். சித்ரா, சென்னை: அரசு விழாக்களில், வெளுத்துப் போன, 'ஜீன்ஸ் பேன்ட்' அணிந்து கலந்து கொள்கிறாரே உதயநிதி... அவர்களின் கட்சி கரை வேட்டி கட்டிக் கொள்வதில்லையே...
அடிப்படையில் அவர் ஒரு சினிமா நடிகர் ஆயிற்றே... அதனால் தான், 'ஜீன்ஸ் பேன்ட்!' ('ஜீன்ஸ்' எல்லாமே புதிதாக வாங்கும்போதும், சாயம் போனது போல் தான் இருக்கும்!)
எல். மூர்த்தி, கோவை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறதே... இதனால், யாருக்கு பாதிப்பு அதிகம்?
திருமணம் நிச்சயித்து, நகை வாங்காமல் இருப்பவர்களுக்குத் தான் பாதிப்பு அதிகம்! அத்துடன், 'டிவி'யில் நகைக் கடை விளம்பரம் பார்த்து, வாங்க நினைப்பவர்களும் இதில் சேர்க்கை!