முன்கதைச் சுருக்கம்: பழைய குற்றவாளியை தேடி வந்த போது, 'போர்டிகோவில்' நின்றிருந்த தருணின் காரை பார்த்து கதவை தட்டியதாக கூறினார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன். பேசி முடித்து கிளம்பும் போது, மாடியில் கதவு தட்டும் சத்தமும், பெண்ணின் அழுகுரல் கேட்பதாகவும் கூறினார் -
இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சொன்னதைக் கேட்டு தருண், ஜோஷ் மற்றும் இக்பால் மூவரும் ஸ்தம்பித்துப் போன பார்வைகளோடு, அந்த அதிர்ச்சியை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர். நெற்றி வியர்த்து மினுமினுத்தது.
முதலில் சுதாரித்துக் கொண்ட தருண், அதிர்ச்சியிலிருந்து தன்னை விடுவித்து, இயல்பான குரலில், ''என்ன சார் சொல்றீங்க... ஒரு பெண் அழற மாதிரி சத்தம் கேட்டதா?''
''ஆமா, இப்ப கேட்டேன்.''
''அப்படியொரு சத்தம் கேட்க வாய்ப்பே இல்லை, சார். இந்த வீட்ல பெண்கள் யாரும் கிடையாது.''
தருணை கையமர்த்தி, ''ஒரு நிமிஷம், கொஞ்சம் உன்னிப்பா கவனிங்க... கதவைத் தட்டும்போதே அந்த அழற சத்தம் கேட்குது,'' என்றார், முத்துக்குமரன்.
ஹாலுக்குள் அமைதி நிலவ, மாடியிலிருந்து கதவு தட்டப்படும் சத்தம், இப்போது விட்டு விட்டு கேட்டது.
இதயம் தாறுமாறாய் துடிக்க, காதுகளுக்கு உன்னிப்பைக் கொடுத்தான், தருண்.
'முகிலாவுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் மயக்கம் தெளிய வாய்ப்பில்லையே... அப்படியே மயக்கம் தெளிந்து இருந்தாலும், எழுந்து நிற்க கூடிய அளவுக்கு உடம்பு ஒத்துழைக்காதே... ஏதாவது காரணம் சொல்லி, இன்ஸ்பெக்டரை மாடிக்குப் போகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்...' என, தருண் யோசித்தபடி இருக்கும் போதே, கதவு தட்டும் சத்தத்துக்கு நடுவில், அந்த அழுகையும் கேட்டது.
''என்ன தருண்... ஒரு பெண்ணோட அழுகை சத்தம் இப்ப கேட்குதா?''
கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், தன் உதடுகளில் சிறிய புன்னகையொன்றை தவழவிட்டபடி அவரை ஏறிட்டான், தருண்.
எரிச்சலானார், முத்துக்குமரன்.
''இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்?''
''அது உண்மையான அழுகை கிடையாதுன்னு அர்த்தம் சார்.''
''என்ன சொல்றீங்க... அது உண்மையான அழுகை கிடையாதா?''
''ஆமா சார்... இக்பாலோட அப்பா, 'டிவி' சீரியல்களுக்கு அடிமை. காலை, 10:00 மணியிலிருந்து ராத்திரி, 11:00 வரை, 'டிவி'யில் வர்ற எல்லா சீரியல்களையும் பார்த்துடுவார்.
''உடம்புக்கு சரியில்லாத இந்த நேரத்துல கூட சீரியல்களைப் பார்த்துட்டு இருப்பார். இப்ப நீங்க கேட்கிற ஒரு பெண்ணோட அழுகை சத்தம், 'டிவி' சீரியல் நடிகையோடது; அது நிஜமான அழுகை இல்லை.''
முத்துக்குமரன் தன்னுடைய கண்களில் சந்தேகத்தை நிரப்பியபடி மூவரையும் பார்வையால் அளந்துவிட்டு, ''எனக்கு அப்படித் தோணலையே. ஒரு பெண்ணோட நிஜ அழுகைக்கும், 'டிவி' சீரியல் நடிகையோட போலியான அழுகைக்கும் நல்லாவே வித்தியாசம் தெரியும். அது உங்களுக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா, எனக்கு அந்த வித்தியாசம் தெரியும்,'' என்றார்.
இக்பாலிடம் திரும்பி சற்றே கடுமையான குரலில், ''மாடியறையில் இருக்கிறது யாரு, உங்க அப்பாவா?'' என்றார், முத்துக்குமரன்.
''ஆமா சார்.''
''அவர் கூட இருக்கிற அந்தப் பொண்ணு யாரு?''
''நீங்க சொல்ற மாதிரி அப்பா அறையில, எந்த பொண்ணும் இல்ல சார்,'' என்றபடி, முத்துக்குமரனுக்கு அருகில் வர முயற்சித்தான். அவர் எச்சரிக்கையாகி பின்னுக்கு நகர்ந்து, தன் இடுப்பின் மறைவுக்கு கையை எடுத்து போய், ஒரு மைக்ரோ விநாடியில் அந்த பிஸ்டலை உருவிக் கொண்டார்.
குரலை உயர்த்தி, ''மூவ் பேக்... மூவரும் அப்படியே நடந்து போய் சுவரோரமா நில்லுங்க. யாரும் திரும்பிப் பார்க்கக் கூடாது.''
''சார்... பதட்டப்பட வேண்டாம், ப்ளீஸ்... விஷயம் என்னான்னு நான் சொல்றேன்,'' என்றான், தருண்.
''நோ... உங்க மூணு பேர்கிட்டேயும் ஏதோ தப்பு இருக்கு. என் பக்கத்துல யாரும் வரக்கூடாது. மீறி வந்தா சுடுவேன். ம்... பின்னாடி போங்க,'' என்று, பிஸ்டலை அசைத்தபடி மூவரையும் குறி பார்த்தார்.
தருண், இக்பால் மற்றும் ஜோஷ் வியர்த்து வழிந்து, பின்னுக்கு நகர்ந்து சுவரோரமாய் போய் நின்றனர்.
''எனக்கு முதுகைக் காட்டிகிட்டு நில்லுங்க,'' கர்ஜித்தார், முத்துக்குமரன்.
மூவரும் இருண்டு போன முகங்களோடு எந்திரத்தனமாய் திரும்பி நின்றனர்.
''இப்ப நான் யார்கிட்ட கேள்வி கேட்கிறேனோ அவங்க மட்டும் தான் பதில் சொல்லணும். அந்த பதில் உண்மையாய் இருக்கணும். முதல் தடவை பொய் சொன்னா, தோட்டா முழங்காலில் பாயும். ரெண்டாவது தடவை பொய் சொன்னா, தோள்பட்டையில் பாயும். மூணாவது பொய் சொன்னா, மார்புல பாயும்.
''இது, 'சைலன்சர்' பொருத்தப்பட்ட பிஸ்டல். டெசிபல்லோட அளவு, 30 மட்டுமே. இது, நாம கிசுகிசுன்னு பேசற சத்தத்துக்கு சமமானது. நான் சுட்டா அந்த சத்தம் கூட, உங்க மூவருக்கும் கேட்காது.''
முத்துக்குமரன் பேசப் பேச, பதட்டமாய் குரல் கொடுத்தான், தருண்.
''சார்... அவசரப்பட்டு எங்களை, 'ஷூட்' பண்ணிடாதீங்க. அந்த அழுகைச் சத்தத்துக்கு என்ன காரணம்ன்னு நான் சொல்றேன்.''
''நீ எதையும் சொல்ல வேண்டாம். நான் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லு. மாடியில் இருக்கிற பொண்ணு யாரு?''
''சார்... அந்தப் பொண்ணு?''
''பொய் சொன்னா உன்னோட முழங்காலுக்கு கீழே தோட்டா பாயும்.''
''அது... முகிலா சார்.''
தருண் சொல்ல, அதிர்ச்சியில் உறைந்தார், முத்துக்குமரன்.
''என்னது, முகிலாவா... அவள் எதுக்காக இக்பாலோட அப்பா கூட இருக்கா?''
''சார்... இக்பாலோட அப்பா அந்த அறையில இல்லை. அவர், இன்னிக்கு மதியமே அபுதாபி புறப்பட்டுப் போயிட்டார். நாங்க சொன்னது பொய். முகிலா மட்டுந்தான் அந்த அறையில இருக்கா.''
முத்துக்குமரனின் விழிகளில் அதிர்ச்சி அலைகள் பரவியது. சில விநாடிகள் மவுனமாய் இருந்து, ''அப்படீன்னா இது கடத்தல். புவனேஷோட கல்யாணத்துக்கு உதவி பண்ற மாதிரி நடிச்சுகிட்டே, முகிலாவை நீங்க மூணு பேரும் கடத்தி இருக்கீங்க இல்லையா?''
இக்பால், ஜோஷ் மற்றும் தருண் மவுனம் அனுஷ்டிக்க, அடித் தொண்டையில் உறுமினார், முத்துக்குமரன்...
''அடுத்த பத்து செகண்ட்ல எனக்கு பதில் வேணும். இல்லேன்னா மூணு பேர்ல யாரை வேணும்ன்னாலும் சுடுவேன்.''
''வேண்டாம் சார், நான் செல்றேன்,'' என, கத்தினான், ஜோஷ்.
''சொல்லு.''
''நாங்க மூணு பேரும், 'ப்ளான்' பண்ணித்தான் அவளைக் கடத்தினோம்.''
''முகிலா பூ மார்க்கெட் கார்னர்ல இறங்கி யாரைப் பார்க்கப் போனா?''
''அவ யாரையும் பார்க்கப் போகலை சார்.''
''அப்புறம்?''
''ஆர்.எஸ்.புரம் விநாயகர் கோவிலுக்குப் போக வேண்டிய முகிலாவுக்கு, நான் தான் போன் போட்டு அவளை திசை திருப்புனேன்,'' என்றான், ஜோஷ்.
''திசை திருப்பினியா?''
''ஆமா சார்... ஆர்.எஸ்.புரம் விநாயகர் கோவில் அர்ச்சகருக்கு உடம்பு சரியில்லை. அதனால, பூ மார்க்கெட்டுக்கு பக்கத்தில் இருக்கிற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்ல கல்யாணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளதா, நான் போன்ல சொன்னேன்.
''முகிலா அதை நம்பி, பூ மார்க்கெட் கார்னர்ல டாக்சியை நிறுத்தி இறங்கிட்டா. சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வர்ற வழியில் நானும், இக்பாலும் காரோடு போய் அவளுக்கு உதவி பண்ற மாதிரி நடிச்சு, கடத்தி இந்த வீட்டுக்கு கொண்டு வந்துட்டோம்.''
முத்துக்குமரன் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்துப் போனவராய் இக்பாலைப் பார்த்து, ''என்ன... ஜோஷ் சொல்றதெல்லாம் உண்மையா?''
''உண்மைதான் சார்.''
''முகிலாவோட மொபைல் போனின் ஐ.எம்.ஈ.ஐ., அடையாள எண் மேலே இன்னொரு எண்ணை, 'சூப்பர் இம்போஸ்' பண்ணினது யாரு?''
''நான் தான் சார்... முகிலாவோட மொபைல்போன் இருக்கும் இடத்தை, 'சைபர் க்ரைம் பிராஞ்ச்' கண்டுபிடிச்சிட கூடாதேன்னு, அந்த ஐ.எம்.ஈ.ஐ., நம்பரை மாற்றினேன்.''
''சரி... முகிலாவை எதுக்காக கடத்துனீங்க?''
''முகிலாவை புவனேஷ் கல்யாணம் பண்ணிக்கிறது எங்களுக்குப் பிடிக்கலை.''
''என்ன காரணம்?''
''அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டோமே.''
''இது, சரியான காரணமாய் தெரியலை. வேற ஏதோ ஒரு காரணம் இருக்கணும். இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் நீங்க மூணு பேரும் அந்தக் காரணத்தை சொல்ல மாட்டீங்க,'' என்றார், முத்துக்குமரன்.
பிஸ்டலை வலது கையில் எச்சரிக்கையோடு வைத்து, இடது கையால், 'பேன்ட் பாக்கெட்'டில் இருந்த மொபைல்போனை எடுத்து, 'போலீஸ் கன்ட்ரோல்' அறைக்கு தொடர்பு கொண்டார்.
பத்து விநாடிகளுக்குப் பிறகு ஒரு, 'பீப்' சத்தத்தை மட்டும் வெளியிட்ட அவருடைய மொபைல்போன் தொடர்ந்து மவுனம் சாதித்தது.
மனதுக்குள் ஒரு சின்ன திடுக்கிடல் பரவ, முத்துக்குமரன் மறுபடியும், 'கன்ட்ரோல்' அறையை தொடர்பு கொண்டார். அதே, 'பீப்' சத்தத்தோடு இணைப்பு அறுந்து போக, இதயம் லேசான பயத்தோடு ஒருமுறை உதறியது.
'பக்கத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து, 'கன்ட்ரோல்' அறையை தொடர்பு கொள்ள சொல்லலாமா?' என, முத்துக்குமரன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த சம்பவம் நடந்தது.
முதுகுப்புறங்களைக் காட்டி நின்றிருந்த மூவரில், ஜோஷ், 'திடும்' என்று திரும்பி, ஒரு சூறாவளியைப் போல் அரைவட்டமாய் சுழன்று, பக்கத்திலிருந்த பாலிவினைல் நாற்காலியை மூர்க்கத்தோடு எட்டி உதைத்தான். அது, ஒரு ஏவுகணையாய் பாய்ந்து முத்துக்குமரனின் முகத்தைத் தாக்கியது; துல்லியமான தாக்குதல்.நிலைகுலைந்தார், முத்துக்குமரன்.
அவர் வலது கையில் வைத்திருந்த பிஸ்டல் எகிறி, அந்தரத்தில் மிதந்து மாடிப்படிகளில் போய் விழ, இடது கையிலிருந்த மொபைல்போன் தெறித்து சுவரில் மோதி, நான்கைந்து சில்லுகளாய் சிதறியது.
அந்த விநாடிகளுக்காகவே காத்திருந்த தருண், விருட்டென்று பாய்ந்து போய், மாடிப்படியில் விழுந்திருந்த பிஸ்டலை எடுத்துக் கொண்டான்.
டீபாயின் மேல் இடம் பிடித்திருந்த வெண்கலத்தாலான கனமான அந்த, 'ப்ளவர் வாஷை' கையில் எடுத்தான், இக்பால்.
மல்லாந்து விழுந்து கிடந்த முத்துக்குமரன் கைகளை ஊன்றியபடி எழ முயல, தன் முழு பலத்தையும் திரட்டி, 'ப்ளவர் வாஷால்' அவருடைய பின்னந்தலையை ஆவேசமாய் தாக்கினான், இக்பால்.
'த்த்த்ட்ட்ட்'
முத்துக்குமரனின் பொத்துக் கொண்ட தலையிலிருந்து ரத்த துளிகள் சிதறி, பக்கத்து சுவர்களில் பட்டு, சின்னச் சின்ன சிவப்பு கோடுகளாய் மாறி வழிந்தது.
— தொடரும்
ராஜேஷ்குமார்