ரஜினி நடிக்க விரும்பும் படம்!
எம்.ஜி.ஆர்., நடித்த பல படங்கள், டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு, தியேட்டர்களில் அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1955ல், எம்.ஜி.ஆர்., நடித்த, குலேபகாவலி படத்துக்கு, ரஜினி மிகப்பெரிய ரசிகராம். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான அந்த படத்தின், 'ரீ - மேக்'கில் நடிக்க ஆசைப்படும் ரஜினி, 'அது, என் கனவு படம். சரியான சந்தர்ப்பம் அமையும்போது, அந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன்...' என்று, சில அபிமான இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.
சினிமா பொன்னையா
டாப்ஸி போட்ட குண்டு!
'தேவையான அளவு பணம் சம்பாதித்ததும், சினிமாவை விட்டு விலகி விடுவேன். அதோடு, சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் நடிக்க வரவில்லை. சினிமாவில் நடித்தால், சீக்கிரமே நிறைய சம்பாதித்து விடலாம் என்பதற்காகவே நடிக்க வந்தேன்.
'அதனால், நான் எதிர்பார்த்த அளவுக்கு பணம் சேர்ந்ததும், சினிமாவுக்கு, 'குட் - பை' சொல்லி, விடுவேன். 'சராசரி பெண்ணாக திருமணம் செய்து, குழந்தை குட்டிகளை பெற்று, வாழ்க்கை பாதையை மாற்றிக் கொள்வேன்...' என்கிறார், டாப்ஸி.
— எலீசா
மறுக்கிறார், சமந்தா!
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சமந்தாவை அழைத்தபோது, 'குத்துப்பாட்டு நடிகையரைப் போன்று, என்னாலும் அதிரடி காட்ட முடியும் என்பதை நிரூபிக்கவே, அப்படி ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். மற்றபடி தொடர்ந்து அதுபோன்று குத்தாட்டம் போட விருப்பம் இல்லை...' என்று சொல்லி, அந்த வாய்ப்பை திருப்பி விட்டிருக்கிறார். அந்த குத்தாட்ட வாய்ப்பை இப்போது, பாலிவுட் நடிகை, திஷா பதானி கைப்பற்றியுள்ளார்.
- எலீசா
உஷாராக களமிறங்கும், வடிவேலு!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், நாயகனாக நடிக்கும், வடிவேலு, நான்கு படங்களில் காமெடியனாகவும் நடிக்கிறார். 'ரீ -என்ட்ரியில், 'ஹீரோ'வாக மட்டுமே நடிப்பேன் என்றேன். ஒருவேளை, 'ஹீரோ'வாக நடிக்கும் படங்கள் எதிர்பார்த்தபடி கை கொடுக்கவில்லை எனில், காமெடியாவது கை கொடுக்குமே என்பதற்காகவே இப்படி இரட்டை குதிரைகளில் ஏறி இருக்கிறேன்...' என்கிறார், வடிவேலு.
ஒவ்வொரு காமெடி கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன், 'கெட் - அப்'புடன், உடற்கட்டையும் பக்காவாக மாற்றி, வெறித்தனமாக களத்தில் இறங்கி அடிக்கிறார். இதனால், ஏற்கனவே களத்தில் இருக்கும், சூரி, யோகிபாபு உள்ளிட்ட காமெடியன்கள், தங்களை வடிவேலு ஓரங்கட்டி விடுவாரோ என்று, கலவரத்தில் உள்ளனர்.
- சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* விஜய் நடிக்கும் தெலுங்கு படத்தில், தெலுங்கு சூப்பர் ஸ்டார், மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
* ஆர் ஆர் ஆர் படத்தை, 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிய, ராஜமவுலி, அடுத்து, மகேஷ் பாபு நடிப்பில், 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில், புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஆப்ரிக்க நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது.
* கடந்த, 1993-ல், ஷங்கர் இயக்கிய, முதல் படமான, ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் துவங்கப் போகிறது. நயன்தாரா, முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு, மரகதமணி இசையமைக்கிறார்.
அவ்ளோதான்!