'திரை இசை அலைகள்' நுாலிலிருந்து:
நம்ம வீட்டு தெய்வம் படத்திற்கு, இசை, குன்னக்குடி வைத்தியநாதன். ஒரு பாடலுக்காக அவர், தமிழ் தென்றல் கி.வா.ஜகன்னாதனை அணுகினார்.
'இசையமைப்பாளர் போடும் சந்தத்திற்கெல்லாம் என்னால் பாட்டெழுத முடியாது...' என்றார், கி.வா.ஜ., மிகவும் வற்புறுத்தியதை அடுத்து, ஒப்புக் கொண்டார். நவராத்திரி விழாவை சித்தரிக்கும் விதமான பாடல் என, கி.வா.ஜ.,க்கு சொல்லப்பட்டது.
'மெட்டு என்ன...' என்றார், கி.வா.ஜ., 'உங்கள் தமிழ் குன்றாது வரவேண்டும் என்று, இந்த குன்னக்குடி ஆசைப்படுவதால், எந்தவித தடையுமின்றி எழுதுங்கள்...' என பதிலளித்தார், குன்னக்குடி.
கி.வா.ஜ., எழுத, ஒவ்வொரு வரியும் சிறப்பாகவே இருந்தது.
'நீங்கள், இதற்கு மெட்டமைத்து காட்டுங்கள்...' என்றார், கி.வா.ஜ.,
'உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி...' குன்னக்குடியின் வயலின், வார்த்தைகளை வருடிக் கொடுத்தது.
மெட்டை மெச்சிய கி.வா.ஜ., 'இரண்டாவது அடியிலிருந்து, நீங்கள் போடும் சந்தத்திற்கு எழுதுகிறேன்...' என்றார்.
நினைத்த மாத்திரத்தில் பாடக்கூடிய கவி, கி.வா.ஜ., அதனால், 'சிவனும் திருமாலும் நீயே' என்று துவங்கி சந்தத்துடன் சொந்தம் கொண்டாடிய வரிகளை அதிவேகமாக அளித்தார்.
நடன பைரவியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பாடலை, டி.எம்.எஸ்., - சுசிலா பாடினர். இது தவிர்த்து, அன்னை அபிராமி படத்தில், 'இல்லை என்பார் யாரடா...' மற்றும் 'மாகாளி மகமாயி சாமுண்டி...' என்ற இரு பாடல்களையும் எழுதியுள்ளார், கி.வா.ஜ.,
'அறிஞர் அண்ணாவின் உவமைகள்' நுாலிலிருந்து:
பாகிஸ்தான் முதலில் கேட்கப்பட்ட போது, 'அது கூடாது...' என்றனர், கம்யூனிஸ்ட்கள்.
பாகிஸ்தான் கிடைத்து விடும் என்றபோது, கூட்டம் போட்டு, ஜின்னாவின் திட்டத்தின்படி, முஸ்லிம்களுக்கு கொடுத்துவிட வேண்டியது தான் என்று அறிக்கை வெளியிட்டனர், கம்யூனிஸ்ட்கள்.
அதை, ஜின்னாவிடத்திலேயே கொடுத்து, 'பாகிஸ்தான் பிரிவினையை கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கின்றனரே, உங்கள் கருத்து என்ன...' என்று கேட்டனர்.
அந்த அறிக்கையை படித்து பார்த்து, 'இது தேவையான நேரத்தில் வந்திருந்தால், நன்றியை செலுத்தியிருப்பேன். நேரம் தவறி வருவதால், இதை நான் குப்பையில் எறிகிறேன்...' என்று சொல்லி, அதை துாக்கி எறிந்தார், பாக்., முன்னாள் பிரதமர், ஜின்னா.
க.நா.சுப்ரமண்யம் எழுதிய, 'இலக்கிய சாதனையாளர்கள்' நுாலிலிருந்து:
புதுமைப்பித்தனின் இயற்பெயர், சொ.விருத்தாசலம். புதுமைப்பித்தன் என்ற புனை பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமான பெயர்.
கதைகள் நன்றாக இருப்பதாக அவரிடம் சொல்லிவிட்டால், 'அப்படித்தான் இருக்கும். நீ யார் அதைச் சொல்ல...' என்று, சொன்னவனைக் கடிந்து கொள்வார்.
யாராவது புதிதாக எழுத விரும்பி, அவரிடம் வந்து சொன்னால், 'எழுதாதே தம்பி, எழுதாதே. எழுதி உருப்பட முடியாது. நான் உருப்படவில்லை பார். நீயும் எழுதினால் உருப்பட மாட்டாய் போ...' என்று, அதைரியப்படுத்தி அனுப்பி விடுவார்.
'கமலாமோஹினி' என்ற பத்திரிகை, அவருடைய புகைப்படத்தை அட்டைப் படமாக போடட்டுமா என்றபோது, 'என் மார்புக் கூடு எக்ஸ்ரே புகைப்படத்தை அனுப்பட்டுமா...' என, எழுதி அனுப்பினார்.
நடுத்தெரு நாராயணன்