அன்புள்ள அம்மா —
நான், 30 வயது இளைஞன். தோட்டக்கலை அதிகாரியாக பணியாற்றுகிறேன். எனக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. புள்ளியல் துறையில் உதவியாளராக பணிபுரிகிறாள், மனைவி.
அழகை ஆராதிக்கக் கூடியவன், நான். எனக்கு திருமணம் செய்து வைக்க, நிறைய வரன்கள் பார்த்தார், அம்மா. கேரளப் பெண்களின் நீள கூந்தல் மேல், எனக்கு ஒரு மயக்கம் உண்டு.
'எனக்கு மனைவியாக வருபவருக்கு, கருகருவென, 4 அடி நீள அடர் கூந்தல் இருக்க வேண்டும்...' என, அம்மாவிடம் ஒரே ஒரு நிபந்தனை விதித்தேன்.
பெரிய பெரிய பேரழகிகளுக்கு எல்லாம் எலி வால் கூந்தல் தான் இருந்தது. கூந்தல் பராமரிப்புக்காக தலைகேசத்தை குட்டை பண்ணியிருந்தனர், சில பெண்கள்.
நல்ல படிப்பு, பெரிய வேலை உள்ள சுந்தரமான பெண்களை கூட, 15 செ.மீ., கூந்தலுக்காக புறம் தள்ளினேன். ஏறக்குறைய ஒரு ஆண்டு, எங்கள் தேடுதல் வேட்டை நடந்தது.
கடைசியாக இவளை திருமணம் செய்து கொண்டேன். இவளது தலைகேசத்தை படுக்கையில் விரிக்க செய்து, அதில் முகம் புதைத்து படுத்தேன். கூந்தலின் நறுமணத்தை நுகர்ந்தேன். இரட்டை சடை, ஒற்றை சடை பின்னச் சொல்லி பார்த்து மகிழ்ந்தேன். கூந்தலின் நுனியில் பட்டுக்குஞ்சம் கட்டி, கூடைப்பூ வைத்து ரசித்தேன்.
எங்களுக்கு ஆறு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. மனைவிக்கு கொத்து கொத்தாய் முடி உதிர ஆரம்பித்தது. தலைக்கு போடும் எண்ணெய் மற்றும் ஷாம்புவை மாற்றியும் பயனில்லை. தலைகேசத்தை அழுத்தி வாராமல் மென்மையாக பூப்போல வாரச் சொன்னேன். அப்படி வாரியும் சீப்பு நிறைய தலைகேசம்.
பிரசவம் பார்த்த மருத்துவரிடம் காட்டினோம். தலைமுடி உதிர்வது சீக்கிரமே நின்றுவிடும் எனக்கூறி, சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.
முடி உதிர்தல் தொடர்ந்தது.
இப்போது நடு வகிட்டின் இருபுறம் முடி உதிர்ந்து, நீள்பட்டையாய் மண்டை தெரிகிறது. உச்சந்தலையில் வட்டமாய் முடி இல்லை; முடியின் நிறம் மாறி விட்டது. 4 அடி நீள கூந்தல் இப்போது, 10 செ.மீ.,க்கு குறுகி விட்டது. திடீரென்று முதுமை அடைந்தது போல காட்சியளிக்கிறாள், மனைவி. அவளின் பக்கத்தில் போகவே அசூயையாக இருக்கிறது.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி என, பலவும் முயற்சி செய்து விட்டோம்; பயனில்லை. இப்படியே போனால் இன்னும் ஆறே மாதத்தில் முழு வழுக்கை ஆகிவிடுவாள், என்று தோன்றுகிறது.
பெண்களுக்கு வழுக்கை விழும் என்பது, ஆச்சரியமாக உள்ளது. மனைவியுடன் குடும்பம் நடத்த மனம் ஒப்பவில்லை. அருவெறுப்பு பொங்க இவளுடன் தாம்பத்யம் செய்ய என்னால் இயலாது. இவளை விவாகரத்து செய்துவிட முடிவெடுத்திருக்கிறேன். என் முடிவை ஒட்டி நீங்கள் கூறும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்க தயாராய் இருக்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலையில் சராசரியாக, 1 - 1.5 லட்ச ரோமங்கள் முளைத்திருக்கும். ஒரு நாளைக்கு,
50 - 100 முடிகள் இயல்பாகவே உதிரும். தலைக்கு குளித்தால், 250 முடி வரை உதிர வாய்ப்பிருக்கிறது. இறந்து போன கெரட்டின் செல்களே, ரோமங்கள். மனிதர்களுக்கு பொதுவாக ஆண்டுக்கு, 15 செ.மீ., நீளத்துக்கு ரோமங்கள் வளரும்.
பெண்களுக்கு தலைமுடி உதிர கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கலாம்...
* ஹார்மோன் ஏற்ற இறக்கம்-
* மரபியல் காரணம்
* மன அழுத்தம், குழந்தை பிறப்பு மற்றும் தலை சார்ந்த, 'செபொர்ஹெக்' தோல் நோய்கள்
* வட்டப்புழு தொற்று
* கருத்தடை மாத்திரையை உட்கொள்தல்
* தைராய்டு, ரத்தசோகை, வைட்டமின் குறைபாடு மற்றும் கர்ப்பப்பை கட்டிகள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை தகர்க்கும் உடல்நிலைகள்
* தலை அலங்காரத்தின் போது நிகழும் முரட்டுத்தனமான செயல்பாடுகள்
* புரோட்டீன் குறைவு.
அமெரிக்காவில், ஆண்டுக்கு மூன்று கோடி பெண்கள், முடி உதிர்தல் பிரச்னையால் அவதியுறுகின்றனர்.
மகனே... உன் குழந்தையை, 10 மாதம் சுமந்து பெற்றதால் தான், மனைவிக்கு தலைமுடி உதிர்ந்துவிட்டது. உனக்கு தலைமுடி உதிர்ந்து, வழுக்கை விழுந்தால், விவாகரத்து செய்வாளா, உன் மனைவி?
பெரும்பாலும் உதிர்ந்த முடிகள் மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது.
தலைவார லேசர் சீப்பு பயன்படுத்தலாம். முடி மாற்று சிகிச்சை செய்யலாம்.
25 ஆண்டு உத்திரவாதம். 45 ஆயிரம் ரூபாய் செலவாகும். தலையில், 'விக்' பொருத்திக் கொள்ளலாம்.
கேவலம் முடிக்காக விவாகரத்து செய்வதா, மனைவியை உடலழகை மீறி, ஆத்மார்த்தமாய் நேசிக்க பழகு. வாழ்த்துக்கள்!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.