'இன்று வரை எனக்கு தலைவலி, காய்ச்சல் வந்ததே இல்லை. ஆஸ்பத்திரி பக்கம் போனதே இல்லை. அதற்கு காரணம், இயற்கை வழியிலான என் தேகப்பயிற்சி தான்...' என்கிறார், 96 வயது குஸ்தி பயில்வான், பழனி.
மதுரை, பழங்காநத்தத்தை சேர்ந்தவர், வி.கே.பழனி. மில் தொழிலாளியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
'கடந்த, 60 - 70 ஆண்டுகளுக்கு முன், இப்போது இருப்பது போல இயந்திரங்கள், எலக்ட்ரிக் சாதனங்களைக் கொண்டு உடற்பயிற்சி செய்யும், 'ஜிம்' என்ற கலாசாரம் கிடையாது. ஹோதா பள்ளி என்று சொல்லக் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தான் இருக்கும்.
'இந்த உடற்பயிற்சி கூடங்களில் தண்டால் எடுப்பது, கர்லாக்கட்டை சுற்றுவது, தண்ணீரில் மூச்சடக்குவது, தென்னை மரம் ஏறுவது, குஸ்தி மற்றும் மைதானத்தை மண்வெட்டியால் வெட்டி பதப்படுத்துவது என்று, திறந்தவெளியில், 50க்கும் மேற்பட்ட உடற்பயிற்சிகளை செய்வர்.
'எனக்கு சிறு வயது முதலே குஸ்தி போடுவதில் ஆர்வம் அதிகம். அப்போதெல்லாம், குஸ்தி பயில்வானுக்கு நிறைய மரியாதை உண்டு. ஆண்டு முழுவதும் எங்காவது குஸ்தி சண்டை நடந்து கொண்டே இருக்கும். மதுரையில் நடக்கும் குஸ்தியில் கலந்து கொள்ள, வடமாநில வீரர்கள் பலர் வருவர். அவர்களில் பலரை மண்ணைக் கவ்வ வைத்து, வெற்றி பெற்றுள்ளேன்.
'குஸ்தியை அனைவருக்கும் கற்றுத்தர வேண்டும் என்பதற்காக, கையில் இருந்த பணத்தை எல்லாம் போட்டு, மதுரை, பழங்காநத்தத்தில், 1956ல், தேகப்பயிற்சி கூடத்தை ஆரம்பித்தேன். இன்று வரை நன்றாக செயல்பட்டு வருகிறது.
'காலவெள்ளத்தில் குஸ்தி சண்டை போட்டி மதுரையை விட்டு மட்டுமல்ல, தமிழகத்தை விட்டே காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனால், வடமாநிலங்களில் மல்யுத்தம் என்ற பெயரில், இதே குஸ்தியை நவீனமாக விளையாடி, உலக அரங்கில் வெற்றி பெற்று வருகின்றனர்.
'இப்போதும் நான் குஸ்தி போடுகிறேன். விரும்புபவர்களுக்கு குஸ்தி சொல்லித் தருகிறேன். காலை, 5:00 மணியிலிருந்து குஸ்தி மைதானத்தில் தான் இருப்பேன். மைதானத்து மண்ணை பலமுறை வெட்டித் திருப்புவேன்; நுாற்றுக்கும் அதிகமாக தண்டால் போடுவேன்.
'என் தேகப்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இருக்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பேன். மாணவ - மாணவியருக்கு சிலம்பம் சுற்றுவது, சுருள் வீசுவது உள்ளிட்ட பயிற்சிகளும், யோகாவும் கற்றுத்தரப்படுகிறது.
'தற்போது, எனக்கு துணையாக, பேரன் ஜீவானந்தம் தேக பயிற்சி நிலையத்தை நடத்தி வருகிறான். போலீஸ் மற்றும் ராணுவத்தில் சேர விரும்புபவர்களுக்கு அவன் சிறப்பு பயிற்சி வழங்குகிறான், இங்கு பயிற்சி பெற்ற பலரும் தற்போது, போலீஸ் மற்றும் ராணுவத்தில் இருக்கின்றனர்.
'இயற்கை வழியில் உடற்பயிற்சி செய்யுங்கள். உடலும் மனதும், 100 ஆண்டுகளானாலும் உறுதியாக இருக்கும். அதற்கு நானே சாட்சி...' என்று, தன் புஜத்தை தட்டி பெருமையாக சொல்கிறார், பழனி.
மேலும், விபரத்திற்கு ஜீவானந்தத்தை தொடர்பு கொள்ள: 9342230247.
எல். முருகராஜ்