விமான நிலையத்தில், 'செக்கிங்' எல்லாம் முடிந்து, 'போர்டிங் பாஸ்' வாங்கி, விமானத்தில் ஏறி உட்கார்ந்து விட்டார், அப்துல்லா. அவருக்கு, இது கனவா, நினைவா என்ற குழப்பம் இருக்கதான் செய்தது. சீட்டில் வசதியாக சாய்ந்தபடி, இந்த பயணம் எப்படி அமைந்தது என்று நினைத்துப் பார்த்தார்.
வாழ்நாளில் ஒரு தடவையாவது, 'ஹஜ்' போனால் தான், ஒரு முஸ்லிம் ஆக, தன் கடமை நிறைவு பெறும் என்பதால், காசு சேர்க்க ஆரம்பித்திருந்தார், அப்துல்லா.
நடுத்தர குடும்பத்தில் மூத்த பையனாக பிறந்தவருக்கு, காசு சேர்ப்பது லேசுபட்ட காரியமா என்ன!
வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி, சீட்டு போட்டு, 50 ஆயிரம் ரூபாய் சேர்த்தார். அந்த நேரத்தில் அவரின் அம்மா கீழே விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக, 70 ஆயிரம் செலவாகி விட்டது.
சரி போகட்டும் என, அடுத்த முறை பணம் சேர்த்த போது, பையனுக்கு வேலை கிடைத்து, அந்த வேலைக்கு, 'டெபாசிட்' கட்டச் சொல்லியதால், அந்த பணமும் செலவாகியது.
இப்படி ஒவ்வொரு முறையும் பணம் சேர்ப்பதும், ஏதாவது ஒரு வகையில் அது செலவாகி விடுவதுமாக இருந்தது.
இந்த முறை சிரமப்பட்டு, 2 லட்சம் ரூபாய் சேர்த்து விட்டார். 'அமீனா, ஹஜ் டிராவல்ஸ்' நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் கூட எடுத்து விட்டார்.
ரம்ஜான் நோன்பு ஆரம்பித்து விட்டது. அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால், நோன்பு வைக்க வேண்டாம் என்று டாக்டர் சொல்லி இருந்தார். இருப்பினும், 'அல்லா கொடுத்த உயிரு... நோன்பு வச்சு, போவதாக இருந்தால் போகட்டுமே... அதுக்காக ஒரு இஸ்லாமியனாக என் கடமையில் இருந்து தவற முடியாது...' என்று, பிடிவாதமாக நோன்பு வைத்துக் கொண்டிருக்கிறார்.
இன்று, 27ம் நாள் நோன்பு. இரவு முழுக்க விழித்திருந்து தொழுகை நடத்த வேண்டும். இன்று, ஜக்காத் கொடுத்தால், ரொம்பவும் நல்லது. ஏழாவது வானத்தில் இருக்கும் இறைவன், இன்று வாசலியே காத்திருப்பார். இன்று வைக்கும் துவாவிற்கு, உடனே கபுல் செய்வார்.
சாயங்காலம் நோன்பு திறந்த பின், வந்து பணம் வாங்கிக் கொள்வதாக, டிராவல்சில் சொல்லி இருந்தனர்.
காலையில் எழும்போதே அவரது மனைவி பாத்திமா, 'இன்னைக்கு நம் கணேசன் ஆசாரி சின்ன மவ காயத்திரிக்கு கல்யாணம். பத்திரிகை கொடுக்கிறப்ப, 'கண்டிப்பா, கல்யாணத்துக்கு வரணும், வராம இருந்திடாதீங்க'ன்னு சொல்லிதான் கொடுத்தான். அந்தப் பிள்ளை காயத்திரி, சித்தி சித்தின்னு பாசமா இருக்கும். நாம போகாட்டா அந்தப் பிள்ள மனசு வாடிப் போயிடும். குளிச்சிட்டு சட்டுன்னு வாங்க, கல்யாணத்துக்கு போய்ட்டு வந்திடலாம்...' என்றாள்.
ஜாதி வெறியோ, மதத்துவேசமோ மக்களின் மனசில் மாசை கலக்காத கிராமம் அது. எல்லா மதத்தினரும், ஜாதியினரும் கலந்து தான் இருந்தனர். அனைவரும் ஒருவருக்கொருவர் உறவுமுறை சொல்லி பாசத்துடனே பழகினர்.
குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாவிட்டால், உடனே பள்ளிவாசலுக்கு துாக்கி போய் அஷ்ரத்திடம் ஓதி, தண்ணி எறிய சொல்லவோ, மந்திரித்த கயிற்றை வாங்கி பிள்ளைகள் கழுத்தில் கட்டவோ, ஹிந்துக்கள் யோசித்ததில்லை. அதோடு வயல்களில் அறுவடை நடக்கும் போது, அந்த ஆண்டு நோன்புக் கஞ்சிக்கு கொடுக்க வேண்டும் என்று நெல்லை தனியாக ஒதுக்கி வைத்து விடுவர்.
திருச்செந்துார், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு ஹிந்து மக்கள் பாத யாத்திரை போகும் போது, அவர்களுக்கு வழி நெடுக நீர் மோரும், பானகமும் கொடுக்க... முஸ்லிம்களும், நீர் மோர் பந்தல் அமைத்திருப்பர்.
அவர்களது ஊரில், அம்மன் கோவிலில் இடி விழுந்தபோது, அதை புதுப்பிக்க ஊரில் பணம் வசூல் பண்ணினர்.
பணம் குறைவாக இருந்ததால், கோவில் கமிட்டியினர் என்ன செய்வதென கையைப் பிசைந்த போது, 'கோவிலு கட்ட நாங்க உதவி பண்ணாட்டா, மாமா, மச்சான், சின்னையான்னு உறவு சொல்லி கூப்பிடுறது, ஏதோ பேருக்கு கூப்பிடுறது மாதிரி ஆயிடாதா...' என்று சொல்லி தேவையான பணத்தை கொடுத்து, கோவிலை கட்டி முடிக்க உதவியது, அங்குள்ள முஸ்லிம் மக்கள் தான்.
நோன்பு வச்சிருப்பதால், கல்யாணத்துக்கு போயி கை நனைக்க முடியாட்டியும் பரவாயில்லை, அந்தப் பிள்ளையை பார்த்து, அட்சதையாவது துாவிட்டு வரலாமென கிளம்பினர்.
மண்டபத்திற்குள் நுழையும்போதே, வரவேற்க யாரையும் காணவில்லை. உள்ளே பரபரப்பு; கல்யாணத்துக்கு வந்திருந்தவர்கள் ஒருவருக்கொருவர் குசுகுசுவென்று அமைதியான குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.
மணமகள் வீட்டார் கண்ணில் தெரிந்த அதிர்ச்சி. அதுவும் பெண்ணின் அப்பா கணேசன் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர், ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பதை அப்துல்லாவுக்கு உணர்த்தியது.
'என்னவாயிற்று... நிறைய பேர் தங்கள் காதலை பெத்தவங்ககிட்ட சொல்லப் பயந்து, கல்யாணத்தன்று, பிடித்தவரைக் கூட்டிக் கொண்டு ஓடுவது இப்போது, அடிக்கடி கேள்விப்படும் செய்தியாகி விட்டது. அந்த மாதிரி எதுவும் அசம்பாவிதம் நடந்து விட்டதோ...' என, நினைத்தார்.
கணேசன் ஆசாரியிடம் போனார், அப்துல்லா. அவர் கண் கலங்கி கொண்டிருந்ததை கண்டு, 'என்னடே... என்ன ஆச்சு... ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க?' என்றார்.
'என்னத்தைச் சொல்ல சின்னையா... கல்யாணத்துக்கு பணம் தாரேன்னு சொன்ன எங்க பெரியப்பா மவன் கடைசி நேரத்திலே, 'வரவேண்டிய பணம் வரலே... ஒரு வாரம் கழிச்சி தாரேன்'னு சொல்றான்...
'இங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, 'பேசினப்படி நகையும் போடலை... ரொக்கமும் கொடுக்கல... நகையும், ரொக்கமும் கொடுத்தாதான் ஒங்க பொண்ணு கழுத்துல, எம் பையன் தாலி கட்டுவான்... இல்லாட்டி நகையும், ரொக்கமும் வந்தப் பிறகு கல்யாணத்தை வச்சிக்கலாம்'ன்னு சொல்றாங்க... இப்ப போயி நான் யார்கிட்ட பணம் கேட்க முடியும். என்ன பண்ணறதுன்னு தெரியலையே சின்னையா...' என, கண்கலங்கினார்.
என்னதான் வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று வாய் கிழிய பேசினாலும், அழிக்க முடியாத அரக்கனாய் இருக்கத்தானே செய்கிறது என்று நினைத்தபடி, 'எவ்வளவுடே தேவைப்படுது?' என்றார்.
'ரெண்டு லட்சம் வேணும் சின்னையா... ஏதோ ஆயிரம், ரெண்டாயிரம்னா கூட பரவாயில்லை... யார்கிட்டாவது வாங்கிடலாம். ரெண்டு லட்சத்துக்கு எங்க போக... எம்பிள்ளைக்கு கல்யாணம் நின்னுட்டா, ராசியில்லாத பொண்ணுன்னு பேர் வந்திருமே... அப்புறம் யாரு கல்யாணம் பண்ணுவா... எம்பொண்ணு எப்படி இத தாங்குவா?' என்று, அவரது தோளில் சாய்ந்தப்படி கதறியழுதார், கணேசன்.
காயத்திரியின் முகத்தைப் பார்த்தார். கல்யாணம் நின்று போனால் நிச்சயம் எதாவது ஒரு விபரீத முடிவுக்கு வந்து விடுவாள் என்பதை, அவளது முகபாவமே உணர்த்தியது.
கொஞ்சம் கூட யோசிக்காமல், 'டேய் கணேசா... ஆக வேண்டிய வேலையை பாருடே... இதோ பணத்தை கொண்டு வாரேன்...' என்று கிளம்பினார்.
'இந்த வருஷம் இல்லாட்டி பரவாயில்லை... இன்ஷா அல்லா அடுத்த வருஷம், 'ஹஜ்' யாத்திரைக்கு போய்க்கிறது. ஆனா, ஒரு கன்னிப்பொண்ணு வாழ்க்கை வீணாயிட கூடாது...' என்று, டிராவல்சுக்கு கொடுக்க வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து கொடுத்து, காயத்திரியின் கழுத்தில் தாலி ஏறுவதை கண்கலங்க பார்த்து விட்டு கிளம்பினார், அப்துல்லா.
'ஹஜ் போக வைத்திருந்த பணத்தை, இன்று காயத்திரிக்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்பது, அல்லாவின் விருப்பம் போலிருக்கு...' என்று நினைத்தப்படி, வீட்டுக்குப் போய் படுத்தார்.
இரண்டு நாட்கள்
சென்று விட்டது. பிறை தெரிந்ததால், எல்லாரும் உற்சாகமாக புத்தாடை உடுத்தி, ரமலான் பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
பொழுது சாய ஆரம்பித்தது. அப்துல்லா வீட்டுக்கு வந்தான், கணேசன்.
'என்னடே கணேசன்... பொண்ணு மாப்பிள்ளை மறு வீடு வந்துட்டு போயிட்டாங்களா?'
'ஆமா சின்னையா... மறு வீட்டு பலகாரம் கொடுத்துட்டு, அப்படியே உங்களப் பார்த்துட்டு போலாமுன்னு வந்தேன்...'
'என்னடே விசேஷம்?'
'எங்க பெரியப்பா மவன், நேத்து பணம் தந்துட்டான். அதான் வாங்கியப் பணத்தைக் கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தேன்...'
'எலேய்... அது, அன்பளிப்பா கொடுத்த பணம்டா... திரும்ப வாங்கக் கூடாது. கல்யாணத்துக்கு நிறைய கடன் வாங்கியிருப்பே... ஏதாவது ஒரு கடனை அடைச்சிடு. மறு வீட்டு பலகாரத்தை மட்டும் தந்துட்டுப் போ...' என்றார்.
அரை மனதுடன் பணத்தை திரும்ப எடுத்து போனான், கணேசன்.
தன்னை படைத்த இறைவனுக்கு தனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று நினைத்தபடி, மகரிப் தொழுகைக்கு அழைக்கும் ஒலி கேட்கவும், பள்ளிவாசலை நோக்கி கிளம்பினார்.
தொழுகை முடிந்து வீட்டுக்கு வரும்போது, வீட்டில் முகம் தெரியாத நபர்கள் சிலர் உட்காந்திருந்தனர்.
பாத்திமாவின் முகத்தில் தெரிந்த சிரிப்பு, அவர்கள் வருகை ஏதோ சந்தோஷமான செய்தியை கொண்டு வந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.
'வாங்க பாய்... நாங்க அருணாசல நாடார் ஜவுளிக்கடையில் இருந்து வாரோம். எங்க கடை ஆரம்பிச்சு, 25 வருஷம் ஆனதை ஒட்டி, ஒவ்வொரு பண்டிகைக்கும் வாடிக்கையாளர்களுக்கு மெகா பரிசு கொடுக்க திட்டமிட்டிருந்தோம்.
'ரமலான் ஒட்டி பரிசு கொடுக்க, ராண்டமா தேர்வு பண்ணினப்ப, ஒங்க பெயர் தேர்வாகி இருக்கு. ஒரு நெக்லஸ் இல்லாட்டி மூணு லட்சம் ரூபா பணம்... உங்களுக்கு எது வேணுமோ அத தர்றோம்...' என்று சொல்ல, அப்துல்லாவிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
வழக்கமாக அபிராமி கடையில் தான் ஜவுளி எடுப்பர். இந்த தடவை அவுக மச்சான் இப்ராஹிம், ஜவுளி எடுக்கப் போன போது, இந்த கடைக்கு கூப்பிட அங்கு போயினர். 'கஸ்டமர் கார்டு' ஒன்று போட சொல்லவும், ஒரு கார்டும் புதுசா வாங்கினர். அதன் பலன் தான் இது.
அல்லா... 'ஹஜ்' யாத்திரை போக வேண்டும் என்ற துவாவுக்கு கபுல் பண்ணி விட்டதாக, சந்தோஷப்பட்டார்.
நினைவுகளை அசை போட்டப்படி இருக்க, விமானம் கிளம்பியது.
'அல்ஹம்துல்லில்லா...' என்று மனதிற்குள், அல்லாவுக்கு தன் சுக்ரியாவை சொல்ல ஆரம்பித்தார், அப்துல்லா.
எஸ். செல்வசுந்தரி