தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,
என் மகன் சிலருக்கு நன்றி சொல்ல விரும்புறான். அவன் சொல்லி முடிச்சதும் நான் பேசுறேன். பிரதாப்பு... நீ சொல்லுய்யா...
'இனி உன் வாழ்க்கையில எல்லாமே படிப்புதான்னு என்னை கஷ்டப்பட்டு பொறியியல் படிக்க வைக்கிற பெற்றோருக்கு, எனக்காக படிப்பை நிறுத்திட்டு குடும்ப பாரம் சுமக்குற சகோதரர்களுக்கு, 'பிரதாப்பின் உடல் ஊனம் 95 சதவீதம்'னு சான்றிதழ் வழங்கின மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு, செயற்கை கால்கள் பொருத்தி என்னை நடக்க வைச்சிருக்கிற சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர்களுக்கு... பெரும் நன்றி!'
அய்யா... இத்தனை நன்றிகளையும் என் மகன் எதனால சொல்றான்னு தெரியுமா; 2019 ஆகஸ்ட் 18ம் தேதி காலையில நல்ல மழை; பிளஸ் 2 படிச்சிட்டிருந்த என் மகன் எங்க வி.அரியலுார் கிராம குளத்துக்கு விவசாய நிலம் வழியா நடந்து போயிட்டு இருந்தப்போ, தாழ்வா தொங்கிட்டு இருந்த மின்கம்பி குடையில உரச பெரும் விபத்து. அதுல அவன் ரெண்டு காலும் போயிருச்சு!
இப்போவரைக்கும் அரசு நிவாரணம் இல்லை; ஆட்சியர் அலுவலகத்துல உதவி கேட்டாலும் பதில் இல்லை; 'தமிழன் தலை நிமிர்ந்து வாழணும்'னு சொல்றீங்களேய்யா... மாற்றுத்திறனாளியான என் மகனும் தமிழன்தான்.
- மின்வாரிய அலட்சியத்தால் கால்களை இழந்த மகனுக்காக நீதி கேட்கும் தாய் ரேவதி, கண்டமானடி, விழுப்புரம்.