'அம்மா...'
மகனின் இவ்வார்த்தை கேட்டு தாய்மையில் சிலிர்க்க ஐந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது பாபி என்கிற காளீஸ்வரிக்கு!
'ஒரு வயசுல ரிஷியோட இயல்புல மாற்றம் உணர்ந்து மருத்துவர்கிட்டே போனேன்; 'இது ஆட்டிசம்'னு அவர் சொன்னதை ஏத்துக்க முடியலை; உடைஞ்சு போய் வீட்டுக்குள்ளே முடங்கிட்டேன்; யாரையும் எதிர்கொள்ற தைரியம் இல்லை; ஆனா...' வார்த்தைக்கு தடை போட்டு பார்வையை மகனிடம் நிறுத்துகிறார்.
'நான் நல்லா அம்மாவா ரிஷி?'
'சூப்ப்பர்மா... ரொம்ம்ம்ப பிடிக்கும்' - மழலை மொழி பேசும் ராஜரிஷி கார்த்திக்கின் வயது 23.
என் மனைவி
வீட்லேயே முடங்கி கிடந்தவளுக்கு திடீர்னு என்ன தோணுச்சுன்னு தெரியலை; தனி ஆளா ரிஷியை அழைச்சுட்டு மருத்துவமனைக்குப் போனா; அவனை இயல்பானவனா மாத்துறதுக்கான எல்லா முயற்சிகளையும் எடுக்க ஆரம்பிச்சா; அவ இப்படி தனிச்சு தைரியமா இயங்க மகன் ஒரு காரணம்னா, போராட்ட குணம் முக்கிய காரணம்!
ரிஷியோட விரல் பிடிச்சு சூடான பாலை தொட வைச்சு, 'இது சூடு'ன்னு சொல்லிக் கொடுத்தா; தீ பக்கத்துல நிற்க வைச்சு, 'பக்கத்துல போகக் கூடாது'ன்னு புரிய வைச்சா; இந்த உலகத்தை ரிஷி உணர்றது அவ மூலமாத்தான்!
கலப்பு மணம் செய்து கொண்ட கோபி வெங்கடேசன் - காளீஸ்வரி தம்பதி வசிப்பது, சென்னை பள்ளிக்கரணையில்; 'சைபர் செக்யூரிட்டி' நிறுவனம் நடத்தும் இவர்களுக்கு பிளஸ் 2 பயிலும் ஒரு மகள்... ராதா ராகமாலிகா!
என் அம்மா
ரிஷிக்கு எல்லாமுமா இருக்குற அம்மா எனக்கு அப்படியில்லை; 'எல்லாத்தையும் நீயே தெரிஞ்சுக்கணும்' - இதுதான் அம்மா எனக்கு தந்த சிறகுகள்; அந்த சிறகுகளால இந்த ராதா அளக்கிற வானம் ரொம்ப பெருசு!
நான் கைக்குழந்தையா இருக்குறப்போ, 'தங்கச்சியை பார்த்துக்கோப்பா'ன்னு அம்மா சொன்னா துாக்கி கொஞ்சக் கூட அண்ணனுக்கு தெரியாதாம்; என்னை பார்த்துட்டே இருப்பானாம்! இன்னைக்கும் என்னை பார்த்துக்குறான்... ஆனா, அம்மா மாதிரி பார்த்துக்கிறான்; இதுக்கு காரணம்... என் அம்மா!
'ஆட்டிசம்' பாதிப்பு; இருப்பினும், சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்றவர் ரிஷி; 'கேண்டிடேட் மாஸ்டர்' பட்டம் கைவசம்; தன் 16 வயதில், உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுடன் போட்டியிட்டவர்; 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் வெல்லும் ஆசை கொண்டவர்!
இது எப்படி சாத்தியமாச்சு பாபி?
சின்ன வயசுல ஒருநாள் 'செஸ்' போட்டிகள் நடந்திட்டிருந்த இடத்துல ஆர்வமா போய் உட்கார்ந்தான். செஸ் பயிற்சிக்கு அனுப்பினேன். யார்கிட்டேயும் பழக தயங்கினவன் செஸ் பயிற்சியாளர்கள்கிட்டே இயல்பா பழகினான்; அவனுக்கான உலகம் விரிய ஆரம்பிச்சது.
சந்தோஷமா இருக்குறீங்களா ரிஷி?
அம்மா இருக்குறாங்கல்ல... நான் ஹேப்பி.