சித்தி, முக்தி, சன்னிதி! மகான்களை தேடி.... - ஈசான்ய ஞானதேசிகர்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2011
00:00

"பிரிட்டிஷ்காரரான ஐடனுக்கு, திருவண்ணாமலைன்னா ரொம்ப பக்தி. அங்க நடக்கற தேர்த் திருவிழா, தீபத் திருவிழான்னா கண்டிப்பா வந்துடுவார். எல்லாருமே அவரை வியந்து பாராட்டு வாங்க. "அண்ணாமாலையார்ட்ட இவருக்கு இருக்கற பக்தியைப் பாரு'ன்னு ஆச்சர்யப்படுவாங்க. ஒரு தடவை, தீபத் திருவிழாவுக்காக அவர் வந்துட்டிருந்தார். கார்த்திகை மாசம். மழைக்காலம் இல்லியா? வழில, நதியில வெள்ளம். இரண்டு கரையையும் தொட்டு ஓடிட்டிருக்கு. பரிசல் ஓட்டக்கூட யாரும் தயாரா இல்ல. ஜலத்தோட வேகமும், சுழலும் பயங்கரமாக இருக்கிறதைப் பார்த்து எல்லாருக்கும் பயம். ஐடனோட வந்தவங்க தயங்கி நின்னாங்க. ஆனா, குதிரைல வந்த ஐடன், வேகமா குதிரையோட தண்ணீரில் குதிச்சார்...'
கேசவானந்தர் தொடரும் முன்பு, மனோகரி குறுக்கிட்டாள்:
"கரைதொட்டு ஓடற வெள்ளம்னா, எவ்வளவு பயங்கரம்? எந்த நிமிஷமும் உடைப்பெடுக்கற நிலைல இருக்கும். அதுல குதிக்கறவங்க கதி என்னவாகும்? இது மூடத்தனம் இல்லியா? யோசிக்க வேணாமா? "இந்த ரிஸ்க் எடுத்தாவது, தீபத் திருவிழாவைப் பார்க்க வா'ன்னு சாமி சொல்லுமா என்ன?'
"உன்னோட கேள்வி ரொம்ப நியாயம். வெளில நம்பற மாதிரி நடிச்சு, மனசுல சந்தேகமா இருக்காம கேட்டது, அதைவிட சந்தோஷம். பக்திங்கறது, ஆழமான சலனமே இல்லாத, அழுத்தமான நம்பிக்கை. "சிவபிரானோட லிங்கத் திருமேனில இருந்த கண்ணுல இருந்து ரத்தம் வந்துது. உடனே, படித்தறியாத வேடன் திண்ணன், தன் கண்ணைப் பெயர்த்து அப்பினான்'னு படிச்சிருக்கே இல்லியா?'
"ஆமா, கண்ணப்ப நாயனார் கதை...'
"கதை இல்லே; சரித்திரம்! ஒருவேளை படிச்சிருந்தா, திண்ணனுக்கும் "கல்லுல இருந்து எப்படி ரத்தம் வரும்'னு கேள்வி வந்திருக்கலாம். அல்லது உள்ளே என்ன இருக்குன்னு உடைச்சுப் பார்க்க முயற்சி பண்ணிருக்கலாம். ஆனால், அந்த லிங்க சொரூபம் அவனை உருக்கியிருந்தது. அதை சிலாரூபமா பாக்கலை அவன். பகவானாகவே பார்த்தான். அந்த பாவம்தான் பக்தில ரொம்ப முக்கியம். அதனாலதான், கண்ல ரத்தம் வருதே, வலிக்குமேன்னு தவிச்சான். தன் கண்ணைப் பேத்து அப்பவும் துணிஞ்சான். தனக்கு வலிக்குமேன்னு கூடத் தோணலை. இந்தக் கரைதல்தான் பக்தி. தன்னை பகவானுக்கு உரிமையா நினைக்க மனசு ரொம்ப பக்குவப்படணும். அந்த நிலைலதான் இருந்தார் ஐடன். அதனால் தான், குதிரையோட அந்த வெள்ளத்துல குதிச்சார். கூட வந்தவங்க பின்வாங்கிட்டாங்க. "ஓ'ன்னு கத்தினாங்க. குதிச்சுக் காப்பாத்த வரலை.'
"எப்படி வருவாங்க? அவங்களுக்கும் உயிர்மேல ஆசை இருக்குமில்லையா?' சிரித்தபடியே சொன்னார் செல்வரத்தினம்.
"ஆமா... ஆனா, ஆத்துல குதிச்ச ஐடன், "குருநாதா காப்பாத்து'ன்னு கத்தினார். அதே சமயத்துல, திருவண்ணாமலை, ஈசான்ய திசைல வில்வமரத்துக்குக் கீழே தவத்துல இருந்த கந்தப்ப தேசிகர் கண் திறந்தார். தன்னோட, கையைக் கீழே இறக்கி, திரும்பவும் மேலே தூக்கினார். அவருக்குப் பக்கத்துல உட்கார்ந்திருந்தவங்க, ஆச்சர்யமா அவரைப் பார்த்தாங்க. அவர் என்ன செய்தார்? அதுக்கு என்ன அர்த்தம்னு புரியலை. அது மட்டுமல்ல; நிஷ்டைல இருந்து, அவ்வளவு சீக்கிரம் கண் விழிக்க மாட்டார். நாள்கணக்குல, வாரக்கணக்குல உட்கார்ந்த இடத்துல இருக்கிறவர். எப்ப அவர் கண் திறப்பார்; அவர் பார்வை எப்ப நம்ம மேல படும்னு நிறைய பேர் காத்திருப்பாங்க. அவங்க, கேட்டாங்க, "இப்ப பண்ணீங்களே, அதுக்கு என்ன அர்த்தம்'னு.'
கேசவானந்தரின் பேச்சில் நுழைந்தது நாராயணனின் கேள்வி.
"புலி காத்த சித்தர்'னு சொன்னது இவரைத்தானா? வேறு யாராவதா?
"இவரைத்தான். வெறும் கோவணத்தோட இருந்த இவருக்கு, போக்கிரிகளால அடிக்கடி தொந்தரவு இரந்தது. இவரைத் தாக்கறதும், காயப்படுத்தறதும் அவங்களுக்குப் பொழுதுபோக்கா இருந்தது. அந்தச் சமயத்துல, இரண்டு புலிகள் வந்தன. அவர்களைத் துரத்த ஆரம்பித்தன. இவர் பக்கத்துல எஸ்கார்ட் மாதிரி உட்கார்ந்து கொண்டன. தொந்தரவு தரக்கூடிய யார் வந்தாலும், கோவமா உறுமி விரட்டும். நல்லவர்கள் வந்தா குரல் கொடுக்கும். ஸ்வாமி கண் திறந்து சிரிப்பார். புலிகளைத் தடவிக் கொடுப்பார். "போங்க'ன்னு சொல்வார். அதுங்களும் சாதுவாப் போகும். அதனால், இவரைப் "புலி காத்த சித்தர்'னும் சொல்வாங்க.'
"சரி; ஸ்வாமி கையசைத்தது பத்தி என்ன சொன்னார்? அதைச் சொல்லுங்க,' என்று கீதா குறுக்கிட்டாள்.
"நம்ம அடியவர் வெள்ளத்துல விழுந்துட்டார்; நாம காப்பாத்தணுமாம்'னு சொன்னார், ஏதோ கடைல போய் சாமான் வாங்கற மாதிரி. மறுபடி தியானத்துல ஆழ்ந்துபோனார். கொஞ்ச நேரத்துல, ஐடன் குதிரைல வந்து இறங்கினார். நனைஞ்சு தொப்பலா இருந்த அவரையும், குதிரையையும் எல்லாரும் பார்த்தாங்க. அவர் வெள்ளத்துல குதிச்சதையும், கண்ணுக்குத் தெரியாத கை இழுத்துக் கரை சேர்த்ததையும் சொன்னார். ஸ்வாமிகளை விழுந்து வணங்கினார். எல்லாரும் பயமும், திகைப்புமா பார்த்தாங்க. அவர் கை அசைத்தது, நொடில முடிஞ்சுது. ஆனா, வெள்ளத்துல குதிரையோட குதிச்சவங்களை, சர்வ சாதாரணமா கரை சேர்த்த விஷயம் அதுன்னு புரிஞ்சுதால் உண்டான் திகைப்பு!
"நிஜமா இப்படில்லாம் செய்ய முடியும்? நீங்க என்ன நினைக்கறீங்க?'
செல்வரத்தினத்தின் கேள்வி எழுந்தது.
"நிஜம்மா முடியும். ஏன்? இதைவிடப் பெரிய விஷயத்தையெல்லாம் செய்ய முடியும். அதுக்கு உள்ளே ஒடுங்கணும்; "தான்'ங்கறது இல்லாம கரையணும். அந்தக் கரைதல் மிகச்சரியா நடந்துட்டா, சூட்சுமம் புரிஞ்சுடும்.'
"நீங்க சொல்றது புரியலை...'
"எது அனுபவமாக மாறணுமோ, அதைப் புரிய வைக்க முடியாது. ஆப்பிவோட டேஸ்டை வார்த்தைல சொன்னா உணர முடியுமா? சாப்பிட்டாத்தான் புரியும். அதுமாதிரி உணரவேண்டிய விஷயம் இது' என்ற கேசவானந்தர், தொடர்ந்தார்:
"குகை நமச்சிவாயர், குரு நமச்சியார், சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார்... இவங்க எல்லாருக்கும் முன்னால திருவண்ணாமலைக்கு வந்தவர்னு இவரைச் சொல்லலாம். திருவண்ணாமலையோட கிரிவலப் பாதைல இருக்கு இவரோட அதிஷ்டானம்.'
"கிரிவலப் பாதைலதான் அக்னி லிங்கம், வாயுலிங்கம், வருணலிங்கம், எமலிங்கம்னு... அஷ்டலிங்க சன்னதியும் இருக்கு.'
"அங்கயேவா இருக்கு. நான் பல தடவை வந்திருக்கேன். பார்த்ததே இல்லியே...' வியப்பாய்ச் சொன்னாள் உஷா.
"நீன்னு இல்லை. நிறையபேரு பார்த்தில்லை. கிரிவலம் போகும்போது கதை பேசறது; காதுல இயர் போனை மாட்டிக் கிட்டு பாட்டு கேட்கறது; கல்லை உதைச்சுக்கிட்டு நடக்கிறது... இப்படித்தான் போறாங்களே தவிர, மனசுல லயிப்பு இல்லை. திருவண்ணாமலை சூட்சுமமான இடம்! அந்த இடத்தோட அதிர்வு விசேஷம். அதை உணரணும்னா, உள்ளே ஒடுங்கினா புரியும். அப்படி ஒடுங்கணும்னா, முதல்ல பேச்சு குறையணும்' என்ற கேசவானந்தர் தொடர்ந்தார்.
"குகை நமச்சிவாயர், ரமணாஸ்ரமம், சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம் எல்லாம் கிரிவலப் பாதைலதான் இருக்கு.'
"இந்தக் குø“ நமச்சிவாயரோட சீடர் தானே குரு நமச்சிவாயர்னு சொல்வாங்க?' செல்வரத்தினம் கேள்வி எழுப்பினார்.
"ஆமா. திருவண்ணாமலைல இருந்தபடியே, திருவாரூர் உற்சவத்துல நடனம் ஆடின பெண் விழுந்ததைப் பார்த்து சிரிச்சார்; சிதம்பர் நடராஜர் சன்னிதி திரைச்சீலை தீப்பிடிச்சதை அணைச்சார். சீடனோட பக்குவம் புரிஞ்சுது குருவுக்கு. நீ இங்கேர்ந்து கிளம்புனு அனுப்பினார். அப்படிக் கிளம்பின குரு நமச்சிவாயர் சிதம்பரத்துக்கு வந்தார். அங்கேயே சன்னிதி கொண்டார்' என்ற கேசவானந்தர் தொடர்ந்தார்;
"கிரிவலப் பாதைல வடகிழக்குப் பகுதில, ஈசான்ய லிங்கம் இருக்கு. அதுக்குப் பக்கத்துல ஒரு குளம் இருக்கு. அங்க, ஒரு வில்வ மரத்துக்குக் கீழேதான் தவத்துல இருந்தார் கந்தப்ப தேசிகர். ஈசான ஞானதேசிகர்னு இவரைச் சொல்வாங்க, ஈசான்ய மடம்னு இன்னிக்குச் சொல்றாங்க.'
சொல்லிக்கொண்டிருக்கும்போதே வேன், திருவண்ணாமலையை அடைந்தது. அண்ணாமலையார், அபிதகுஜலாம்பாள்... என்று சன்னிதிதோறும் வணங்கினார்கள். அருணகிரி நாதரை நினைத்தார்கள்; வல்லாள மகராஜனுக்காக அண்ணாமலையார் ஆண்டுதோறும் திதி கொடுப்பதை அறிந்து வியந்தார்கள். கிரிவலப் பாதையில் நடந்தார்கள்.
"முன்னால கரடுமுரடா இருந்த பாதை இது. பல இடங்கள்ல லைட்டே இருக்காது,' சொல்லிக்கொண்டே வந்தார் செல்வரத்தினம்.
"கிரிவலம் ரொம்ப விசேஷம். கோயிலுக்குள்ள அருணாசலேஸ்வரரா இருக்காரே, அவர்தான் அருணாசலமா இருக்கார். அவர்தான் சுத்தி இருக்கற அஷ்டலிங்கமா இருக்கார். அவரை தரிசிக்க வர அத்தனை பேராவும் இருக்கார். அப்படிப் புரிஞ்சு சுத்தி வந்தா, கிரிவலம் இன்னமும் விசேஷம்...' சொன்னபடியே நடந்தார் கேசவானந்தர். மௌனமாக நடந்தார்கள்.
ஈசான்ய லிங்கத்தை அடுத்திருந்த குளக்கரையில் அமைந்திருக்கிறது ஈசான்ய மடம். உள்ளே ஸ்வாமிகளின் அதிஷ்டானம்.
"அக்னித்தலமான திருவண்ணாமலை, இந்தத் தவாக்னியைத் தான் உணர்த்துகிறதோ? அப்படிப்பட்டவர்கள்தான் இங்கே இடம்பெற முடியும் என்று சொல்கிறதோ? அல்லது உள்ளே இருக்கும் ஆத்மாவின் உறக்கத்தை விலக்கி, வெளிச்ச தரிசனத்தை அளிக்கிறதோ' என்றெல்லாம் எண்ணங்கள் நீண்டன. கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்கள். சற்று நேரம் கழித்து எழுந்த கேசவானந்தர் சொன்னார்.
"இவருக்கு ஒரு பக்தர். நல்ல செல்வந்தர். சொந்த பந்தம் இல்லை. தன் சொத்துக்களை வித்து, இவர்ட்ட கொண்டு வந்து கொடுத்துடணும்னு அவருக்கு ஆசை. ஸ்வாமிகள்கிட்ட அதைச் சொன்னார். வேண்டாம்னு மறுத்துட்டார் ஸ்வாமிகள். பலதடவை சொல்லியும் ஸ்வாமி கேட்கலைன்ன உடனே, "ஊருக்கு போய் எல்லாத்தையும் வித்து தங்கமா கொண்டு வந்து இவர்ட்ட போட்டுடுவோம். அப்ப என்ன பண்றார்னு பார்ப்போம்'னு நினைச்சு கிளம்பினார். அப்ப ஸ்வாமி சொன்னார்: "இந்த எண்ணம் வேண்டாம். அப்படிப் போனா, நீ திரும்ப இங்கே வரமுடியாது'ன்னார். அதே மாதிரி ஆயிடுச்சு.'
"ஏன்? என்ன ஆச்சு அவருக்கு?' வேகமாய்க் கேட்டாள் மனோகரி.
"சொத்தையெல்லாம் வித்து தங்கமா மாத்தி மாட்டு வண்டில கொண்டு வந்திட்டிருந்தார். வழில ஒரு இடத்துல, வண்டி குடை சாஞ்சு பள்ளத்துல விழுந்துது. எந்தத் தங்கத்தை எடுத்துட்டு வந்தாரோ, அதோடயே அவரும் போய்ட்டார்.'
"அடப்பாவமே, குரு வார்த்தையை மீறக் கூடாதுங்கறது ஏன்னு புரியுது இப்ப' என்றார் நாராயணன்.
"ஆமா..."குருவையே தெய்வமா, யார் கொண்டாடுறாங்களோ, யாருக்கு குரு பக்தியும், தெய்வ பக்தியும் சிறப்பா இருக்கோ, அவங்களுக்குப் பெரிய தத்துவங்களோட அர்த்தம், சொல்லாமலே புரியும்'னு சொல்லுது ஸ்வேதாஸ்வதர உபநிஷத்.'

ஸ்ரீநிவாச ராகவன்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X