பா - கே
அலுவலகத்தில், மதிய உணவு இடைவேளை... மேஜையை சுற்றி அமர்ந்து, அரட்டை அடித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், உதவி ஆசிரியைகள்.
'மணி... சாப்பிட வா...' என்று அழைத்தார், ஒரு உதவி ஆசிரியை.
'லென்ஸ் மாமா இப்ப வந்துடுவார்; வந்ததும் சாப்பிட வேண்டியது தான்...' என்றேன், நான்.
பேச்சினிடையே, ஒரு உ.ஆ., தன் தோழியிடம், 'டீ... பொறுப்பாசிரியர், உனக்கு ஒரு பட்டப் பெயர் வைத்துள்ளார்...' என்றார்.
உடனே, 'அப்படியா... இத்தனை வருஷமா வேலை செய்யறேன். இன்னும் பட்டப் பெயர் வைக்கலையேன்னு நினைச்சுட்டு இருந்தேன். வைச்சுட்டாங்களா... வைச்சுட்டாங்களா...' என்று வடிவேல் ஸ்டைலில் சந்தோஷமாக கூச்சலிட்டார், அந்த உ.ஆ.,
அப்போது தான் உள்ளே நுழைந்த லென்ஸ் மாமா, 'ஏம்மா... பட்டப் பெயர் வெச்சதுக்கா இவ்ளோ சந்தோஷம்...' என்றார்.
'இருக்காதா பின்னே... பள்ளியில் படிக்கும்போது, என் சுறுசுறுப்பை பார்த்துட்டு, 'தேனீ'ன்னு பேர் வைச்சாங்க, என் வகுப்பாசிரியை சுலோச்சனா மிஸ். ஆனால், வீட்டில், 'ஊருக்கு இரும்பு இடிக்கிறே... வீட்டுல தவிடு இடிக்க முடியலையே'ன்னு திட்டுவாங்க.
'அதன்பின், கல்லுாரியில் படிக்கும்போது, கடினமான ஆங்கில வார்த்தைகளுக்கு, அர்த்தம் கேட்பார், பேராசிரியர். உடனடியாக, நுாலகத்துக்கு சென்று, 'டிக் ஷனரி'யை பார்த்து, அர்த்தம் கண்டுபிடித்து வந்து சொல்லி விடுவேன். அதுக்காக, 'நடமாடும் டிக் ஷனரி' என்று, பெயர் சூட்டி விட்டார், மாலினி மேடம்.
'படித்து முடித்ததும், ஒரு நிறுவனத்தில், 'அப்ரன்டீஸ்' ஆக சேர்ந்தேன். எனக்கு கொடுத்த வேலையை செம்மையாக செய்ததால், 'பர்பெக் ஷனிஸ்ட்' என்று, பெயர் வாங்கினேன்.
'இங்கு வந்து இவ்வளவு வருஷமாச்சே... எங்களை பொதுவாக, 'ராட்சசிகள்' என்று தான் நீங்க குறிப்பிடுவீங்க. தனிப்பட்ட முறையில், தனியாக பட்டப் பெயர் இல்லையே என்று ஏங்கிட்டு இருந்தேன். இப்ப அது நிறைவேறிடுச்சு...' என்று கூறி, 'சரி... என்ன பேர் வைத்துள்ளார்...' என்று கேட்டார், அந்த உ.ஆ.,
'பொறுப்பாசிரியர் வரும்போது, நீ அவசர அவசரமா நாற்காலியிலிருந்து எழுந்து, ஒரு கும்பிடு போட்டுட்டு, உட்கார்ந்துடுவியாம். அதனால், 'அரை கும்பிடு அரக்கி' என்று, பேர் வைத்து விட்டார்...' என்று கூறியதும், வெடி சிரிப்பு எழுந்தது.
'அது சரி... நீ ஏன் எப்பப் பாரு பரபரன்னு இருக்கிற...' என்று கேட்டார், லென்ஸ் மாமா.
'அதுவா... காலையில் எழுந்தது முதல் அலுவலகம் வரும் வரை, அவசர அவசரமாக வேலை செய்துட்டு வருவேன். அலுவலகத்திற்குள் நுழைந்து, கைரேகை பதிவு செய்துட்டு, 'சீட்டில்' அமர்ந்த பின்தான், 'அப்பாடா சரியான நேரத்துக்கு வந்துட்டோம்' என்று நிம்மதி பிறக்கும். அந்த பழக்கமே, இப்ப என் இயல்பாக மாறிடுச்சுன்னு நினைக்கிறேன்.
'மணி... உனக்கு நான் மிகப்பெரிய நன்றி சொல்லணும். நீ உள்ளே வந்ததும், செக்யூரிட்டி முதல், சகலமானவர்களுக்கும் வணக்கம் சொல்லிட்டு வருவதை பார்த்துள்ளேன்.
'அந்த பண்பாட்டை நானும் பின்பற்றி, வீட்டை விட்டு கிளம்பியது முதல், எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தெரு முனையில் இருக்கும் பூக்காரம்மா, மின்சார ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், 'டிக்கெட் செக்கிங்' பெண், மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் அலுவலகம் வரும் வழியில் உள்ள, 'போலீஸ் பூத்' போக்குவரத்து பெண் கான்ஸ்டபிள் என, சகலருக்கும் கை மற்றும் கண் அசைவின் மூலம், காலை வணக்கம் சொல்லி விடுவேன்.
'இந்த சின்ன விஷயம், பல, ஸ்பெஷல் சலுகைகளை எனக்கு பெற்றுத் தந்துள்ளது. இதற்கெல்லாம் மணி, நீ தான் காரணம்...' என்றார், அந்த உ.ஆ.,
அப்போது இடையில் புகுந்த சீனியர் செய்தியாளர் ஒருவர், 'அம்மாடி... நீ சொல்வது சரிதான். சின்ன விஷயம், ஒரு உயிரையே காப்பாற்றியுள்ளது தெரியுமா? உண்மையில் நடந்த நிகழ்வு அது...' என்று, சொல்ல ஆரம்பித்தார்:
இறைச்சி பதப்படுத்தப்படும் தொழிற்சாலை அது. அதில், முக்கிய பொறுப்பில் இருப்பவர், ஒருநாள் மாலை, இறைச்சியை பதப்படுத்த அமைக்கப்பட்டுள்ள, 'ப்ரீசர்' அறைக்குள் நுழைந்தார். அங்கே ஏதோ சோதனை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக அறையின் தானியங்கி கதவு மூடிக் கொண்டது; அவர், உள்ளே மாட்டிக் கொண்டார்.
யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று, மொபைல் போனை தேடியபோது, அதை தன் மேஜை மீதே வைத்துவிட்டு வந்தது நினைவு வந்தது. இப்போது என்ன செய்வது என்ற பயம் வந்து விட்டது. கத்திக் கூச்சலிட்டார். முடிந்தவரை, கதவை பலமாக தட்டி, உதவிக்கு அழைத்தார்.
ஒரு பயனும் இல்லை.
வெளியே யாருக்குமே அவர் எழுப்பிய ஓசை கேட்கவே இல்லை. ஐஸ் கட்டிகளின் குளிர் மிகப் பயங்கரமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் கை, கால்கள் மரத்துப் போயின. குரல் எழுப்பக்கூட வலுவின்றி சோர்ந்து போனார்.
இப்படியே இன்னும் சில நிமிடங்கள் நீடித்தால், தான் இறக்கப் போவது உறுதி என்ற பயம் அவருக்கு எழுந்தது.
மனம் தளர்ந்து, மயங்கி விழப்போகிற நிலையில், திடீரென்று கதவு திறப்பது போல சத்தம் கேட்டது. மகிழ்ச்சி துளிர்விட பார்த்தபோது, கதவை திறந்தபடி, 'சார்... சார்...' என்று குரல் கொடுத்தபடியே, உள்ளே வந்தார், காவலாளி.
சாக இருந்தவனைக் காப்பாற்றிய அந்த காவலாளியை கட்டி அணைத்தார், அதிகாரி. பின்னர், அவரிடம், 'நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்...' என்று, கேட்டார்.
'சார்... ரொம்ப வருஷமா இந்த பேக்டரியில் வேலை பார்த்து வர்றேன். என்னை யாரும் மனுஷனாவே மதிக்கறதில்லை. வணக்கம் சொன்னாலும், பதிலுக்கு சொல்றதே இல்ல. ஆனா, நீங்க மட்டும் தான் காலைலயும், சாயங்காலமும் நான், 'சல்யூட்' அடிச்சா, பதிலுக்கு திருப்பி வணக்கம் சொல்வீங்க. அதனால, உங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
'இன்னிக்கு காலைல, நீங்க வணக்கம் சொன்னீங்க. சாயங்காலம் எல்லாரும் திரும்பிப் போயிட்டாங்க. ஆனா, பதிலுக்கு வணக்கம் சொல்ற உங்கள மட்டும் காணோம். அதனால, சந்தேகம் வந்துச்சு. ஒவ்வொரு இடமா உங்களைத் தேடினேன். அப்பத்தான் உங்களைக் கண்டுபிடிச்சேன்...' என்றார், காவலாளி.
- இவ்வாறு கூறி முடித்தார், சீனியர்.
'அப்படியா சங்கதி... இனி நானும் அரை கும்பிடு இல்லாமல், முழு கும்பிடு போட்டு, 'முழு கும்பிடு முத்தம்மா...' என்று பேர் வாங்குகிறேனா இல்லையா பாரு...' என்று, அந்த உ.ஆ., கூறியதும், மேஜையை தட்டி, ஆரவாரித்தனர் மற்ற உ.ஆ.,கள்.