கவியரசு கண்ணதாசன் எழுதிய, 'வனவாசம்' நுால் வெளியீட்டு விழா, காமராஜர் தலைமையில் நடந்தது.
விழாவில், கண்ணதாசன் பேசும்போது, 'ஆங்கிலச் சொற்கள் பலவற்றிற்கு இணையாகத் தமிழ்ச் சொற்கள் உள்ளன. ஆனால், 'இன்டலெக்சுவல் அரகன்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை யாரும் இன்னும் உருவாக்கவில்லை...' என்றார்.
அப்போது, காமராஜர், 'இது என்ன பெரிய விஷயம். நீ சொன்ன ஆங்கிலச் சொல்லுக்கு, அதிகப்பிரசங்கித்தனம் என்று பொருள்...' என்றார்.
அது சரியான பொருள் தான் என்பதை உணர்ந்த, அங்கு கூடியிருந்த அறிஞர் பெருமக்கள், அந்தப் படிக்காத மேதையின் அறிவுதிறமையைக் கண்டு, அசந்து போயினர்.
பெர்னாட்ஷாவை சந்திக்க வந்தனர், இரண்டு பேர். அவர்களில் ஒருவர், பெர்னாட்ஷாவிடம், 'ஐயா... எங்களுக்குள் ஒரு விவாதம். அதற்கு, தாங்கள் தான் முடிவு சொல்ல வேண்டும்...' என்றார்.
'என்ன விவாதம்...' என்று கேட்டார், பெர்னாட்ஷா.
'நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான். இவன், உங்களைப் போக்கிரி என்கிறான். இந்த இரண்டில் எது உண்மை...' என்றார், அவர்.
அதைக் கேட்டு சிரித்த பெர்னாட்ஷா, அவர்கள் இருவரையும் தம் இரண்டு கைகளால் இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டு, 'இப்போது நான், இருவருக்கும் இடையில் இருக்கிறேன் என்பதே உண்மை...' என்றார்.
அவரைக் கிண்டல் செய்ய முயன்ற அந்த இருவரின் முகமும் தொங்கிப் போனது.
கிராமத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்றினார், தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன்.
அழகிய தமிழில் அவர் ஆற்றிய சொற்பொழிவில் மயங்கிய அந்த கிராமத்து மக்கள், 'ஐயன்மீர்... தாங்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் கிராமத்துக்கு வந்து, இலக்கியச் சொற்பொழிவாற்றி எங்களை மகிழ்விக்க வேண்டும்...' என்றனர்.
'வரும்படி இருந்தால், நிச்சயம் உங்கள் ஊருக்கு வருவேன்...' என்றார், கி.வா.ஜ.,
'வரும்படி' என்றால், 'வரவேண்டிய அவசியம் ஏற்பட்டால் வருவேன்...' என்றும், 'வருமானம் இருந்தால் வருவேன்...' என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
அவரது சிலேடைப் பேச்சை அனைவரும் ரசித்து, மகிழ்ந்தனர்.
'போர்ட் மோட்டார் கம்பெனி'யை நிறுவி, கார்களை உற்பத்தி செய்து, மிகப்பெரும் கோடீஸ்வரரானார், ஹென்றி போர்டு.
ஒரு சமயம், அமெரிக்க இளைஞன் ஒருவன், இவரை சந்தித்து, 'ஐயா... தங்களிடம் இவ்வளவு செல்வம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், என்னிடம் தான் எதுவும் இல்லை. இவ்வளவு செல்வத்தை என்னால் சம்பாதிக்க முடியும் என்று தோன்றவில்லை. எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது...' என்றான்.
அவனை உற்று நோக்கிய, ஹென்றி போர்ட், மெல்ல முறுவலித்து, 'தம்பி... என்னால் சம்பாதிக்கவே முடியாத விலை மதிப்பற்ற பொருள் ஒன்று, உன்னிடம் இருக்கிறது; அது தான் உன் இளமை.
'இந்த இளமை மட்டும் எனக்கு கிடைக்குமானால், அதை வைத்து
இதைவிடப் பல மடங்கு செல்வத்தை என்னால் சம்பாதிக்க முடியும். உன் இளமையை மட்டும் எனக்கு கொடுக்க முடியுமா சொல். நான் இப்போதே என் கோடிக்கணக்கான சொத்துக்களையும் உன் பெயருக்கே எழுதி வைத்து விடுகிறேன்...' என்றார்.
தன் இளமையின் மதிப்பை உணர்ந்த அந்த இளைஞன், புத்துணர்வுடன் ஹென்றி போர்டிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.
நடுத்தெரு நாராயணன்