அன்புள்ள சகோதரிக்கு —
நான், 70 வயது கடந்த ஆண். என் மன வேதனைகளுக்கு ஆறுதல் தேடி, கடிதம் எழுதுகிறேன். மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலும், அப்பா - அம்மா என்னை நன்கு படிக்க வைத்தனர். 20 வயதில், அரசு வேலையில் சேர்ந்தேன். பெற்றோர், மூன்று சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் அனைவரிடமும் பாசத்தை கொட்டினேன்.
எல்லாருடைய தேவைகளையும், அப்பா - அம்மா சார்பில் நிறைவாக செய்தேன். இந்த வருமானம் போதாது என்று நினைத்து, அரசு வேலையை விட்டு, வணிகத்தில் ஈடுபட்டு நிறைய சம்பாதித்தேன். எங்களது குடும்பத்தை சுயநலம் பாராமல், சக்திக்கும் மீறி, பல லட்சங்கள் செலவழித்து, அனைவருக்கும் வேண்டியதை மிகவும் தாராளமாக செய்தேன். இவ்வளவு செய்தும், யாரிடமும் என் மீது பற்றுதலே இல்லை.
என் குடும்பத்தில், மனைவி மற்றும் மூன்று மகள் என, நான்கு பேரையும் காலம் முழுவதும் கோபுரத்தில் ஏற்றி வைத்து, அழகு பார்த்து வந்தேன். மூன்று மகள்களுக்கும் மிகவும் சிறப்பாக திருமணமும் செய்து வைத்தேன்.
எங்கள் குடும்பம் வேறு, மனைவியின் குடும்பம் வேறு என்று, என்றுமே பிரித்துப் பார்த்ததில்லை.
என் திருமண நாளிலிருந்தே தாங்கள் மிக உயர்ந்தவர்கள் போலவும், நானும், என்னைச் சேர்ந்தவர்களும் மிகவும் தரம் தாழ்ந்தவர்கள் போலவும் மோசமாக நடந்து கொண்டனர், மனைவியின் குடும்பத்தார். எண்ணற்ற முறைகேடுகளை திட்டமிட்டு செய்தனர். போகப் போக சரியாகி விடும் என்று நினைத்தேன்.
அவர்களது குடும்பத்தின் நல்லது, கெட்டது அனைத்துக்கும் சென்றிருக்கிறேன். எங்களது குடும்ப நல்லது, கெட்டது எதற்குமே அவர்கள் வந்ததில்லை. என் மனைவிக்கோ, நான், அவளை எவ்வளவு உயர்வாக வைத்திருந்தாலும், பிறந்த வீட்டினர் மீது தான் வெறித்தனமான பற்று, இன்று வரை இருக்கிறது.
திருமணமாகி, 45 ஆண்டுகளாக பொறுமையுடன் நான் இருந்தது தவறு என்று, காலங்கடந்து உணர்கிறேன். இப்போது, பொறுமையாக இருக்க முடியவில்லை. என் வருத்தம், குடும்பத்தின் மீது மட்டும் தான்.
வஞ்சக எண்ணம் கொண்ட குடும்பத்தாரின் துர்போதனை பேச்சைக் கேட்டு, மனைவியும், மூன்று மகள்களும் என்னை முற்றிலும் உதாசீனப்படுத்துகின்றனர். மகள்களது கணவர்களின் மனதையும் மாற்றி விட்டனர்.
இரண்டாவது மகளின் கணவன் செய்த மிகப்பெரிய பண மோசடி மற்றும் துரோகம் அளவிட முடியாதது. தட்டிக்கேட்க யாருமில்லை. மனைவி, மூன்று மகள் உட்பட, கார், பங்களா என்று வாழ்ந்த என்னை, நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான்.
மனைவி உட்பட யாருடைய ஆதரவும், இப்போது எனக்கு இல்லை. மனைவியின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. ஆரம்பத்தில் இதையெல்லாம் புரிந்து செயல்படும் பக்குவம் எனக்கில்லை.
ஆழமான இறை நம்பிக்கையுடைய எனக்கு, நாத்திக உணர்வு மிகவும் வலுக்கிறது. நான் மட்டும் முதியோர் இல்லம் சென்று விடலாமா என்றும் யோசிக்கிறேன். ஆனால், இன்னும் நிறைய லட்சியங்களும், இவர்கள் முன் என்னை நிரூபிக்க வேண்டும் என்றும் மனம் தவிக்கிறது.
எனக்கு ஆதரவாக இரண்டு வார்த்தை சொல்வீர்களா. ஆதரவே இல்லாத மனம் ஏங்குகிறது.
— இப்படிக்கு,
தங்களன்புள்ள அண்ணன்.
அன்பு சகோதரருக்கு —
எழுபது வயதான உங்களுக்கு, உறவுகள் எட்டிக்காயாய் கசக்கின்றன. உங்களை ஏமாற்றி, துரோகம் செய்தோர் பட்டியல் அனுமன் வால் போல் நீள்கிறது. உங்கள் புறத்தோற்றம், நடை உடை பாவனைகள், எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை, காயப்படுத்தும் பேச்சு, தடாலடி செயல்பாடுகள் போன்றவை, உங்களுக்கும், உங்கள் உறவுகளுக்கும் இடையே அகழி தோண்டி, நான்கைந்து முதலைகளை விட்டு வைத்துள்ளன.
கசப்பான அனுபவங்களை சேதாரமில்லாமல் லாவகமாக தாண்டி வந்த பின், புன்முறுவலுடன் அசை போட பழகிக் கொள்ள வேண்டும். விலங்கிலிருந்து மனிதராய் வந்தோம். அடுத்து மனிதநேயத்தின் உச்சத்தால், தெய்வீக நிலை அடைவோம்.
உங்கள் இயலாமைக்கு, இறைவன் மீது பழி போடாதீர்கள். குடும்ப நலனைத் தாண்டி, என்ன புதிய லட்சியங்களை கைக்கொள்ள போகிறீர்கள்? ஒரு கழுதைப்புலி, தன் அந்திம காலத்தில் தன்னை ஒரு யானையாக நிரூபிக்க முடியுமா?
முதியோர் இல்லத்துக்கு நீங்கள் போனால் இரண்டு ஆண்டுகள் கழித்து, 'இல்ல நிர்வாகி என்னை பயங்கரமாக ஏமாற்றி விட்டார்...' என, குற்றப்பத்திரிகை வாசிப்பீர்கள்.
சகோதர - சகோதரிகளுடனான உறவை முறித்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தாரோடு உயர்ச்சி தாழ்ச்சி மனோபாவம் வராமல் பேசுங்கள். மனைவி, மகள்கள் மற்றும் மருமகன்களுடன் இனிய முகம் காட்டி உறவு பாராட்டுங்கள்.
மேலும், 45 ஆண்டு தாம்பத்யம் செய்த மனைவியை, அற்ப காரணங்களுக்காக பிரியாதீர்கள். எல்லாம் கடந்து போகும் என்ற தத்துவார்த்தத்துடன் வாழ்க்கையை அணுகுங்கள். மீதி வாழ்நாளில், உறவுகளை உள்ளும், புறமும் ஆராயாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
வாரா வாரம் கோவிலுக்கு போங்கள்; இசை கேளுங்கள்; உலக நடப்புகளில் தாமரை இலை தண்ணீராக இருங்கள்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.