இரவு, 2:00 மணிக்கு விமானம். கடைசியாக ஒருமுறை பெட்டியைச் சரிபார்த்தாள், அனு.
''எடை சரியா இருக்காம்மா... இரண்டு வருஷத்துக்கு பிறகு இந்தியா கிளம்பற உன் முகத்தில் சந்தோஷமே இல்லையேம்மா,'' கேட்டபடி வந்தாள், மகள் தீபூ. மகளுக்குத் தெரியாமல் கண்களில் வழியும் நீரை துடைத்தவள், ''அப்படியெல்லாம் இல்லை, தீபூ.''
ஆதரவாக அம்மாவின் தோளில் கை போட்டு, ''எனக்கு தெரியும்மா, உன் அம்மாவைப் பார்க்கப் போற... ஆனால், அவங்க இப்ப யாரையும் அடையாளம் தெரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. 'அல்சீமர்' மறதி நோய். தன்னையே யார் என்று தெரியாத மனநிலையில் இருக்காங்க...
''இதை எப்படி எதிர்கொள்ள போறோம். அம்மா, உன்னை அடையாளம் தெரிஞ்சு பேசுவாங்களா. இதெல்லாம் தானே உன் மனசில் ஓடுது.
''கவலைப் படாதேம்மா... சில விஷயங்களை ஏத்துக்க தான் வேணும்ன்னு, நீ தானே சொல்வே... போய் உன் மன திருப்திக்கு அம்மாவோடு இரண்டு வாரம் இருந்துட்டு வாம்மா. நானும், டாடியும், நீ திரும்பி வரும் நாளுக்காகக் காத்திருப்போம்,'' என்று கூறிய, 12 வயது மகளை அணைத்துக் கொண்டாள்.
'என்னங்க யோசனை?'
'யு.எஸ்., மாப்பிள்ளை, அனுவை அவ்வளவு துாரம் கல்யாணம் பண்ணி அனுப்பணுமான்னு யோசிக்கிறேன்...'
'என்னங்க இது, மகள், நல்லபடியாக வாழப் போறா. அதுதானே நமக்கு முக்கியம்...' கணவரிடம் சொன்னாள், சாரதா.
அம்மாவின் முந்தானை பிடித்தே வளர்ந்தவள்.
'தனியாகப் போய் அமெரிக்காவில் எப்படி இருக்கப் போகிறேன்...' என, பெற்றவர்களை பிரியப் போகிற சோகம், அனுவின் முகத்தில் தெரிந்தது.
'இங்கே பாரு அனு... எதையும் தைரியமா, 'பேஸ்' பண்ணணும். நீ படிச்சவ, புத்திசாலி. முதலில் கொஞ்சம் தயக்கம், பயம் இருக்கத்தான் செய்யும். அப்புறம் போகப் போக சரியாயிடும்.
'என்ன கொஞ்சம் அம்மா பிள்ளையாக இருக்கே... எவ்வளவு துாரத்தில் இருந்தாலும், இந்த அம்மா அருகில் இருக்கிற உணர்வு உனக்கு என்னைக்கும் இருக்கும், அனு. அதுதான் நமக்குள் இருக்கிற அன்பு. மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்மா. அவரோடு நீ சந்தோஷமாக வாழப் போற. அதை இந்த அம்மா மன நிறைவோடு பார்க்கத்தான் போறேன்...' என, மகளுக்கு தைரியம் சொல்லி அனுப்பினாள், சாரதா.
அம்மா சொன்னது போல அவர்களின் பிரிவு, அவளைக் கஷ்டப்படுத்தினாலும், கணவனின் அன்பான கவனிப்பு. வெளிநாட்டு வாழ்க்கை எல்லாம் அவளை மாற்றியது. ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வந்து, 10 நாட்கள் அம்மா, அப்பா, தம்பியுடன் சந்தோஷமாக இருந்து போவாள்.
பிறகு, தீபூ பிறக்க, இந்தியா வருவது இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை என்றாகி, தம்பி கல்யாணம், அப்பாவின் மரணம் எல்லாம் இந்த, 15 ஆண்டுகளில் நடந்து விட்டது.
பத்து மாதத்திற்கு முன் ஒருநாள், தம்பி மகேஷ் போன் செய்து, 'அக்கா... அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. எதுவும் ஞாபகம் வச்சுக்க முடியலை. ரொம்ப தடுமாறுறாங்க... சாப்பிட்டது கூட மறந்து, 'ப்ரியா... நீ இன்னைக்கு டிபன் தரலை'ன்னு சொல்றாங்க. 'அல்சீமர்' நோய். மூளை செயல்பாடுகள் குறைஞ்சுட்டு வருதுன்னு, டாக்டர் எல்லா பரிசோதனையும் எடுக்கச் சொல்றாரு...' என்றான்.
அம்மாவிடம் மகேஷ் போனை கொடுக்க, 'அனு... எங்கே போயிட்டே... உன் காலேஜில், 'டூர்' போறதா சொல்லிட்டு போனவள், எத்தனை நாள், எப்ப வருவே?' என்ற கேள்வியில் அதிர்ந்து போனாள், அனு.
'ஆமாக்கா... எனக்கு கல்யாணம் ஆனதையே மறந்து, ப்ரியாவை பார்த்து இது யாருன்னு கேட்கிறாங்க...' என்றான்.
நாட்கள் நகர அம்மாவிடம் எந்த மாறுதலும் இல்லை. ஒரு வருடம் கடக்க, இதற்கு மேல் தாங்காது என்பதால், அம்மாவைப் பார்க்க இந்தியா கிளம்பி விட்டாள், அனு.
ஏர்போர்டில் இருந்து தம்பியுடன் காரில் பயணித்தாள்.
''மகேஷ், அம்மாவுக்கு நான் வர்றது தெரியுமா?''
''அம்மாகிட்டே பத்து நாளாக, 'உங்க மகள் அனு, அமெரிக்காவிலிருந்து உங்களைப் பார்க்க வரப்போறாங்க'ன்னு ப்ரியா சொல்லிக்கிட்டுதான் இருக்கா... அது, அவங்க நினைவில் பதிந்ததாகவே தெரியலை,'' என்றான், மகேஷ்.
''மனசுக்கு கஷ்டமாக இருக்கு.''
''ஆமாம்க்கா. நம்ப அம்மாவா இதுன்னு நீ பார்த்தால் அதிர்ந்து போவே... நீட்டாக டிரஸ் பண்ணி எப்பவும் பளிச்சுன்னு இருக்கும் அம்மா, இப்ப புடவை விலகறது கூடத் தெரியாமல் இருப்பதால், எப்போதும் நைட்டிதான் போட்டு விடறா, ப்ரியா,'' என்றான்.
''கூடவே இருக்கிற உங்களையாவது அம்மாவுக்கு அடையாளம் தெரியுதா?''
''எப்பவாவது அதிசயமாக, 'மகேஷ், ஆபீசிலிருந்து எப்ப வந்தே'ன்னு கேட்பாங்க. அதே மாதிரி ப்ரியாகிட்டே, 'சாமி விளக்கேத்து ப்ரியா'ன்னு ராத்திரி, 10:00 மணிக்கு சொல்வாங்க. அத்தை வாய் திறந்து பேசறாங்கன்னு சந்தோஷப்பட்டு, உடனே விளக்கேற்றி வச்சு, 'வாங்க அத்தை சாமி கும்பிடுவோம்'ன்னு கூப்பிடுவா.
''ஆனா, அவங்க எதுவுமே தெரியாதது போல படுத்து கண்ணை மூடிக்குவாங்க. புரியலைக்கா. மொத்தத்தில் டாக்டர் சொன்னது போல, உயிரோட்டமுள்ள ஒரு பொம்மையாகத்தான் எங்களோடு இருக்காங்க.''
அனுவின் கண்கள் கலங்கின.
வீடு வர, வேகமாக கதவைத் திறந்து உள்ளே வந்தாள். கட்டிலில் சுவற்றை வெறித்தபடி படுத்திருக்கும் அம்மாவை பார்த்தும், கண்ணீர் பெருகியது. அம்மாவை தழுவி, ''உன் அனு வந்திருக்கேன்மா... உன்னைப் பார்க்க ஓடோடி வந்திருக்கேன். என்னைப் பாரும்மா,'' என்றாள், அனு.
அவளிடம் எந்த மாற்றமும் இல்லாததால், அருகில் நிற்கும் ப்ரியாவிடம், ''அம்மாவுக்கு என்னை அடையாளம் தெரியலை. என்னைப் பார்த்ததும் பரவசப்படும் கண்கள், இப்ப ஒளியிழந்து எங்கோ பார்க்குது. அவங்க ஞாபகத்தில் இருந்து நான் மறைஞ்சுட்டேன்,'' என, வாய்விட்டு அழுதாள்.
''ப்ளீஸ் அழாதீங்க. அவங்க ஞாபகத்தில் இப்ப யாருமே இல்லை. தன்னையே உணர முடியாத அவங்க நிலைமையை நாம் புரிஞ்சுக்கணும். மறக்கக் கூடிய உறவா தாய் - மகள் உறவு. வருத்தப்படாதீங்க, அவங்க மூளையில் செயல்பாடுகள் குறைஞ்சிடுச்சு. இதை நாம் ஏத்துக்கதான் வேணும். குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க,'' வற்புறுத்தி அவளை அழைத்துப் போனாள், ப்ரியா.
ஒரு நிமிஷம் கூட அம்மாவைப் பிரியாமல் அவளுடனேயே இருந்தாள், அனு.
''அம்மா, இந்த ஆல்பம் பாரேன். என் கல்யாணத்தில் எடுத்தது. நீ எவ்வளவு அழகாக பட்டுப்புடவை கட்டிக்கிட்டு, அப்பா பக்கத்தில் நிற்கிறே பாரேன். கல்யாணத்துக்கு வந்தவங்க, பொண்ணுக்கு அக்கா மாதிரி இருப்பதா சொன்னாங்கன்னு சொல்லி வெட்கப்பட்டியே ஞாபகம் வருதா?''
சாரதாவின் கண்களில் எந்த உயிர்ப்பும் தெரியவில்லை.
''அம்மா இதைப் பார்... மூணு வயசு குழந்தையான என்னைத் துாக்கி வச்சிருக்கே... உன் முகத்தில் எவ்வளவு மலர்ச்சி... நான் எவ்வளவு குண்டாக இருக்கேன் பாரேன்.''
ம்கூம், அவள் கண்கள் போட்டோவில் இல்லாமல், வேறு எங்கோ பார்க்கிறது.
''பிரயோசனமில்லைக்கா... எத்தனையோ போட்டோ ஆல்பங்களை காட்டி, நாள் கணக்கில் பேசியிருக்கேன். 'நீங்க எதையும் அவங்களுக்கு ஞாபகப்படுத்த முடியாது. அவங்களுக்கா ஏதும் ஞாபகம் வந்து பேசினால் தான் உண்டு. ரொம்ப தொந்தரவு பண்ணாமல் விட்டுடுங்க'ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்.''
மகேஷ் சொல்ல, எல்லாவற்றையும் மூடி, ஒரு பக்கமாக வைத்தாள்.
இரவில் அம்மாவின் அருகில், அவள் மேல் கை போட்டு படுத்துக் கொண்டாள், அனு.
''அம்மா, நீ எனக்கு அம்மாவாக மட்டும் இல்லை, ஒரு நல்ல சிநேகிதியாகவும் இருந்திருக்கே... ஒருமுறை ரொம்ப முடியாமல் போய் நான் ஹாஸ்பிடலில், 10 நாள் இருந்துட்டு வந்தேன். இரவும், பகலுமாக என் பக்கத்தில் இருந்து கவனிச்சுக்கிட்டே. உடம்பு சரியாகி வீட்டுக்கு வந்ததும், நீ சொன்னது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கும்மா...
''அப்போது, 'யாரு அது, 10 நாளா ஒரு பையன் தினமும் உன் போனில் கூப்பிட்டு நீ எப்படியிருக்கேன்னு நலம் விசாரிச்சான். வெறும் நட்புன்னா ஓ.கே., அதுக்கு மேல் உனக்கு ஏதாவது ஈடுபாடு...' என்றாய். 'அம்மா, அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவன் எனக்கு ஒரு நல்ல நண்பன் அவ்வளவுதான்...' என்றேன்.
''அதற்கு, 'ஓ.கே., அனு. நட்போடு பழகறது தப்பில்லை. அதிக அளவு ஈடுபாடு வேண்டாம். அந்தப் பையன் கொஞ்சம், 'எமோஷனல்' ஆகப் பேசினான். உனக்காக ரொம்பவே கவலைப்பட்டான். அதனால் கேட்டேன். காதல் தப்புன்னு சொல்ல வரலை. முதலில் நம்ப தகுதியை உயர்த்திக்கணும். படிக்கிற வயசில் படிப்பு முக்கியம், அனு. நீ படிச்சு, வேலைக்குப் போயி, உன் மனசுக்குப் பிடித்தவனை பத்திச் சொன்னால் கட்டாயம் நானும் யோசிச்சுப் பார்ப்பேன், அனு. இந்த வயதில் யாருக்கும் மனசில் இடம் கொடுக்காதே...' எனக் கூறினாய்.
''எவ்வளவு நுணுக்கமாக ஒரு விஷயத்தை அலசி, மனசில் பதியற மாதிரி பேசினே... உன் அறிவுரைகள், புத்திமதிகள், நீ, 'க்ரேட்'ம்மா... நீ எனக்கு அம்மாவாக வந்தது, என் அதிர்ஷ்டம்.''
இவள் சொன்னது எதையும் காதில் வாங்காமல் துாங்கும் அம்மாவை, விழி நீர் நிறைய பார்த்தாள், அனு.
''அக்கா உன் மன திருப்திக்கு இந்த, 10 நாளும் அம்மாவைப் பிரியாமல், அவங்களோடு இருந்துட்டே. அந்த சந்தோஷத்தோடு புறப்படுக்கா. நீ ஊருக்குப் போக இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு... தீபூக்கு, உன் ஹஸ்பெண்டுக்கு ஏதாவது வாங்க வேண்டாமா... கடைக்குப் போகலாம்கா.''
''வேண்டாம் மகேஷ். அந்த நேரத்தைக் கூட நான் இழக்க விரும்பலை... ப்ளீஸ், நீயும், ப்ரியாவும் போய் நான் சொல்றதை வாங்கிட்டு வாங்க. நான் அம்மாவோடு இருக்கேன்.''
''சரி, உன் இஷ்டம்.''
ஊருக்குக் கிளம்ப பெட்டியில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள், அனு.
''நாளைக்கு சாயந்திரம் ப்ளைட். மதியம் சாப்பாட்டிற்குப் பிறகு கிளம்பலாம்,'' என்றான், மகேஷ்.
காலையில் எழுந்ததிலிருந்து ஊருக்குக் கிளம்ப போகிறோம் என்ற தவிப்பு, அம்மா தன்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லையே என்ற ஏக்கம் மனதை உருக்கியது.
''ப்ரியா... அம்மா பீரோவைத் திறந்து, போன தடவை நான் வந்தப்ப வாங்கிய ரோஸ் நிற பட்டுப் புடவை கெட்டிச் சரிகை போட்டது. அதை எடுத்துட்டு வாயேன். அம்மாவுக்கு புடவை கட்டி, அலங்காரம் பண்ணி, என் பழைய அம்மாவா பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு,'' என்றாள்.
அம்மாவை அலங்கரித்து, அவளது கைப்பிடித்து, ஆளுயர கண்ணாடி அருகே அழைத்து வந்தவள், ''அம்மா பாரேன், நீ எவ்வளவு அழகாக இருக்கேம்மா... அப்படியே தேவதை மாதிரி ஜொலிக்கிறே.''
அம்மாவின் கன்னத்தோடு கன்னம் வைத்து கண்ணாடியில் பார்க்க, சாரதாவின் கண்கள் மகளையே பார்த்தது.
''ப்ரியா... எங்க இரண்டு பேரையும் மொபைல்போனில் போட்டோ எடு. அம்மா ஞாபகமாக வச்சுக்கிறேன்.''
அம்மாவின் தோள் மீது கை போட்டு, கட்டியணைத்து, முத்தமிட்டு பலவித போஸ்களில் போட்டோ எடுத்துக்கொண்டாள்.
''மனசுக்கு வருத்தமா இருக்கு, ப்ரியா. இத்தனை நாள் அம்மாவோடு இருந்தேன். அம்மாவுக்கு இந்த அனுவை தெரிஞ்சுக்க முடியலை. ஒரு தடவையாவது, 'அனு'ன்னு வாய் திறந்து கூப்பிட்டிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.''
''வருத்தப்படாதீங்க. உங்க தம்பி சொன்ன மாதிரி மன திருப்தியோடு அம்மாவோடு பத்து நாள் இருந்தீங்க... அந்த நிறைவோடு புறப்படுங்க. அம்மாவை நாங்க பத்திரமா பார்த்துக்கிறோம்.''
அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டவள், ''அம்மா, போய்ட்டு வரேன்மா. உங்க அனு, பத்து நாள் உங்களோடு இருந்தேன். அந்த திருப்தியோடு கிளம்பறேன்மா. அடுத்த வருஷம் திரும்ப உங்களைப் பார்க்க வருவேன்.''
கண்களில் கண்ணீர் வடிய, அம்மாவை கட்டிலில் உட்கார வைத்தாள்.
அக்காவை ஆதரவாக அணைத்து, ''வா போகலாம்,'' அழைத்துச் சென்றான், மகேஷ்.
''நான் அக்காவை, 'ப்ளைட்' ஏத்திட்டு வரேன். அம்மாவை பார்த்துக்க, ப்ரியா.''
கார் புறப்பட்டது.
கதவைத் தாழிட்டு உள்ளே வந்தாள், ப்ரியா. அறையில் விசும்பல் சத்தம். அத்தை அழுகிறார்களா, பதறியபடி வந்தாள். சாரதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருக்க, வாய் எதையோ முணுமுணுத்தது.
''அத்தை அழறீங்களா?''
குனிந்து அவர் வாயருகில் காதை வைத்து என்ன சொல்கிறார் என்று கவனித்தாள்.
''அனு... என் மகள்... அனு வந்தா... அனும்மா... அனும்மா...''
திரும்பத் திரும்ப மந்திரமாக வாய் அதையே சொல்லியது. ஞாபகங்கள் மறந்து போனாலும், தன் நிலை மறந்தாலும், தாய்மையின் உள்ளுணர்வு மகளின் அருகாமையை உணர்த்தியிருக்கிறது என்பது புரிந்தது, மனம் நெகிழ, அந்த தாயின் கண்ணீரைத் துடைத்து, படுக்க வைத்தாள், ப்ரியா.
பரிமளம் ராஜேந்திரன்