'வலியதுதான் பிழைக்கும்' என்றால் 'கொரோனா' நம்மை இன்றும் வீட்டிற்குள்தான் முடக்கி வைத்திருக்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து தன்னைவிட வலிமையானதுடன் மோதி மீள்வதே மனித இன வழக்கம். கடலுார், திட்டக்குடி சித்ராவுக்கு 38 வயதாகிறது; 5 வயதில் தாக்கிய காய்ச்சலின் வலிமை இரண்டு கைகளையும் செயலிழக்க வைத்த புள்ளியில் துவங்கியது 'வலியது - சித்ரா' இடையிலான யுத்தம்.
சித்ராவின் வலிமை?
இன்னைக்கும் பொது போக்குவரத்தை தான் பயன்படுத்துறேன். அதுல பெண்கள் சந்திக்கிற எல்லா சிரமங்களும் எனக்கும் உண்டு. அலுவலகத்துல தினமும் 9 மணி நேரம் கணினியை கால்கள்ல இயக்குறதால கடுமையான நரம்பு பிரச்னைகள் ஏற்பட்டிருக்கு. போட்டி, பொறாமைகள்ல என்னை விலக்கி வைக்காத இந்த சமூகத்துகிட்டே, 'எனக்கு இரக்கம் காட்டுங்க'ன்னு இதுவரைக்கும் நான் கேட்டதில்லை!
சித்ராவுக்கு பிடித்த பாடல்கள்?
சின்ன வயசுல இருந்தே தனிமைக்கு பழக்கப்பட்டதாலோ என்னவோ மென்சோக பாடல்னா ரொம்ப பிடிக்கும்; 'கற்பூர பொம்மை ஒன்று...' பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னை சார்ந்து மட்டுமே நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்; மென்சோக பாடல்கள்ல இதுக்கான உத்வேகம் இருக்குறதா நம்புறேன்.
கல்வி மீது ஆர்வம் கொண்ட சித்ரா கைகள் செயலிழந்த நிலையிலும் பள்ளிக்கு சென்றிருக்கிறார். கால்கள் மூலம் எழுத பழகிக்கொண்டு கல்லுாரி படிப்பு வரை அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
உடல் ஊனமற்ற மனிதர்கள் பற்றி...
வாழ்க்கையில நிறைய நேரம் இருக்குறதா நினைச்சு சின்னச்சின்ன விஷயங்களை கூட தள்ளிப் போடுறாங்க. தனக்கு நேராத வரைக்கும் எல்லாத்தையும் சுலபமா கடந்து போற அவங்க குணத்தை ரொம்பவே ஆபத்தானதா உணர்றேன்.
எதிர்காலத்துல யார் உங்களுக்குன்னு...
உறவுகள் ஒருவிதத்துல பலம்தான்; ஆனா, நம்ம பலவீனத்துக்கும் உறவுகள்தான் காரணம்ங்கிறது என் அனுபவம். 'மாற்றுத்திறனாளிகள் எல்லாரும் தற்சார்பு பொருளாதாரத்துல இயங்கணும்'ங்கிறது என் ஆசை; அதற்கான பயிற்சி மையம் உருவாக்குறது கனவு!
அரசு சிறப்பு சலுகைகள் பற்றி?
பணி இடங்கள்ல எங்களுக்கான கழிப்பறை வசதிகள் இல்லை. அரசு பணிக்கான தேர்வுகள்ல இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டாலும், எங்களுக்கு கூடுதல் தேர்வு நேரம் தரப்படுறதில்லை. எங்க முன்னேற்றத்துக்காக வழங்கப்படுற அரசு சலுகைகள் எல்லாம் முறைப்படுத்தப்படணும்.
சித்ராவின் புதுப்புது அர்த்தங்கள்!
கை? - மனசு
பலம்? - எண்ணம்
வாழ்க்கை? - தேடல்