சென்ற வாரம்: ஐரோப்பியரான ஆங்கிலேயரும், பிரெஞ்சுகாரர்களும், அமெரிக்காவில் குடியேறி, காலனிகளை உருவாக்கி அடிக்கடி மோதி வந்தனர். இனி -
இது போன்ற மோதல்கள் ஓஹியோ ஆற்றுப் பகுதியில் அதிகம் நடந்தன. மோதலுக்கு காரணமாக இருந்த பிரெஞ்சு குடியேற்றத்தை வெளியேற்ற, வெர்ஜீனியா மாநில ஆங்கிலேய ஆளுநர் திட்டமிட்டார். அது தொடர்பான உத்தரவை, வாஷிங்டனிடம் கொடுத்து அனுப்பினார்.
பிரெஞ்சுகாரர்கள், உத்தரவை ஏற்கவில்லை. இதனால், கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை நிறைவேற்ற ஆங்கிலேயப் படை புறப்பட்டது. அந்த படைப்பிரிவின் துணை தளபதியாக பொறுப்பு வகித்தார், ஜார்ஜ் வாஷிங்டன்.
உக்கிரமாக நடந்த போரில், பிரெஞ்சு கவர்னர் ஜெனரல் கொல்லப்பட்டார்; எனினும், ஆங்கிலேய படையால் வெற்றி பெற முடியவில்லை. வெறுங்கையுடன் திரும்பிய ஆங்கிலேயப் படை, வழியில், கோட்டை ஒன்றை உருவாக்கியது.
அப்போது, ஆங்கிலேய படைத்தளபதி இறந்தார். இதையடுத்து, தளபதியாக பொறுப்பேற்றார், ஜார்ஜ் வாஷிங்டன். கவர்னர் ஜெனரல் கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்திருந்த பிரெஞ்சு படை, பழி தீர்க்க காத்திருந்தது.
கொல்லப்பட்ட கவர்னர் ஜெனரலின் சகோதரர், டி வில்லியர்ஸ் தலைமையில் பெரும் படை ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த போரிலும் ஆங்கிலேயப் படை தோல்வி கண்டது. வாஷிங்டனும், அவரது படை வீரர்களும் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்நிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.
வாஷிங்டனுக்கு, பிரெஞ்சு மொழி தெரியாது. டி வில்லியர்சுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே, நேரடியாக பேச்சு நடத்த முடியவில்லை. இருவருக்கும் மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டார் ஒரு டச்சுக்காரர்; அவர் தீட்டிய சதி திட்டத்தால், தவறான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் வாஷிங்டன்.
ஒப்பந்த பத்திரத்தில், 'பிரெஞ்சு கவர்னர் ஜெனரலை கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறேன்... இனி ஓராண்டுக்கு பிரெஞ்சு படைக்கு எதிராக ஆங்கிலேயப் படை போரிடாது...' என, பிரெஞ்சு மொழியில் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்.
ஜார்ஜ் வாஷிங்டனுக்கு, முதல் போர்க்கள அனுபவம் இது. பின்னடைவு ஏற்பட்டாலும் ஆர்வம் குறையவில்லை. அந்த போர் அனுபவம் பற்றி, 'போர்க்களத்தில், துப்பாக்கிக் குண்டு பறந்து செல்லும் போது உண்டாகும் ஒலி, கவர்ச்சியூட்டும் ஓசையாக அமைந்திருந்தது...' என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும், 1755ல் ஆங்கிலேயர் -
பிரெஞ்சு படை இடையே போர் மூண்டது; இம்முறையும், ஆங்கிலேயருக்கு தோல்வி ஏற்பட்டது; ஆங்கிலேய படைத் தளபதி, போர்க்களத்திலேயே உயிர் இழந்தார்; நெருக்கடி முற்றியது.
அதனால், படைக்குத் தலைமை ஏற்கும் பொறுப்பு, ஜார்ஜ் வாஷிங்டனிடம் வந்தது. வெர்ஜீனிய மாநில ஆங்கிலேய படைக்கும், அவரே தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார்.
போரில், பிரெஞ்சு படையின் வலிமையை சிதறடித்து, ஆங்கிலேய அரசின் பாராட்டை பெற்றார், ஜார்ஜ் வாஷிங்டன். தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார்.
பின், உடல்நலக் குறைவு காரணமாக விலகி, வெர்னான் மலை பகுதிக்கு திரும்பினார். அங்கு, மார்த்தா என்ற விதவையைத் திருமணம் செய்தார்; அமைதியான இல்லற வாழ்வில், ஏழு ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஆங்கிலேய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் அப்பலாச்சியன் மலைகளுக்கு அப்பால் யாரும் குடியேறவோ, நிலம் வாங்கவோ கூடாது என்பது தான் அந்த உத்தரவு.
அதை கடுமையாக எதிர்த்தார் ஜார்ஜ் வாஷிங்டன். ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்பை காட்ட ஓஹியோ பள்ளத்தாக்கு பகுதியில், செல்வந்தர் ஒருவருக்கு நிலம் வாங்க உதவிகள் செய்தார்.
'இங்கிலாந்து நாடாளுமன்றம், நிறைவேற்றும் சட்டங்கள் அமெரிக்கர்களை கட்டுப்படுத்துகிறது. இங்கிலாந்துக்கு வரி செலுத்துகிறோம்; ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அமெரிக்க மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. வரி வசூலிப்பதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் தர வேண்டும்' என வலியுறுத்தினார்.
இந்த கருத்து அமெரிக்கர் மனதில் துளிர்த்து வளர்ந்தது; சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க மக்கள் ஒப்புதல் இன்றி, மேலும் சில சட்டங்களை நிறைவேற்றியது இங்கிலாந்து. அவை, ஆங்கிலேயர் மீது, மேலும் வெறுப்பை வளர்த்தன; இங்கிலாந்துக்கு எதிராக போராட்டத்தை துவங்கினர் அமெரிக்கர்கள்.
இதன் ஒரு பகுதியாக, பிலடெல்பியா நகரில், 1774ல் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் கூடினர். அதில், வெர்ஜீனியா மாநில பிரதிநிதியாக பங்கேற்றார் ஜார்ஜ் வாஷிங்டன். கூட்டத்தில், அமெரிக்கா மக்கள் காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராட முடிவு செய்யப்பட்டது.
அந்த போராட்டத்துக்கு தளபதியாக, நியமிக்கப்பட்டார் ஜார்ஜ் வாஷிங்டன்.
- தொடரும்...