தமிழகத்தில், கார்த்திகை திங்கள் (சோமவாரம்) அன்று சிவ வழிபாடு, ஆடி வெள்ளியில் அம்பாள் வழிபாடு முக்கியமாக இருப்பது போல, உத்தரபிரதேசத்தில், வைகாசி செவ்வாய் அனுமன் வழிபாடு, பிரசித்தி பெற்றுள்ளது.
இந்த நாளை, படா மங்கல் திருவிழா என்கின்றனர். குறிப்பாக, உ.பி., தலைநகர் லக்னோவில் இந்த விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. உ.பி., மக்கள் மட்டுமின்றி, பிற மாநில பக்தர்களும் இந்த நாளில் அனுமனை வழிபட வருகின்றனர்.
லக்னோவில் மட்டும் சிறியதும், பெரியதுமாக 9,000 அனுமன் கோவில்கள் இருக்கின்றன. இவற்றில் அலிகஞ்ச் என்ற இடத்திலுள்ள கோவில் பிரபலமாக உள்ளது. இந்தக் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
புத்த பூர்ணிமாவை (வைகாசி பவுர்ணமி) அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையில் துவங்கி, நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகள் நடக்கும் படா மங்கல் விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவர்.
இந்த நாளில் அனுமனுக்கு லட்டு, பூந்தி உள்ளிட்ட இனிப்பை நிவேதனம் செய்வர். இந்த விழாவை அனைத்து மதத்தினரும் கொண்டாடுவர். இந்த நாளில் தானம் செய்வதே விசேஷம். வசதி உள்ளவர்கள் இனிப்பு, ஆலு பூரி, குளிர்பானங்கள் தானம் கொடுப்பர். மற்றவர்கள் குடிநீர் தருவர். நகர் முழுவதும் பந்தல் அமைப்பர், வியாபாரிகள்.
இந்த மாதத்தில் கடுமையான வெயில் அடிக்கும். தமிழகத்தில், கோடையில், நீர் மோர் தானம் தருவது போல, உ.பி.,யில் சர்பத், பழச்சாறு தானம் செய்கின்றனர். நகர வீதிகளில் கூட்டம் அலைமோதும். பத்தி, நறுமணப் பொருட்கள், பூ வியாபாரம் களை கட்டும்.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை என்றால், சுபநிகழ்ச்சிகள் செய்யத் தயங்குவர். வட மாநிலத்தவர், மங்கல்வார் - மங்கலமான கிழமை என பெயரிட்டு, சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துகின்றனர். குறிப்பாக, படா மங்கல் அன்று, அனுமன் வழிபாடு செய்து, தானம் கொடுப்பதன் மூலம், தங்கள் செல்வம் பல மடங்கு பெருகும் என, நம்புகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்நாளில் விரதமிருந்து, மழலை வரத்துக்காக வேண்டுவர்.
லக்னோவிலுள்ள அனுமன் கோவில்களை அன்று மூடுவதில்லை. முழு நேரமும் திறந்திருக்கும். இரவு, 10:00 மணிக்கு சன்னிதானம் அடைக்கப்பட்டு, அபிஷேகம், நைவேத்யம் செய்வர். 11:00 மணி அளவில் மீண்டும் திறப்பர். பிறகு, விடிய விடிய நடை திறந்திருக்கும்.
கோடைகாலம் என்பதால், பகலில் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் அடிக்கும். படா மங்கல் அன்று, இரவில் பூஜை செய்வர்.
மனிதநேயத்தை வெளிப்படுத்துவதே படா மங்கல் திருவிழாவின் நோக்கம். அது குறைந்து வரும் இந்தக் காலத்தில், இதுபோன்ற விழாக்கள் தான், இளைய தலைமுறைக்கு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகிறது.
தி. செல்லப்பா