சரியான சவுக்கடி!
என் நண்பரின் அப்பா, தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்து, சமீபத்தில் ஓய்வு பெற்றார். அதற்காக நடைபெற்ற விழாவுக்கு, நண்பரின் அழைப்பை ஏற்று சென்றிருந்தேன். ஓய்வு பெறும் நண்பரின் அப்பாவை, பலர் பாராட்டி பேசினர். இடையில், ஒரு நபர், விழா அமைப்பாளர்களிடம் தன்னை பேச அனுமதிக்குமாறு கேட்க, அனுமதி அளிக்கப்பட்டது.
'மைக்'கை வாங்கிய அவர், நண்பரின் அப்பா ஒரு லஞ்ச பிசாசு, தன்னிடம் எத்தனை முறை லஞ்சம் வாங்கினார் என்று கூறினான். அங்கு கூடியிருந்தவர்களில் பலர் சிரித்தும், சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர்.
பேசி முடித்து வெளியேறிய அவரிடம், 'பாராட்டு விழாவில் இப்படி பேசலாமா?' என்று கேட்டான், நண்பன். 'நான், உங்க அப்பாவுக்கு லஞ்சம் கொடுக்க, என் ரத்தத்தை விற்று, அதில் கிடைத்த பணத்தை எடுத்து வந்து கொடுத்துள்ளேன். என்னைப் போல் எத்தனை பேர், எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு லஞ்சம் கொடுத்தனரோ! சாதாரணமாக, அரசு அலுவலர் செய்து கொடுக்க வேண்டிய வேலைக்கு கூட, லஞ்சம் வாங்கினால் எப்படி தம்பி?
'வேலை செய்யத்தானே, அரசு சம்பளம் கொடுக்கிறது! அவருக்கு, இன்று பணி ஓய்வு பாராட்டு விழா என்று, 'பேனர்' வெளியே இருந்ததைப் பார்த்தேன். என் நீண்ட கால ஆதங்கத்தை கொட்ட வேண்டும் என்பதற்காகவே உள்ளே வந்தேன். நான் பேசியது தவறு என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்...' என்றார்.
நான் அவரிடம், 'டிபன் - காபி சாப்பிட்டு போங்கள்...' என்று அழைக்க, 'வேண்டாம்பா... இது கூட யாரோ கொடுத்த லஞ்சப் பணத்தில் வாங்கியதாகத் தான் இருக்கும். எனக்கு வேண்டாம்...' என்று கூறி, சென்று விட்டார்.
இதையெல்லாம் பார்த்த தாலுகா அலுவலக ஊழியர்களின் முகம், அவமானத்தால் சிவந்திருந்ததை காண முடிந்தது. லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களே... லஞ்சம் வாங்கும்போது, மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், பின்னாளில் அது கசப்பாக மாறும். இனியாவது திருந்துங்கள்.
- பொ. பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
பனை ஓலை விசிறி!
சமீபத்தில், என் அலுவலக நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்றிருந்தேன். கோடை காலம் என்பதால், திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும், பனை ஓலை விசிறி ஒன்று கொடுத்தனர். அதில், மணமகன் - மணமகள் பெயர் எழுதப்பட்டிருந்தது.
கோடை காலத்துக்கு உதவும் வகையில், பனை ஓலை விசிறி கொடுத்தது பயனுள்ளதாக இருந்தது. பனை ஓலை காற்று, உடலுக்கு மிகவும் நல்லது. பனை ஓலை விசிறி தயாரிப்பவர்களுக்கும் வாழ்வாதாரம் கிடைக்கும்.
திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மகிழ்ந்ததோடு, காலத்திற்கேற்றவாறு பரிசு கொடுத்ததற்காக பாராட்டிச் சென்றனர்.
ஆர். மகாதேவன், திருநெல்வேலி.
சாணிப் பொடி தேவையா?
வீட்டு வாசலில், சாணம் தெளிக்கும்போது, பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காக, கூடுதலாக சாணிப் பொடி என்ற ரசாயன பொருளை கலந்து தெளிக்கின்றனர். இந்த சாணிப் பொடி, விஷத்தன்மை வாய்ந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்த இந்த பழக்கம், இன்று பல இடங்களிலும் பரவியுள்ளது.
சமீபத்தில், என் தோழி, சாணிப் பொடி கலந்த சாண நீரை வாசலில் தெளித்து, கோலம் போட்டுள்ளார். அந்த இடத்தில், தன் இரண்டு வயது குழந்தையை உட்கார வைத்துவிட்டு, சமையல் செய்ய போய் இருக்கிறார்.
சிறிது நேரத்திற்கு பின், குழந்தையை பார்த்து அதிர்ந்து போனாள். ஏனெனில், வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்திருக்கிறது குழந்தை. அலறி அடித்து, மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர், 'விஷம் சாப்பிட்டிருக்கும் போலிருக்கு. வாந்தி பச்சை நிறத்தில் இருப்பதோடு, மண்ணும் கலந்துள்ளது...' என்று கூறியுள்ளார்.
சாணம் தெளித்த இடத்தில், குழந்தையை விட்டுச் சென்றதால், அங்கிருந்த மண்ணை குழந்தை சாப்பிட்டிருக்கலாம் என்று கூற, உடனடியாக தீவிர சிகிச்சை அளித்து, குழந்தையை காப்பாற்றியுள்ளார், மருத்துவர்.
சாணிப் பொடி விஷத்தன்மை வாய்ந்தது என்று மருத்துவர் கூறியதும் தான், தோழிக்கு, அதன் விபரீதம் புரிந்துள்ளது. அதிலிருந்து, வீட்டு வாசலில் சாணிப் பொடி கலந்த நீரை தெளிப்பதை நிறுத்தி விட்டார், தோழி.
வாசகர்களே...
பசுமையாக தெரிய வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற ரசாயன பொருளை சேர்க்காமல், இயற்கையாக கிடைக்கும் சாணத்தை நீரில் கரைத்து தெளியுங்கள். இல்லாவிட்டால் தண்ணீர் மட்டும் தெளித்தால் போதும்!
- ம. காவியா, கோவை.
ஆபத்தை உணர்வீரா!
நான் கடந்த, 30 ஆண்டுகளாக, இரு சக்கர வாகனத்தில், வீட்டிலிருந்து, 20 கி.மீ., தொலைவிலுள்ள அலுவலகத்துக்கு சென்று வருகிறேன்.
காலையில் வேலைக்கு போகும்போதும், மாலை வீடு திரும்பும்போதும், பேருந்து நிலையத்தில் தனியாக நிற்கும் பெண்கள், பள்ளி சீருடையுடன் நடந்து செல்லும் மாணவர்கள் மற்றும் தலையில் சுமைகள் துாக்கிச் செல்லும் வயதானவர்களை பார்த்தால், உடனே, அவர்கள் அருகே வண்டியை நிறுத்துவேன். நான் செல்லும் வழி என்றால், அவர்களில் ஓரிருவரை என் வண்டியில் ஏற்றிச் சென்று விடுவதை, வழக்கமாக கொண்டுள்ளேன். அதில் எனக்கு திருப்தியும் கிடைத்தது.
சமீபகாலமாக, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பெண்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் கையில் மொபைல் போனும், காதில், 'ஹெட் போனை'யும் மாட்டியபடி அதிலேயே மூழ்கி, தனி உலகில் சஞ்சரிக்கின்றனர். அதன் ஆபத்தும் தெரிவதில்லை, மற்றவர்கள் ஏதாவது உதவ வந்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை. இது எனக்கு உறுத்தலாகவும், சற்று வருத்தமாகவும் உள்ளது.
ஏன் இப்படி மாறி போயினரோ! தேவைக்கு மட்டும் மொபைல் போனை பயன்படுத்துங்களேன்!
— ம.வான்மதி, சென்னை.