திரும்பிப் பார்க்கிறேன்! (4)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2022
08:00

இளமையின் ரகசியம்!
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, எனக்கு போன் செய்து, 'மத்திய நிதி அமைச்சரும், இந்தியாவின் துணை பிரதமருமான ஒய்.பி.சவான், சென்னைக்கு வருகிறார். அவரை சந்தித்து பேட்டி எடுக்க வேண்டும்...' என்ற ரா.கி.ரங்கராஜன், அவரிடம் கேட்க வேண்டிய சில கேள்விகளையும் சொன்னார்.
கவர்னர் மாளிகையில் அன்று ஏக கூட்டம். எம்.பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் உட்பட ஏராளமான தலைவர்கள் அவரை சந்திக்க காத்திருந்தனர். சவானை சந்திக்க எனக்கு, 'அப்பாயின்மென்ட்' இல்லை என்பதால், என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்தேன்.

பம்பாய் டெலிபோன்ஸ் ஜெனரல் மேனேஜர், முத்தண்ணா, அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரை அணுகி, 'சவானை சந்திக்க ஐந்து நிமிடங்கள் அனுமதி பெற்று தர முடியுமா?' என்று தயக்கத்துடன் கேட்டேன். 'நிச்சயமாக...' என்றவர், அடுத்த, 10வது நிமிடம் சவானை சந்திக்க வைத்தார்.
'வணக்கம்...' என்று சொல்லி, சென்னை சார்பில் அவரை வரவேற்பதாக ஹிந்தியில் சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி. காமராஜர் பற்றி முதல் கேள்வியை ஆரம்பித்தேன். 'இது என்னுடைய தனிப்பட்ட பயணம். அரசியல்வாதியாக அல்ல; அரசியல் கேள்விகள் வேண்டாமே...' என்று தடை போட்டு விட்டார்.
நான் எழுதிக் கொண்டு போன எல்லா கேள்விகளும் உபயோகமற்றதாகி விட்டது. இதுவும் நமக்கு ஒரு சவால் என, கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், புதிய கேள்விகளை மனதில் உருவாக்கினேன்.
'உங்கள் இளமையின் ரகசியம் என்ன?' என்று கேட்டதற்கு, 'முறையான உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சி. அடுத்து, மனதில் எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாதவன்...' என்றார்.
பேட்டி சிறப்பாக முடிந்தது.
'உங்கள் பத்திரிகைக்கு என்னை படம் எடுக்க மாட்டாயா?' என்று கேட்டு, வியப்பில் ஆழ்த்தினார்.
'நான் சந்திப்பதே உறுதி செய்யப்படவில்லை. எனவே தான் புகைப்படக்காரரான, என் சகோதரரை அழைத்து வரவில்லை...' என்றேன்.
'அவரை அழைத்து வரச்சொல்...' என்றார்.
கவர்னர் மாளிகையின் கார், எங்கள் வீட்டுக்கு சென்று, சகோதரர் உத்ராவை அழைத்து வந்தது. படங்களை எடுத்துக் கொடுத்தார், உத்ரா. அக்., 15, 1970, 'குமுதம்' இதழில், மூன்று பக்க அளவில், 'உங்கள் இளமையின் ரகசியம் என்ன?' என்ற தலைப்பில் பேட்டி வெளியானது.

தமிழில் பேசிய காந்தகுமாரி பட்னாகர்!
தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி காந்தகுமாரி பட்னாகரை, 'தினமலர் - வாரமலர்' இதழுக்காக பேட்டி எடுத்தேன். காந்தகுமாரி பட்னாகருடன் எடுத்த பேட்டி எனக்கு மிகவும் முக்கியமானது. இதற்கு முன்பும், பின்பும், தலைமை நீதிபதிகளை சந்தித்து பேட்டி எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஆனாலும், இது ரொம்ப ஸ்பெஷல்.
காரணம், இந்தப் பேட்டியின் போது, வாரமலர் இதழின் பொறுப்பாசிரியர் என்னுடன் வந்திருந்தார். அவர், தலைமை நீதிபதியிடம் என்னை பற்றி உயர்வாக கூறி, அறிமுகப்படுத்தியது, எனக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது. மற்ற நிருபர்களுக்கு எளிதில் கிடைக்காத வாய்ப்பு இது.
நீதிபதி காந்தகுமாரி மிகவும் எளிமையாக இருந்தார். நாங்கள் உள்ளே நுழைந்ததும், இரு கைகளை கூப்பி, 'வணக்கம். வாங்கோ... வாங்கோ...' என்று வரவேற்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர், தமிழகம் வந்த சில நாட்களிலேயே தமிழில் பேசுகிறாரே... தமிழில் இன்னும் எந்த அளவுக்கு பரிச்சயம் உள்ளது... தன் துறை சம்பந்தமாக செல்லும் மாநிலத்தில் பேசப்படும் மொழி மிகவும் அவசியம் என்ற காரணத்தால், தமிழில் பேசக் கற்றுக் கொண்டாரா அல்லது தமிழ் மீது உண்மையிலேயே ஆர்வம் உண்டா...
இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது.
கூடத்தில் எங்களை அமர வைத்து, 'என் சாப்ட்றீர்...' என்று இழுத்து பேசி, சிரித்து விட்டார். தான் சரியாக உச்சரிக்கவில்லை என்று உணர்ந்ததாலேயே, அந்த சிரிப்பு.
'தமிழ் பேச எப்போது கற்றுக் கொண்டீர்?' என்றேன்.
'தமிழ் மொழியின் பெருமையை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். தமிழகத்திற்கு மாற்றலாக போவது தெரிந்ததுமே, ராஜஸ்தானில் உள்ள தமிழ் நண்பர்கள் உதவியுடன், சின்ன சின்ன வார்த்தைகளை கற்றுக் கொண்டேன்.
'இங்கு வந்த பின், என் முன் வரும் வழக்குகளின் சாட்சிகள் தமிழில் பேசும் போது, அவர்கள் கூறுவதில் ஒரு பகுதியையும், அவர்களது முகபாவனைகளில் இருந்து ஓரளவும் ஊகித்துக் கொள்வேன். மற்றதை, உதவியாளர்களின் மூலம் மொழி மாற்றம் செய்யச் சொல்லி கேட்டுக் கொள்வேன்.
'இன்னும் ஆறு மாதங்களில், தமிழை நன்கு கற்று தேர்ந்து விடுவேன்...' என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அவரைச் சந்தித்து பேட்டி எடுத்த விஷயத்தை, அந்துமணியிடம் கூற, அடுத்த வாரமே, வாரமலர் இதழில், பா.கே.ப., பகுதியிலும் எழுதியிருந்தார்.

ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு வைத்த புதுமையான போட்டி என்ன?

குமுதத்தில் சினிமா செய்திகளை ரா.கி., சுவைபட தொகுத்து அளித்த, 'லைட்ஸ் ஆன்' என்ற பகுதிக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவரை போல, நடுநடுவே ஆங்கில சொற்கள் கலந்து, சினிமா செய்திகளை சுவைபட கொடுத்தவர் வேறு யாருமில்லை. ரா.கி., பற்றி மற்றொரு முக்கிய விஷயம் குறிப்பிட வேண்டும்.
'எப்படி கதை எழுதுவது?' என்பதற்கான, அஞ்சல் வழி வகுப்பை துவங்கினார், ரா.கி.,
அந்த வகுப்பில் முதல் மாணவராக சேர்ந்தவர், 'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி., தான். எஸ்.ஏ.பி.,க்கு, ரா.கி.,யின் எழுத்து மற்றும் திறமையின் மேல் அசாத்திய நம்பிக்கை உண்டு.

தொடரும்
எஸ். ரஜத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X