நிலவுக்கும் நெருப்பென்று பேர்! - 15
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2022
08:00

முன்கதைச் சுருக்கம்: இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் உடலை, வெளியே எடுத்து செல்வது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கையில், அழைப்பு மணி ஒலித்தது. இன்ஸ்பெக்டரை பார்க்க வந்ததாக கூறினான், உக்கடம் துரை -

இக்பாலின் ஒட்டு மொத்த உடம்பின் ரத்த ஓட்டமும், இரண்டு விநாடிகளுக்கு ஸ்தம்பித்து, பின்னர் இயல்பு நிலைமைக்கு திரும்பியது.
இதயம் வேகமான துடிப்பில் இருக்க, பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் துரையப்பனை ஒரு அலட்சியமான பார்வையோடு ஏறிட்டபடி, ''இன்ஸ்பெக்டரா... அவர் எதுக்கு என் வீட்டுக்கு வரணும்?'' என்று கேட்டான்.

''வந்திருப்பாரோன்னு நினைச்சு கேட்டேன். ஏன்னா, இன்ஸ்பெக்டரோட பைக், உங்க வீட்டுக்கு முன்னாடி இருக்கிற மரத்துக்கு கீழே தான் நிக்குது.''
''அந்த மரத்துக்கு கீழே பைக் நின்னா, அவர் இந்த வீட்டுக்குத்தான் வந்திருக்கார்ன்னு அர்த்தமா?''
''தப்பா நினைக்காதீங்க தம்பி... இன்ஸ்பெக்டர் என்னைத் தேடிக்கிட்டு வந்திருக்கிற விஷயம், அரைமணி நேரத்துக்கு முன்னாடி தான் தெரியும். இதே தெருவுல, அதோ அந்த நர்சரி ஸ்கூலுக்குப் பக்கத்துல தான், மாடியில் அறை எடுத்து தங்கியிருக்கேன்.
''அவர் என்னைத் தேடிக்கிட்டு வந்தப்ப நான், அறையை பூட்டிகிட்டு வெளியே போயிருந்தேன். அவருக்கு வீடு அடையாளம் தெரியலை போலிருக்கு. தெரு முனையில் பானிபூரி கடை வெச்சிருக்கிற நுாருல்லாகிட்டே, 'என் வீடு எங்கே'ன்னு விசாரிச்சிருக்கார். அவர் சொல்லித்தான் விஷயமே எனக்குத் தெரியும். அதான் இன்ஸ்பெக்டரைத் தேடிக்கிட்டு இந்தப் பக்கமா வந்தேன்.''
துரையப்பன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய சட்டைப் பைக்குள் இருந்த மொபைல்போன் வெளிச்சமாய் ஒளிர்ந்து கூப்பிட்டது. எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்துவிட்டு, இக்பாலை ஏறிட்டான்.
''ஒரு நிமிஷம் தம்பி,'' என்றபடி, சற்று தள்ளிப்போய் நின்று மொபைல் போனை காதுக்கு ஒற்றி பேச ஆரம்பித்தான்.
''சொல்லு கதிர்.''
மறுமுனையில் இருந்த கதிர், சற்றே பதட்டமான குரலில், ''என்ன, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனை பார்த்துட்டியா?''
''இல்ல... பைக் மட்டும் ஒரு மரத்துக்கு அடியில் நிக்குது; ஆளைக் காணோம். இந்த ஏரியாவில் எங்கே போய் என்னைத் தேடிக்கிட்டு இருக்கார்ன்னு தெரியலை; காத்திருக்கிறேன்.''
''துரை... நீ ஒண்ணும் காத்திருக்க வேண்டாம்; அங்கிருந்து கிளம்பிடு.''
''ஏன்?''
''முத்துக்குமரன், உன்னை எதுக்காக தேடிகிட்டு வந்திருக்கார்ன்னு தெரியுமா?''
''எதுக்கு?''
''ரெண்டு மாசமா அவருக்குப் போய் சேர வேண்டிய மாமூல் போய்ச் சேரலை. நம்ம ஆட்கள்ல எவனோ ஒருத்தன், அந்த பணத்தை ஆட்டைய போட்டுட்டான்னு நினைக்கிறேன். அந்த கோபத்துல தான் உன்னைத் தேடிக்கிட்டு வந்திருக்கார். இன்னிக்கு நீ, அவர் கையில் மாட்டினே அவ்வளவு தான். நாளைக்கு காலையில் நீ ஒழுங்கா உட்கார்ந்து, 'டாய்லட்' போக முடியாது.''
''என்ன கதிர் இப்படி பயமுறுத்தறே.''
''பயமுறுத்தலை, நடக்கப் போகிற நிஜத்தைச் சொல்றேன். ஒரு ரெண்டு நாளைக்கு அவர் கண்ணுல படாதே... அவருக்குப் போய் சேர வேண்டிய மாமூல் என்னாச்சுன்னு கண்டுபிடிச்ச பின் நீயும், நானும் அவரை நேர்ல போய்ப் பார்த்து விவரம் சொல்லி, பணத்தைக் குடுத்துட்டு வரலாம். அதுவரைக்கும் நீ கொஞ்சம் வெளியே தலையைக் காட்டாம இரு.''
''அப்படி நான் தலைமறைவாய் இருந்தா, இன்ஸ்பெக்டருக்கு என் மேல இன்னமும் கோபம் அதிகமாகுமே?''
''பணத்தை கண்ணுல பார்த்துட்டாருன்னா போதும். அவருக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும் சரி, 10 விநாடியில காணாம போயிடும். அவரை நான் பார்த்துக்கிறேன். நீ ரெண்டு நாளைக்கு, அந்த அன்பு நகர் ஏரியாவிலேயே இருக்காதே.''
''சரி... நான் ஆனைக்கட்டியில் இருக்கிற அமுதா வீட்டுக்குப் போயிடறேன்.''
''உடனே கிளம்பு. நான், உனக்கு போன் பண்ணின பிறகு கிளம்பி வந்தா போதும்.''
''சரி.''
மொபைல்போனில் பேசி முடித்த துரையப்பன், இக்பால் அருகே வந்தான்.
''நான் கிளம்பறேன் தம்பி... இன்ஸ்பெக்டரை நாளைக்கு காலையில ஸ்டேஷன்ல போய்ப் பார்த்து பேசிக்கிறேன். வீணா உங்களுக்கு தொந்தரவு குடுத்துட்டேன்.''
''அதைப் புரிஞ்சுகிட்டா சரி.''
''அப்புறம் தம்பி, ஒரு சின்ன உதவி. அந்த இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட வந்து என்னோட பேரைச் சொல்லி உங்களுக்குத் தெரியுமான்னு விசாரிச்சா, நான் இங்கே வந்துட்டு போனதை சொல்லிடாதீங்க.''
''சொல்லலை.''
''ரொம்ப நன்றி தம்பி.''
துரையப்பன் வாசற்படியில் இறங்கி, காம்பவுன்ட் கேட்டைத் திறந்து, இருட்டில் கலந்துவிட, கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தான், இக்பால்.
பக்கவாட்டு ஜன்னல் வழியாக எல்லாவற்றையும் பார்த்தபடி சுவரோரமாய் நின்றிருந்த தருண், இக்பாலை நோக்கி வியர்த்த முகமாய் வந்தான்.
''என்ன அந்த துரையப்பன் போயிட்டானா?''
''ம்... போயிட்டான். ஒரு பிரச்னையிலிருந்து எப்படியோ மீண்டுட்டோம். இன்ஸ்பெக்டரோட பைக், நம் வீட்டுக்கு முன்னாடி இருக்கிற மரத்துக்கு அடியில் நின்னுட்டிருந்ததை, நாம கவனிக்க தவறிட்டோம்.''
''அந்த பைக்கை இப்ப என்ன பண்ணலாம். வேறு யாராவது பார்க்கிறதுக்கு முந்தி வீட்டுக்கு பின்புறம் கொண்டு போய் நிறுத்திடலாமா?''
''உடனடியா அதை பண்ண வேண்டாம். இன்னும் அரைமணி நேரத்துக்கு அந்த பைக், அதே இடத்துல இருக்கட்டும். இன்ஸ்பெக்டரோட உடலை, 'டிஸ்போஸ்' பண்ணப் போகும்போது, அந்த பைக்கை நீயோ, இல்லேன்னா ஜோஷோ, ரயில்வே ட்ராக் வரை ஓட்டிக்கிட்டு வர வேண்டியிருக்கும்.''
''உடலை எதுல கொண்டு போகப் போறோம்?''
''என் பழைய, 'மெட்டாடர்' வேனை, 'ஷெட்'ல இருந்து எடுத்துக்க வேண்டியது தான். அதுதான் இது மாதிரியான வேலைகளுக்கு எல்லாம் வசதி.''
இக்பால் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 'லேண்ட் லைன்' டெலிபோன், ஹாலின் மூலையிலிருந்து முணுமுணுப்பாய்க் கூப்பிட்டது.
தருணும், இக்பாலும் சரேலென்ற கலக்கமான பார்வைகளோடு பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
''யாராய் இருக்கும்? போய் போன் காலை எடுத்து பேசு, இக்பால். யாராக இருந்தாலும் தைரியமா பேசு.''
தயக்க நடையோடு போய் ரிசீவரை எடுத்து காதுக்கு கொடுத்து, மெல்ல, ''ஹலோ...'' என்றான், இக்பால்.
''இக்பால், நான் தான் ஜோஷ்... வீட்டு மாடியில் இருக்கிற, 'பேரலல்' டெலிபோன் லைன் மூலமா பேசிட்டிருக்கேன். ஆமா, கீழே என்ன பிரச்னை. யார் வந்துட்டு போனாங்க?''
அப்போது தான், இக்பாலுக்கு இயல்பான சுவாசம் வந்தது.
''நீதானா ஜோஷ்... வேற யாரோன்னு நினைச்சு கொஞ்சம், 'டென்ஷன்' ஆயிட்டேன். கீழே எந்த பிரச்னையும் இல்லை,'' என்றவன், துரையப்பன் வந்து போன விஷயத்தை சுருக்கமாய் சொல்லி, ''முகிலாவைப் பார்த்தியா... எப்படியிருக்கா?'' என, தவிப்பான குரலில் கேட்டான்.
''ரெண்டு பேரும் உடனே புறப்பட்டு மேல வாங்க.''
''ஏன், என்ன விஷயம்?''
''முகிலாவுக்கு நான் இப்போ, முதலுதவி குடுத்துட்டிருக்கேன்.''
''என்னது முதல் உதவியா?''
''ஆமா.''
''என்னாச்சு அவளுக்கு?''
''வந்து பாருங்க தெரியும்,'' என்று, ஜோஷ் சொல்லிவிட்டு, ரிசீவரை வைத்து விட்டான்.
''விஷயம் என்னான்னு தெரியலையே?'' என்று புலம்பியபடி, மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தான், இக்பால்.

இருவரும் மூச்சு வாங்கியபடி, படிகளில் வேக வேகமாய் ஏறி, மாடி வராந்தாவில் நடந்து, திறந்திருந்த இரண்டாவது அறைக்குள் நுழைந்தனர்.
அறையின் வெண்மையான மார்பிள் தரையில் ரத்தத்துளிகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டது போல் தெரிய, கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள், முகிலா. அவளுடைய தலைமாட்டில் நின்றபடி, பஞ்சை பேண்டேஜ் துணியில் வைத்து, அவளுடைய நெற்றியில் கட்டிக் கொண்டிருந்தான், ஜோஷ்.
''ஜோஷ்... முகிலாவுக்கு என்னாச்சு?'' பதட்டமாய் கேட்டான், தருண்.
''தெரியலை. நான் கதவை திறந்துகிட்டு உள்ளே நுழைஞ்சப்ப, முகிலா கீழே விழுந்து கிடந்தா. அரைகுறை மயக்கத்துல எந்திரிச்சு கதவைத் தட்டும்போது தடுமாறி விழுந்ததால, அவளோட நெற்றியில் அடிபட்டு இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.''
''காயம் பெரிசா?''
''கொஞ்சம் ஆழமான
காயம் தான். நான் சரியான நேரத்துல வந்ததால, முகிலாவுக்கு முதலுதவி பண்ண முடிஞ்சுது.''
''மறுபடியும், 'செடக்டிவ்' ஊசி போட்டியா?''
''இல்ல, இனிமேத்தான் போடணும்.''
''ஊசி போட்ட பின் இவளை கட்டிலோடு சேர்த்து நல்லா கட்டிப் போட்டுட்டு, வாய்ல, 'பிளாஸ்டரை'யும் ஒட்டிடு. நாளைக்குக் காலையில் தான் இவளுக்கு முழிப்பு வரணும். ஏன்னா, இன்னிக்கு ராத்திரி நம்ம மூணு
பேருக்கும் நிறைய வேலையிருக்கு,'' என்றான், தருண்.
கீழே எதையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான், இக்பால். அவனுடைய தோளைத் தட்டியபடி, ''என்ன, அப்படிப் பார்த்துட்டிருக்கே?'' கேட்டான், தருண்.
இக்பாலின் உலர்ந்து போன உதடுகளில், ஒரு குரூரமாக புன்னகை பரவியிருந்தது.
''தருண்... என்ன அழகான ஒரு, 'காம்பினேஷன்' பார்த்தியா?''
''காம்பினேஷனா?''
''ம்... இந்த பளிர் வெள்ளை மார்பிள் தரையில், முகிலாவோட ரத்தத்துளிகள் எவ்வளவு நேர்த்தியாக அழகா சிதறியிருக்கு. இதை பாக்கும்போது உனக்கு என்ன தோணுது?''
''சொல்லட்டுமா?''
''சொல்லு.''
''ஒரு ரோஜாப்பூவோட இதழ்களை அள்ளித் தெளிச்ச மாதிரியிருக்கு.''
''நான் என்ன நினைச்சேனோ அதையே நீயும் சொல்லிட்டே.''
முகிலாவின் நெற்றிக்கு அடர்த்தியான பேண்டேஜ் கட்டைப் போட்டுவிட்டு, கோணல் சிரிப்போடு இக்பாலையும், தருணையும் ஏறிட்டான், ஜோஷ்.
''எனக்கு எப்படி தோணுது தெரியுமா?''
''சொல்லு.''
''சிவப்பு ஸ்டிக்கர் பொட்டுக்களை வீசி எறிஞ்ச மாதிரி இருக்கு.''
''உன்னோட ரசனையே தனி தான்,'' இக்பால் சொல்லி சிரித்துக் கொண்டிருக்கும் போதே, அவனுடைய அதி நவீனமான ப்ளாட்டினம் ப்ளாக்
12 ஜி.பி., ரேம் மொபைல்போன், 'வைபரேஷனில்' தன்னுடைய உடம்பை உதறி வெளிச்சத்தை கசிய விட்டது.
எடுத்து, அழைப்பது யார் என்று பார்த்தான். மொபைல்போனின் மறுமுனையில் அவனுடைய அப்பா, தாஹிர்.
''சொல்லுங்க டாட்.''
''என்ன இக்பால்... நம்ம வீட்ல, 'மொபைல் ஜாமர் ஆன்'ல இருக்கும் போலிருக்கே?''
''ஆமா டாட். துாங்கப் போற நேரத்துல தேவையில்லாத போன் அழைப்பு வரும். அதான், 'ஜாமரை ஆன்' பண்ணி வெச்சிருக்கேன். என்னோட இந்த பர்சனல் போனுக்கு நீங்க எப்ப வேணும்ன்னாலும் வரலாமே. இதுல தான், 'ஜாமர் பிரேக்கிங் டிவைஸ்' இருக்கே.''
''தெரியும்... அதனால் தான் இந்த போனுக்கு வந்தேன்.''
''என்ன விஷயம் டாட்?''
''எனக்கு இன்னும் ஒரு மணி நேரத்துல மும்பையிலிருந்து அபுதாபிக்கு ப்ளைட். நான் இப்போ மும்பை ஏர்போர்ட்ல இருக்கேன். இன்னிக்கு மதியம், கோயமுத்துாரிலிருந்து மும்பை புறப்படறதுக்கு முன்னாடி, ஒரு விஷயத்தை உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.''
''என்ன டாட்?''
''கவனமா கேளு. நாளைக்கு காலையில் சரியா, 10:00 மணிக்கு டில்லியிலிருக்கிற, 'இன்ஸ்டியூட் ஆப் மென்டல் ஹெல்த் சைக்யாட்ரி டிபார்ட்மென்ட்'டைச் சேர்ந்த டாக்டர் ப்ரவீண் குப்தாவுக்கு, நீ போன் செய். ரெண்டு மாசத்துக்கு முன்ன, உனக்கு அவர்கிட்ட, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கியிருந்தோம். இது ஒரு, 'டெலி ஹெல்த் ட்ரீட்மென்ட்!'
''டாக்டர் கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் நிதானமா, யோசிச்சு பதில் சொல்லணும். ப்ரவீண் குப்தா, மிகவும் திறமையான டாக்டர். அவரோட, 'அப்பாயின்ட்மென்ட்' கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். உனக்கு கிடைச்சிருக்கு. தவற விடாதே. உனக்கு இருக்கிற அந்த விபரீதமான மனரீதி பிரச்னை சரியாகணும்ன்னா, 'டெலி ஹெல்த் ட்ரீட்மென்ட்' ரொம்பவும் முக்கியம்.''

— தொடரும்
ராஜேஷ்குமார்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anu -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-202212:43:20 IST Report Abuse
Anu super story ..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X