பான் இந்தியா நடிகரான, சந்தானம்!
சமீபகாலமாக, தமிழ் கதாநாயகர்களில், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என, பல நடிகர்களின் படங்கள், மூன்று, நான்கு மொழிகளில் தயாராகி வருகிறது. அதோடு, சில முன்னணி, கதாநாயகர்கள் இன்னும் தமிழ்நாட்டுப் பார்டரையே தாண்டவில்லை.
இந்நிலையில், காமெடியனாக இருந்து, 'ஹீரோ'வான சந்தானம் நடிக்கும் ஒரு படமும், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என, மூன்று மொழிகளில் தயாராகிறது. அதோடு, இந்த படத்தில் முன்னணி, 'ஹீரோ'களுக்கு ஜோடியாக நடித்த இரண்டு நடிகையர், சந்தானத்துடன், 'டூயட்' பாடுகின்றனர்.
அந்த வகையில், இதுவரை கோலிவுட் என்ற குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டி வந்த சந்தானமும், இந்தப் படத்திலிருந்து, பான்- இந்தியா நடிகராக களம் இறங்கி இருக்கிறார்.
சினிமா பொன்னையா
ஹாலிவுட் பேயாக களமிறங்கும், ஆண்ட்ரியா!
அரண்மனை படத்தில் பேயாக நடித்து மிரட்டிய, ஆண்ட்ரியா, தற்போது, பிசாசு-2 படத்திலும், பேயாக நடித்திருக்கிறார். மேலும், சில இயக்குனர்கள், அவரை, 'ஹாரர்' படங்களில் நடிக்க வைப்பதற்கு கதை சொல்லி இருக்கின்றனர்.
இந்நிலையில், வழக்கமான பேய் கதை காட்சிகளில் தொடர்ந்து நடித்தால், ரசிகர்களுக்கு போரடித்து விடும் என்று கருதும், ஆண்ட்ரியா, கொலை நடுங்க வைத்த சில ஹாலிவுட் படங்களை, கோலிவுட் இயக்குனர்களிடத்தில் பட்டியலிட்டு, அதே பாணியில், கதை பண்ணுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். முக்கியமாக, வழக்கமான கோலிவுட் பேயாக இல்லாமல், தன்னை ஹாலிவுட் பேயாக காண்பிக்குமாறு, கேட்டு வருகிறார்.
எலீசா
வரலட்சுமிக்கு, வந்த துணிச்சல்!
சினிமாவில், கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி, தற்போது, வில்லி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். அதோடு, தெலுங்குக்கு சென்ற பின், கவர்ச்சி கதவுகளையும் திறந்து விட்டுள்ள, வரலட்சுமி, வெயிட்டான கதாபாத்திரங்கள் என்றால், முதிர்ச்சியான வேடங்களில் நடிப்பதற்கும் தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.
மேலும், 'சினிமாவில், எந்த நடிகையருக்கும் நான் போட்டியாக இருக்க விரும்பவில்லை. எனக்கு நானே என, நான் ஏற்கும் கதாபாத்திரங்களை மட்டுமே போட்டியாக கருதி, நடித்து வருகிறேன்...' என்று, அதிரடியாக கூறுகிறார்.
— எலீசா
தட்டி துாக்கும், லாரன்ஸ்!
ரஜினியின் தீவிர ரசிகரான, ராகவா லாரன்ஸ், அவர் நடித்த, சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ரஜினியை பொறுத்தவரை, இரண்டாம் பாகங்கள் மீது பெரிதாக நம்பிக்கை இல்லாதவர். அதன் காரணமாகவே, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட நடிக்க மறுத்து விட்டார்.
இந்நிலையில், ரஜினியின், சந்திரமுகி படத்தில் நடிக்கும், ராகவா லாரன்ஸ், ரஜினியின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களை பட்டியலிட்டு, அதன் இரண்டாம் பாகங்களுக்கு, அவரது பாணியில் கதைகள் தயார் செய்து, தான் நடிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* 'நியூமராலஜி'யில் அதிக நம்பிக்கை கொண்டவரான சிம்பு, மாநாடு படத்தில், சிலம்பரசன் டி.ஆர்., என்று தன் பெயரை டைட்டிலில் போட்டிருந்தார். அந்தப் படம்,
* 'சூப்பர் ஹிட்' அடித்ததால், 'இனிமேல் தொடர்ந்து, சிலம்பரசன் டி.ஆர்., என்றே டைட்டில் கார்டில் போடப் போகிறேன்...' என்கிறார்.
* மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட, நஸ்ரியா, எட்டு ஆண்டுகளுக்கு பின், தெலுங்கு நடிகர் நானியுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தப் படம் தமிழில், அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாக உள்ளது.
* கடந்த, 1999ல் அஜித், சிம்ரன், ஜோதிகா நடித்த, வாலி படம், 23 ஆண்டுகளுக்கு பின், ஹிந்தியில், 'ரீ - மேக்' ஆகிறது.
அவ்ளோதான்!