அன்பு சகோதரிக்கு —
நான், 50 வயதான இல்லத்தரசி. பல்கலைக்கழகத்தில் ஆங்கில பாடப்பிரிவில் துறைத்தலைவராக இருக்கிறார், கணவர். எங்களுக்கு திருமணமாகி, 27 ஆண்டுகள் ஆகின்றன.
எங்களுக்கு ஒரே மகள். வரலாறு பாடத்தில் இளம் முனைவர் பட்டம் பெற்ற அவளுக்கு, கடந்தாண்டு தான் திருமணம் செய்து வைத்தோம். நாக்பூரில் பணிபுரிகிறார், மருமகன்.
மகள் திருமணமாகி போனவுடன், எங்களை தனிமை சூழ்ந்து கொண்டது. நான் கடந்த, 20 ஆண்டுகளாக, 'சைனஸ்' பிரச்னையால் அவதியுறுகிறேன். 'சைனஸ்' பிரச்னைக்கு ஹோமியோபதி மருந்து எடுத்து வருவதால், காபி குடிப்பதை அறவே நிறுத்தி விட்டேன்.
கணவரோ காபி பிரியர். தினமும் நான்கு தடவை காபி குடிப்பார். நான்கு தடவையும் நான் தான் காபி போட்டு தரவேண்டும்.
காபி கொட்டைகளை வறுத்து, பொடியாக்கி, சிக்கரி கலக்காமல் பில்டர் காபி தயாரித்து தரவேண்டும். காபி சுவையில் சிறு குறை இருந்தாலும் கோபப்படுவார்.
உலகத்தில் உள்ள அத்தனை காபி வகைகளையும், 'நெட்'டில் பார்த்து அதன்படி போட்டு கொடுக்கச் சொல்வார். அவற்றை தயாரித்துக் கொடுக்கும்போது, அந்த வாசனை என் மூக்கை தாக்கி அலர்ஜியை ஏற்படுத்தும்.
நீங்களே தயாரித்து குடியுங்கள் அல்லது பணியாள் வைத்து தயாரித்து குடிக்குமாறு கூறினால், கேட்க மறுக்கிறார்.
விடுமுறை நாட்களில் காரை எடுத்து, கும்பகோணம் போய் நான்கைந்து காபி வரை குடித்து விடுவார். அப்போதும் துணைக்கு நான் செல்ல வேண்டும்.
'உங்களுக்கு சுகந்தமான பானம், காபி; எனக்கு அது, நோய் பெருக்கும் நாற்றம். ஒவ்வொரு முறையும் உங்களுக்கு காபி போடும் போது, அதன் நாற்றம் என் மூக்கை ஊடுருவி, ஹோமியோபதி மருந்தின் செயல்திறனை அழித்தொழிக்கிறது. 'சைனஸ்' உடன், 20 ஆண்டுகளாக போராட உங்களின் காபி ஆசையே முதல் காரணம். என் மீது சிறிதேனும் காதல் இருந்தால், காபி குடிக்கும் பழக்கத்தை அறவே விட்டிருப்பீர்கள்...' என, பலமுறை, மனம் பொருமி வெடித்து விட்டேன்.
'காபி தான் என் முதல் காதலி; என் முதல் மனைவி. காபியா, நீயா என்ற நிலை வந்தால், காபி பக்கம் தான் சாய்வேன். 'சைனஸ்' பிரச்னை உள்ள உன்னையும் சகித்துக் கொண்டு வாழ்கிறேனே... அது போதாதா?' என்கிறார்.
எனக்குள் கோபம் தலைவிரித்து ஆடியது.
இவரோடு வாழ்ந்தது போதும், விவாகரத்து பெற்று, நம் வழியில் போகலாம்; அவர் காபி கடையிலேயே குடியிருக்கட்டும்.
வழக்கறிஞரை பார்த்து விட்டேன். முதல் வேலையாக நோட்டீஸ் தயார் செய்து அனுப்பி விட்டேன். மகள் வீட்டில் போய் நிற்க மாட்டேன். என்னிடம் பண சேமிப்பும், நகைகளும் உள்ளன. நகைகளை விற்று, சேமிப்புடன் நிரந்தர வைப்பு தொகையாக வங்கியில் போட்டு, மாத வட்டி பெறுவேன்.
எந்த வங்கியில் சிறப்பான வட்டி கிடைக்கும் சொல்லுங்கள்.
— இப்படிக்கு,
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
மருந்தால் குணமாகும் அல்லது காலப்போக்கில் தானாகவே குணமாகும் நோய்க்கு அறுவை சிகிச்சை தேவையா? விவாகரத்து இறுதி தீர்வு அல்ல.
அசைவ ஆணை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள், சைவப் பெண். தான் சாப்பிடா விட்டாலும் கணவனுக்காக நாற்றத்தை பொறுத்து, அசைவ உணவுகளை சமைக்கிறாள்.
உன் கணவருக்கு காபி குடித்தல் ஒரு போதை. காபி குடிக்கும் பழக்கத்தால், குடும்பத்துக்கும், உனக்கும் செய்ய வேண்டிய கடமைகளை, கணவர் செய்ய மறந்தாரா, இல்லையே!
கணவரின் காபி குடித்தலை பற்றி விமர்சனம் செய்து, அவரது, 'ஈகோ'வை கிளப்பினாய். பதிலுக்கு அமில வார்த்தைகளை கொட்டி விட்டார்.
உனக்கு தேவை சகிப்புணர்வும், சற்றே காதலும் தான். அவருக்கு காபி தயாரிக்கும் போது, மூக்கையும் வாயையும் இணைத்து, 'மாஸ்க்' அணிந்து கொள். காபி வாசனை அல்லது நாற்றத்தை நுகர்ந்தால் ஹோமியோபதி மருந்து செயலற்று போகும் என, யார் சொன்னது?
நீண்ட நாள் வியாதி, 'சைனஸ்!' அது மெதுவாகத்தான் குணமாகும்.
நீ பொது இடத்தில் நிற்கிறாய், ஒருவர் புகைக்கும் சிகரெட் புகை, உன் நாசியை தாக்குகிறது. சிகரெட் புகைக்கும் நபரை சிரச்சேதமா செய்ய முடியும்?
பான்பராக்கை புளிச்புளிச்சென்று துப்புகின்றனர்; எச்சிலை காரி உமிழ்கின்றனர்; குப்பையை அள்ளி கொட்டுகின்றனர். அவர்கள் எல்லாரையும் உன்னால் நாடு கடத்த இயலுமா?
நல்ல மனநிலையில் கணவர் இருக்கும் போது, அவரிடம் பதவிசாக பேசு. காபியை அவரே தயாரிக்கட்டும் அல்லது பணியாள் தயாரிக்கட்டும். காபிக்கு பதில் தேநீர் குடிக்கிறாரா என கேள்.
வங்கி வட்டி விகிதத்தை இப்போது வெகுவாக குறைத்து விட்டனர். 10 லட்ச ரூபாயை, 'பிக்ஸட் டெபாசிட்' ஆக போட்டால், 5,400 ரூபாய் கிடைக்கும். உன் தனிக்குடித்தனத்துக்கு போதுமா?
காபியை முதல் காதலி என கூறும் கிழம், நீ இல்லாவிட்டால் ஆறே மாதங்களில் செத்துவிடும். அவரை புதைத்த அல்லது எரித்த இடத்தில் காபியை தெளித்து, அவர் ஆன்மாவை சாந்தி படுத்துவாயா?
கிழவரையும், அவரது காபி காதலையும் மன்னித்து ஏற்றுக்கொள்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்