எனக்கு கோபம் கோபமாக வந்தது. 'என்னிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. எல்லாம் இவர்களாகவே முடிவு செய்வரா... அதற்கு நான் கட்டுப்பட வேண்டுமா... என்ன அநியாயம் இது?' என, என் மனம் உலைகலனாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
'ம்ஹூம்... இப்பல்லாம் கோபப்பட்டா, என் வார்த்தைக்கோ, கோபத்துக்கோ எந்த அர்த்தமும் இருக்காது. எனக்கு எந்த நல்லதும் நடக்காது.
'நாளைக்கு, அந்த மாப்ள வீட்டுக்காரங்க முன், கோவத்த காட்டணும்... அப்பதான் இந்த சித்திக்கும், அவங்க பேச்சக் கேட்டு, தலையாட்டற அப்பாவுக்கும், மூஞ்சில கரிய பூசினது மாதிரி இருக்கும். என்ன யாருன்ன நெனச்சாங்க... இருக்கட்டும், நான் யார்ன்னு நாளைக்கு காட்றேன்...' என்று மனதுக்குள் கறுவியபடி அமர்ந்திருந்தேன்.
மறுநாள் அழகுற விடிந்தது. ஒரு பக்கம், தடபுடலாக சமையல் தயாராகிக் கொண்டிருக்க, மறுபுறம், சொந்தங்களின் வருகையால், வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.
என்னை குளித்து தயாராகச் சொன்னாள், சித்தி. மனதுக்குள் கடுத்தபடியே குளித்துத் தயாராகி வந்தேன்.
'ஏதோ ஒரு பளபளக்கும் பட்டுப்புடவையை அணிந்து கொள்...' என்று சொல்லிச் சென்றாள், சித்தி.வேண்டா வெறுப்பாக அதை அணிந்து, அதற்கேற்ற அணிகலன்களையும் அணிந்து கொண்டேன். ஆனால், அப்போதும் என்னைப் பார்த்து வியந்து, திருஷ்டி வழித்தாள், சித்தி.
''அக்கா... நீ ரொம்ப அழகா இருக்க,'' என்றாள், எட்டாவது படிக்கும், என் தங்கை.
நான் அவளை முறைத்தேன். சித்தியின் வயிற்றில் பிறந்த ஒரே காரணத்தால் அவளை எனக்கு பிடிக்காது.
''கண்ணு... அக்கா பக்கத்திலயே இரு,'' என்று, தன் மகளிடம் சொல்லிவிட்டுப் போனாள், சித்தி.
சித்தி போனதும், ''ஏய்... என்னை, 'டிஸ்டர்ப்' பண்ணாத... போ,'' என்று, தங்கையை விரட்டினேன்.
என்னை முறைத்தபடியே அவள் வெளியே ஓடினாள்.
''மாப்ள வீட்டுக்காரங்க வந்தாச்சு,'' யாரோ குரல் கொடுத்தனர்.
வந்தவர்களை சித்தி வரவேற்கும் சத்தம் நன்றாகவே கேட்டது.
'நல்லா பல்ல காட்டிக் காட்டி இப்பவே இளிச்சுக்கோங்க... இன்னும் கொஞ்ச நேரத்தில, நான் உங்கள அழ வெக்கப் போறேன்...' என்று, மனதுக்குள் சொல்லி, குரூரமாய் புன்னகைத்தேன்.
வந்தவர்களுக்கு காபி, பலகாரம் எல்லாம் போய்க் கொண்டிருந்தது. சூடான வெங்காய பஜ்ஜியின் மணம் மூக்கைத் துளைத்தது. மெதுவாக என் அறையிலிருந்து எட்டிப் பார்த்தேன். சொந்தக்காரப் பெண் ஒருத்தி, என்னை கண்ணாலேயே அதட்டினாள்.
மனதுக்குள் அவளைத் திட்டிக் கொண்டே சமையலறை நுழைந்து, சுடச் சுட தயாராக இருந்த பஜ்ஜியை எடுத்து, மெதுவாக ரசித்து, ருசித்து, சாப்பிட்டேன்.
''என் கண்ணு... பஜ்ஜி நல்லாயிருக்காம்மா,'' என்று, பின்னாலிருந்து சித்தியின் குரல் வந்தது.
'இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல. எப்ப பாத்தாலும் கண்ணு, மூக்குன்னு, 'சீன்' போட வேண்டியது...' மனதுக்குள் சித்தியைத் திட்டினேன்.
''இன்னொண்ணு எடுத்துக்கம்மா,'' மேலும் கொஞ்சினாள், சித்தி.
அவளுக்கு பதிலெதுவும் சொல்லாமல் என் அறைக்குத் திரும்பினேன்.
யாரோ ஒரு பெரிசு, ''பொண்ண கூட்டிட்டு வாங்க,'' என்றார்.
தங்கை, என் கையைப் பிடித்துக் கொள்ள, என்னை அழைத்துப் போய் அவர்கள் முன் காட்சிப்படுத்தினாள், சித்தி.
வந்திருந்தவர்களிடம், என்னை நன்றாக வளர்க்க, என்னவெல்லாம் செய்தார் சித்தி என, அவரின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தார், அப்பா.
மாப்பிள்ளை வீட்டார் கும்பலில் நடு நாயகமாக, கருகருவென்று தாட்டியான ஆள், வெள்ளைச் சட்டை - வேட்டியில் அமர்ந்திருந்தான். அவனருகில், காஸ் சிலிண்டர் போல ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.
அவளுடைய பல்லெல்லாம் வெற்றிலை, பாக்கு போட்டு, கறையாகியிருந்தது. ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டிருந்தாள். பார்ப்பதற்கு திருவிழாக்களில் வரிசையாக அமர்ந்து, குச்சி வைத்துக் கொண்டு குறி சொல்லி, ஜோசியம் பார்க்கும் பெண்மணி போலிருந்தாள்.
''ம்... பொண்ணு பார்க்க லச்சணமாதான் இருக்கா. வீட்டு வேலல்லாம் செய்வாளா?'' கேட்டாள், ஜோசியக்காரி.
''அதென்ன அப்டி கேட்டீங்க... எங்க பொண்ணு வீட்டு வேலைல்லாம் அழகா செய்வா.கண் பார்த்தா கை செய்யும்ன்னு சொல்வாங்களே அது மாதிரி... அவ சமையல் செய்து வெச்சா, ஊரே மணக்கும். சமையல் செய்து வெச்ச இடம், கண்ணுல ஒத்திக்கறாப்ல இருக்கும். காலேஜ்ல படிக்கறா... நாலு பேருக்கு, 'பீஸ்' வாங்காம, டியூஷன் சொல்லித் தரா.''
என் பெருமைகளை அடுக்கத் துவங்கினாள், சித்தி.
'இதுக்கொண்ணும் குறைச்சலில்ல...' என்று நினைத்துக் கொண்டேன்.
''படிப்பா... இப்பவே கண்டீஷனா சொல்லிடறேன், அதெல்லாம் கண்ணாலத்துக்கப்றம் நிப்பாட்டிடணும்... எங்கூட்டு பொண்ணுங்கல்லாம் அஞ்சாங் கிளாசுக்கு மேல படிச்சதில்ல... படிக்க வெக்கவும் மாட்டோம்... அவ்ளோ ஏன், எங்கூட்டு பையனுங்களே, 10வதுக்கு மேல படிச்சதில்ல,'' என்று சொல்லி, இடி மாதிரி சிரித்தாள், ஜோசியக்காரி.
என் தலையில் இடி இறங்கியது போலிருந்தது. சித்தியையும், அப்பாவையும் அவமானப்படுத்துவது கூட ரெண்டாம் பட்சம் தான். இந்த மாப்பிள்ளையை முதலில் அடித்து விரட்ட வேண்டுமென்று எனக்குள் வெறியே வந்தது.
''மாப்ள பையன் என்ன வேல பார்க்கறாரு?'' சந்தேகமாய்க் கேட்டாள், சித்தி.
''அவன் எதுக்கு வேல பார்க்கணும்... எங்களுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு. உக்காந்து தின்னாலே மூணு தலைமுறைக்கு வரும். உங்க வீட்டு பொண்ண எங்கியோ கடைத் தெருவில பார்த்தானாம்... அவனுக்கு ரொம்ப புடிச்சிதாம்... அதான் பொண்ணு பார்க்க வந்தோம்,'' என்றாள், ஜோசியக்காரி.
மாப்பிள்ளை தடியன், என்னை விழுங்குவது போல பார்த்தான்.
அவன் கண்களை அப்படியே நோண்டி எடுக்க வேண்டும் போல, கோபம் கோபமாக வந்தது எனக்கு.
''இங்க பாரும்மா பொண்ணு... நா கண்ணாலத்துக்கு முன்னாலயே சொல்லிடறேன், எங்கூட்டு பையனுக்கு ஏற்கனவே கண்ணாலம் ஆகி, ஒரு குழந்தைக்கு அப்பா ஆகிட்டான். இப்ப அவனுக்கு, அவன் பொண்டாட்டிய புடிக்கல...
''அதனால, அவள பஞ்சாயத்துல சொல்லி, அத்து வுட்டுட்டோம்... அவன் பெத்த பொட்டக் கழுதையும், பழைய பொண்டாட்டியோடவே துரத்திட்டோம். அதனால, நீ என்ன பண்ணணும்னா, கண்ணாலம் ஆகி வந்த, 10ம் மாசம், அழகான ஆம்பள புள்ளைய பெத்து, என் கையில குடுக்கணும்... என்ன சரிதானே,'' என்று சொல்லி, பெரிய குரலில் சிரித்தாள்.
அவளோடு வந்த கும்பலும் கொல்லென்று சிரிக்க, மாப்பிள்ளை தடியன், இப்போது இன்னும் உரிமையுடன் என்னை, 'சைட்' அடித்தான். அவன் தலையில் ஓங்கி ஒன்று போடுவதற்காக, அறையில் எதாவது கனமான பொருள் இருக்கிறதா என்று, என் கண்கள் தேடியது.
''எந்திரிம்மா, எந்திரி...'' அதிகாரமாய் சித்தியின் குரல் ஒலிக்க, திடுக்கிட்டு பார்த்தேன்.
''ஏய், என்னா... மரியாதையில்லாம பேசற... நா உனக்கு வருங்கால சம்பந்தி. மனசுல வெச்சிகிட்டு பேசு,'' என்று பதிலுக்குக் கத்தினாள், ஜோசியக்காரி.
''வெளியப் போடீ... வந்துட்டா பெரிசா சம்மந்தம் பேச... பிள்ளைக்கும் படிப்பு கிடையாது; உங்க வீட்டு பொண்ணுங்களுக்கும் படிப்பு கிடையாது; படிக்கவும் வெக்க மாட்டீங்க... இந்த கேடு கெட்டவனுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி, ஒரு குழந்தையும் இருக்கு. ஆனா, இப்ப கட்டுன பொண்டாட்டிய பிடிக்கலன்னு அத்து வுட்டுட்டு, பெத்த புள்ளையையும் துரத்தி வுட்டாச்சு...
''உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? மனுஷங்களா நீங்கல்லாம், இதுல எங்க வீட்டு பொண்ண இவங்களுக்கு பார்த்ததும் புடிச்சிதாம், நாங்க கட்டி குடுக்கணுமாம்... இவங்க வீட்டுக்கு போனதும், எங்க வீட்டு பொண்ணு, படிப்ப நிப்பாட்டிட்டு ஆம்பளப் புள்ள பெத்து தரணுமாம்... புள்ள பெத்தப்றம், அந்த புள்ளைய நீ தறுதலையா வளர்ப்ப...
எங்க வீட்டு பொண்ணு, சாணி தட்டணுமோ?'' பத்ரகாளியாய் கத்தினாள், சித்தி.
நான் பேயறைந்தது போல நின்றேன்.வந்தவர்கள் எல்லாம் சித்தியைப் பார்த்து, சபித்தபடியே எழுந்து சென்றனர்.
''ஏன்யா, மாப்பிள்ள வீடு யாரு என்னன்னு விசாரிக்க மாட்ட... பெத்த பொண்ணுக்குதானே மாப்பிள்ள பார்க்கற... இப்டியா கேடு கெட்டவனெல்லாம் பொண்ணு பார்க்க கூட்டிட்டு வருவ!'' அப்பாவைப் பார்த்து கத்தினாள், சித்தி. தலையைக் குனிந்து கொண்டார், அப்பா.
''ம்மாடி கண்மணி... நீ ஒண்ணும் விசனப்படாதம்மா... உன் அழகுக்கும், நீ படிச்ச படிப்புக்கும், 'பீஸ்' கூட வாங்காம நாலு பேருக்கு நீ படிப்பு சொல்லிக் குடுக்கற உன் நல்ல மனசுக்கும், ராஜா மாதிரி ஒரு மாப்ள வருவான்.
''நீ போய் முகத்த கழுவிகிட்டு சாமி கும்புடு. மனசு சமாதானம் ஆகும். என்ன மாதிரி ரெண்டாந்தாரமால்லாம் போய் உன்ன கஷ்டப்பட வுட மாட்டேன் கண்ணு,'' என்று, சமாதானம் சொல்லிச் சென்றாள், சித்தி.
சித்தியைக் கட்டிபிடித்து அழுதேன்.
''ஐய இதென்ன... இந்த மாப்ள இல்லன்னா இன்னொருத்தன். இதுக்கா இப்டி அழுவற,'' என்று, கண்ணீரைத் துடைத்தாள், சித்தி. எதுவும் புரியவில்லை என்றாலும், தங்கையும் என் கண்களைத் துடைத்து விட்டாள்.
எப்படி என்னுள் சித்தியின் மேல் வெறுப்பு வந்ததென புரியவில்லை. என், ஐந்து வயதில் அம்மா இறந்து விட, 10 வயதிருக்கும்போது, இவரை கல்யாணம் செய்து கொண்டு வந்தார், அப்பா.
ஆரம்பத்தில் எனக்கு சித்தியின் மேல் விருப்பு, வெறுப்பு எதுவுமில்லை. ஆனால், ஒருமுறை திருவிழாவில் நான் ஏதோ கேட்டு அடம் பிடிக்க, அதை வாங்கித் தர மறுத்து, என்னை கோபித்துக் கொண்டாள், சித்தி.
நான் அழுது அடம் பிடித்ததைப் பார்த்த, அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள், 'இவ பெத்த பொண்ணுன்னா வாங்கி குடுத்திருப்பா... மூத்தாள் பொண்ணுதானே... அதான் இப்படி கோவப்படறா...' என்று, சித்தியை திட்ட, அது என் மனதில் நன்றாகப் பதிந்து விட்டது.
அன்றிலிருந்து சித்தியை வெறுக்கத் துவங்கினேன். நாளடைவில் என்ன சொன்னாலும், செய்தாலும், அது அவர் செய்யும் துரோகமாகவே தோன்றத் துவங்க, சித்தி என்றாலே என் எதிரி என, மனதில் வெறுப்பை வளர்த்திருந்தேன்.
ஆனால் இன்று, எனக்காக சித்தி பேசியதைக் கேட்டதும், 'அப்ப சித்தி எப்பவுமே எனக்கு நல்லதுதான் செய்துருக்காங்க...' என்று மனம் தெளிந்தேன். பழைய நிகழ்வுகள் அனைத்தையும் மனதுக்குள் நினைத்து நினைத்து வியந்தேன்.
சித்தியின் நியாயமான கோபங்கள், கண்டிப்புகள், அவருடைய ஆசைகள் எல்லாம் இப்போதுதான் என் கண்ணிலும், கருத்திலும் பதியத் துவங்கியது.
இப்போதெல்லாம் சித்தியும், தங்கையும் தான், உற்ற தோழியராக இருக்கின்றனர்.
கல்லுாரி முடிந்து வந்ததும், எனக்காக சிற்றுண்டி வைத்துக் கொண்டு ஆவலுடன் காத்திருக்கும் சித்தியின் ஒரே வருத்தம், தான் நிறைய படிக்க முடியவில்லையே என்பதுதானாம்.
சித்தியின் விருப்பம் நிறைவேற, நான் பாடுபடுகிறேன்.
எப்படி என்கிறீர்களா... நாந்தான் இப்போது சித்திக்கு டியூஷன் டீச்சர். இந்த ஆண்டு நடக்கவிருக்கும், 10வது பொதுத்தேர்வை எழுதப் போகிறார், சித்தி.
என்ன, 'ஙே'ன்னு முழிக்கறீங்க? என் சித்திக்கு, 'ஆல் த பெஸ்ட்' சொல்லிட்டுப் போங்க!
டி. அன்னப்பூரணி