ச.சந்தியாவின் பள்ளிப்பருவம் பேருந்து வழித்தட எண் 96. கோவை, காந்திபுரத்தில் இருந்து சின்னாம்பதி வரும் அப்பேருந்து அன்று வரவில்லை என்றால், மற்ற மாணவர்களைப் போல் சந்தியாவிற்குள்ளும் விடுமுறை கொண்டாட்டம் பற்றிக்கொள்ளும். ஆனால், அது சில நிமிடங்கள் மட்டுமே!
தகவல் அறிந்து வரும் அப்பாவோடு பள்ளி செல்கையில் சந்தியா கேட்கும் கேள்வி...
'மத்தவங்க எல்லாம் அவங்க பிள்ளைகளை சுதந்திரமா விடுறப்போ, நீங்க மட்டும் ஏன்ப்பா என்னை கொடுமைப்படுத்துறீங்க?'
'அது... எப்படியாவது நீ படிக்கணும்மா; நீ படிச்சா நம்ம கிராமமே முன்னேறிடும்' அப்பா இப்படி சொன்னதும், 'நான் படிச்சா கிராமம் எப்படி முன்னேறும்' என்று அந்த வயதில் சந்தியாவிற்கு தோன்றியிருக்கிறது. இன்று...
பட்டப்படிப்பு முடித்து தனியார் பணியில் இருந்த சந்தியாவிற்கு விடுதியில் தங்கி பணிபுரிய வேண்டிய கட்டாயம். மூன்றே மாதங்கள்தான்; 'கொரோனா' சூழலில் வேலை இழந்து கிராமம் திரும்பி விட்டார்.
ஊரடங்கில் என்ன செய்தீர்கள் சந்தியா?
எங்க கிராமத்துல நாலைஞ்சு பேர்கிட்டே ஆன்ட்ராய்டு போன் இருக்கு. ஆனா, ஊருக்குள்ளே சிக்னல் கிடைக்காதுங்கிறதால 'ஆன்லைன்' கல்வி எடுபடலை. 'ஊர் பிள்ளைகள் படிப்புல பின்தங்கிடக் கூடாது'ன்னு பாடம் நடத்த முடிவு பண்ணினேன்.
கட்டணம் எவ்வளவு வாங்குனீங்க?
காட்டு வேலைக்கும், 100 நாள் வேலைக்கும் போய் பசியை விரட்டுறவங்க எங்க மக்கள்; தவிர, அறிவை பகிர பணம் வாங்குறதுல எனக்கு உடன்பாடில்லை!
இவரது கற்பித்தலின் படிநிலைகள்... முதலில் விளையாட்டு; பின்னர் நடனம்; நடனத்திற்கு பின்பே வகுப்பு! காரணம் கேட்டால், 'கஷ்டப்படுற ஜனங்க; கல்வி சந்தோஷமா இல்லேன்னா எழுந்து போயிடுவாங்க' என்கிறார்.
கோவை பழங்குடி மலைக்கிராமமான சின்னாம்பதியின் முதல் பட்டதாரி, 21 வயது சந்தியா. அம்மா நள்ளியும் அப்பா சண்முகமும் இரண்டாம் வகுப்பை தாண்டாதவர்கள். தம்பி சதீஷ்குமார் ஐ.டி.ஐ., மாணவன்.
'கொரோனா' காலம்...
ஊரடங்குல அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லை; ஆனாலும், சந்தோஷத்துக்கு குறையில்லை; நிற்காம ஊத்தெடுக்குற பொன்னுாத்து... ஊரைச்சுற்றி படர்ந்திருக்கிற பசுமை... பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், நொண்டி விளையாட்டுன்னு... அதுவொரு வசந்தகாலம்!
சந்தியா... இப்போது?
பள்ளிகள் திறந்துட்டாங்க; பணத்தேவைக்கு நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன்; 'சின்னாம்பதியில படிக்காதவங்க யாருமே இல்லை'ங்கிற சூழல் உருவாகுறதுக்கு நானும் காரணமா இருக்கணும்னு விரும்புறேன். அதனால, விடுமுறை நாட்கள்ல தொடர்ந்து வகுப்பு நடத்துறேன்.
சந்தியாவின் ஆசைகள் 1000
* கிராமத்திற்கு நிலையான போக்குவரத்து
* உழைப்புக்கேற்ற ஊதியம்
* அரசுப்பணி