வாய் வழியாகப் பரவும் தொற்றுகள், கோடை காலத்தில், குழந்தைகளை அதிகம் பாதிக்கும். பள்ளி விடுமுறை, வெயில் இரண்டையும் காரணம் காட்டி, ஐஸ்கிரீம் சாப்பிடுவது, தொற்றுக்கான காரணம்.
தொண்டையில் சளி, இருமல், புண் வந்தால், 'குளிர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் வந்தது' என்று நினைக்கிறோம். இது, 'ஜில்'லென்ற ஐஸ்கிரீமால் வந்தது கிடையாது; ஐஸ்கிரீம் தயாரிக்க உபயோகித்த நீர், கிரீம் செய்ய பயன்படுத்திய பால், இவற்றில் கிருமிகள் இருந்திருக்கலாம்; சமயங்களில், கெட்டுப் போன பாலில், கிரீம் தயாரித்து இருக்கலாம்.
'பால் திரிந்து விட்டால், கீழே கொட்டாமல், பால்கோவா கிளறி விடுங்கள்' என்று ரெசிபிகள், 'போஸ்ட்' செய்கின்றனர்.
பால் திரிந்தாலே, ஏதோ காரணத்தால், பயன்படுத்த தகுந்த நிலையில் இல்லை என்று தான் அர்த்தம். அதனால், சுகாதாரமான முறையில் தயார் செய்த ஐஸ்கிரீம் மட்டுமே சாப்பிட வேண்டும். தொண்டையில் ஏற்பட்ட சளி, பல நேரங்களில் சுவாச மண்டலத்தை பாதித்து, சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
கோடை காலத்தில், உணவு விரைவாக கெட்டு விடும் வாய்ப்பு உள்ளது. வெளியிடங்களில் இருந்து, நாம் சாப்பிடும் அதே உணவையே குழந்தைக்கும் தருவதால், வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிறு வலி வரலாம்.
எதிர்ப்பு திறன் குறைவு என்பதால், அவர்களை எளிதாக தொற்றி விடும். கோடையில், நீச்சல் பயிற்சிக்கு செல்லும் குழந்தைக்கு, காதுகளில் தொற்று ஏற்படுவதும் உண்டு.
'பீடியாட்ரிஷியன்' மருத்துவ இதழ்.