தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.75ஆயிரம் மானியம் பெற்று பண்ணை குட்டை அமைத்து மீன்கள் வளர்க்கிறேன். அவ்வப்போது செலவுக்கு மீன்விற்பனை கைகொடுக்கிறது என்கிறார் மதுரை மேலுார் அம்பலக்காரன்பட்டி விவசாயி சுப்பையா.
மானியம் குறித்து அவர் கூறியதாவது:
30 சென்டில் வெண்டை, 10 சென்டில் கத்தரி, 40 சென்டில் மாட்டுத்தீவனம், ஒரு ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளேன். தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வெண்டை சாகுபடிக்காக விதை, உரம், இடுபொருட்கள் இலவசமாக வழங்கினர்.
அதை பயன்படுத்திய போது வெண்டைக்காய்கள் பூச்சி தாக்குதல் இன்றி பளபளப்பாக கிடைத்தது. கரும்பை வெட்டிய பின் வெட்டுக்கட்டை மூலம் 2வது முறை தானாக சாகுபடியாகிறது.
மேலுார் உதவி இயக்குனர் நிர்மலா ஆலோசனையின் பேரில் பண்ணை குட்டை அமைத்தேன். 12 அடி நீள, அகலம் 9 அடி ஆழத்தில் கட்லா, மிர்கால், ரோகு ரகத்தில் 4000 மீன் குஞ்சுகள் வாங்கி விட்டேன். 4 மாதங்களில் இதுவரை 100 கிலோ வரை எடுத்துள்ளேன்.
4 மாடுகள் இருப்பதால் மாட்டுத்தீவன புல் வளர்க்கிறேன். அறுத்த புல்லை மாடுகள் தின்ற பின் மீதி கழிவுகளை மீன்களுக்கு உணவாக தருகிறேன். கிலோ ரூ.150க்கு வெளியில் விற்கிறேன். இன்னும் மீன்கள் கிடப்பதால் அவ்வப்போது தேவைக்கேற்ப விற்பனை செய்கிறேன்.
தொடர்புக்கு: 84896 65035
- எம்.எம்.ஜெயலெட்சுமி மதுரை