திருச்சி மாவட்டம், தெற்கு ரெங்கா நடுநிலைப் பள்ளியில், 1969ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
அப்போது, பள்ளியில் குடிநீர் வசதி செய்யப்படவில்லை. தாகம் எடுத்தால் அருகில் இருந்த தலைமையாசிரியர் வீட்டிற்கு சென்று நீர் குடித்து வருவது வழக்கம். அன்றும் தோழியருடன் அதற்காக சென்றேன்.
உடன் வந்த தோழியரில் கலா, மிகவும் சுட்டி. வழியில் வீட்டு ஜன்னல் கம்பிகளை பற்றி தடவியபடி வந்தாள். திடீரென, ஒரு கம்பியில் தொங்கியிருந்ததைக் கண்டோம். விளையாட்டிற்காக அப்படி செய்கிறாள் என, எண்ணி திட்டியபடி அழைத்தோம்.
அவள் அசையாமலிருக்கவே, ஓடிச் சென்று பிடித்து இழுத்தேன். உடனே, அதிரடியாக துாக்கி வீசப்பட்டேன். அவளை தொட்ட இன்னொரு தோழியும் நிலைகுலைந்து விழுந்தாள். ஏதோ விபரீதம் நடந்திருந்தது புரிந்தது. எஞ்சியிருந்தவள் விரைந்து சென்று, ஆசிரியரிடம் தகவல் கூறினாள்.
தடியுடன் ஓடி வந்தவர் தோழியை விடுவித்தார். அவள் கை, கன்னத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக, முதலுதவி செய்தார். அவள் தொட்டிருந்த கம்பியில் மின்சார கசிவு இருந்தது கண்டறியப்பட்டது. அது, மிக குறைந்த அளவிலான கசிவு என்பதால் தப்பித்தோம்.
இப்போது என் வயது, 65; அதிர்ச்சி தந்த அச்சம்பவம், இன்றும் மனதில் வடுவாக உள்ளது.
- ஆர்.நிர்மலா, திண்டுக்கல்.