மதுரை மாவட்டம், திருமங்கலம், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், 1950ல், 5ம் வகுப்பு படித்த போது, தலைமையாசிரியராக இருந்தார், டி.சின்னையா. கல்வி சுற்றுலாவாக மாணவர்களை, டி.கல்லுப்பட்டி, காந்தி நிகேதன் ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு, தோட்ட பராமரிப்பு, ராட்டை நூற்பு, கழிப்பறை சுத்தம், இயற்கை உரம் தயாரிப்பு போன்ற செயல்முறைகளைக் கண்டோம். பல விஷயங்களை தெரிந்து திரும்பினோம்.
மறுநாள் வகுப்புக்கு வந்த தலைமை ஆசிரியர், 'கிராமங்களில் தெரு ஓரமும், பாதையின் இருபுறமும், மக்கள் மலஜலம் கழித்து வருவதை பார்த்திருப்பீர்... அதன் மீது, ஈக்கள் மொய்த்து நோயை பரப்பி வருகின்றன... அதை தடுக்கும் வழிமுறையை தெரிந்து கொண்டீர் தானே...
'மலஜலம் கழித்தவுடன், மண்ணால் மூடினால் அதன் மீது, ஈக்கள் உட்காராது. துர்நாற்றமும் வீசாது; நோய் பரவாது; நிலத்திற்கு, இயற்கையாக உரம் கிடைக்கும்; விவசாயம் செழிக்கும்...' என எடுத்து கூறினார்.
அன்று முதல், அந்த நடைமுறையை தவறாமல் பின்பற்றினோம்; எங்களைப் பார்த்து, கிராம மக்களும் கடைப்பிடித்தனர். எங்கள் பகுதியில், ஆரோக்கிய சூழல் வளர்ந்தது. என் வயது, 82; சுகாதார நடவடிக்கையை, செயல்முறையாக கற்றுத்தந்த அந்த தலைமையாசிரியரை எண்ணி, பெருமிதம் கொள்கிறேன்!
- பி.எ.அழகர்சாமி, மதுரை.
தொடர்புக்கு: 97896 43295