முன்கதை: வரி கொடுத்தும், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததால் ஐரோப்பிய நாடான இங்கிலாந்து மீது, அமெரிக்கர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. எதிர்த்து போராட தளபதியாக ஜார்ஜ் வாஷிங்டனை தேர்ந்தெடுத்தனர். இனி -
அமெரிக்க மக்களின் விடுதலை உணர்ச்சியை, இங்கிலாந்து அரசு மதிக்கவில்லை. துப்பாக்கி முனையில், பணிய வைக்க தீர்மானித்தது; இதற்காக, பெரிய படையை அனுப்பியது. அதை எதிர்கொள்ள அமெரிக்க மக்கள் தயாராயினர்.
இங்கிலாந்து ராணுவம் முறையாகப் பயிற்சி பெற்றிருந்தது. வேண்டிய அளவு கவச உடையும், உணவும் வைத்திருந்தது.
ஆனால், விடுதலைக்காக போராடிய அமெரிக்கர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல; போர்க்களம் அவர்களுக்கு புதிது. உரிய கருவிகளும் இல்லை. கிழிந்த ஆடை, குறைந்த உணவைக் கொண்டு போரிட்டனர். பல நேரம், குதிரைக்கு வைத்திருந்த தீவனப் பொருட்களையே, உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
துன்பங்களை தாங்கியபடி, அமெரிக்கர்கள் துணிவுடன் போரிட்டதற்கு இரு காரணங்கள் இருந்தன.
ஒன்று: தாய்நாட்டு மீதான விடுதலை வேட்கை.
இரண்டு: ஜார்ஜ் வாஷிங்டனின் மேலான தலைமை.
எண்ணற்ற தொல்லைகள் ஏற்பட்ட போதும், மனம் தளரவில்லை வாஷிங்டன்; களத்தில் நின்று, வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
தோல்விகள் தொடர்ந்த போதும் நம்பிக்கையை கைவிடவில்லை; கடும் தட்ப வெப்பம் நிலவிய போதும், தளர்ந்துவிடவில்லை. அவரது மன வலிமை மற்றும் சுயக் கட்டுப்பாடு அனைவரையும் கவர்ந்தது. வீரர்களை எழுச்சி பெற வைத்தது.
முதலில் இங்கிலாந்து படை, அடுத்தடுத்து வெற்றி கண்டது. இதனால் பூரிப்பில் திளைத்த இங்கிலாந்து படைத் தலைவர், வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியிருந்தார்.
தோல்வியை ஒப்புக் கொள்ளவோ, மன்னிப்பு கேட்கவோ முன் வரவில்லை வாஷிங்டன்; தொடர்ந்து போரை நடத்தினார். பல்லாயிரக் கணக்கில் அமெரிக்க வீரர்கள் களத்தில் மடிந்தனர்; ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர்.
வெற்றி களிப்பில், மயங்கியிருந்த இங்கிலாந்து படையை, 2,400 வீரர்களுடன் திடீரென்று தாக்கினார், ஜார்ஜ் வாஷிங்டன். போர் உச்சத்தை அடைந்தது.
இங்கிலாந்து படை சிதறடிக்கப்பட்டது.
அமெரிக்க - பிரெஞ்சு கூட்டுப் படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், யார்க் டவுன் என்னுமிடத்தில் சரண் அடைந்தது, இங்கிலாந்து படை.
இறுதியில் வெற்றி கண்டது அமெரிக்கா. ஆங்கிலேய ஆட்சி அகன்றது. மேலான வெற்றியைத் தேடித் தந்த பெருமை ஜார்ஜ் வாஷிங்டனை சேர்ந்தது; அமெரிக்கர் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார்.
பொறுப்பை முறையாக நிறைவேற்றி, வெற்றி கண்ட வாஷிங்டன், சில நாட்களில் படைத் தலைவர் பதவியை துறந்தார். அமைதியாக வாழ, மீண்டும், வெர்னான் மலைப் பகுதிக்கு செல்ல முடிவு செய்தார்.
ஆனால், தக்க தலைமை பொறுப்பை ஏற்பவர் இன்றி, தடுமாறியது அமெரிக்கா; நாட்டில், சரியான அரசியல் சட்டம் உருவாகவில்லை. இந்த நிலையில், 1787ல் மக்கள் மாநாடு கூடியது. அதில், அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் அரசியல் சாசன சட்டம் உருவாக்கப்பட்டது.
மீண்டும் அழைக்கப்பட்டார் ஜார்ஜ் வாஷிங்டன்.
விடுதலைப் போருக்கு தலைமை தாங்கிய அவரே, நாட்டை வழி நடத்தும் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றனர் மக்கள். அமெரிக்கக் குடியரசின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஜார்ஜ் வாஷிங்டன். பலம் மிக்க ஐக்கிய அரசை அமைத்தார்.
அவரது செயல்திறன் தொடர்ந்து தேவைப்பட்டதால், இரண்டாவது முறையும் அவரே குடியரசு தலைவரானார். மூன்றாம் முறையாக, பதவியில் தொடர மறுத்து விட்டார்.
அமெரிக்கர் நெஞ்சில் நிறைந்த ஜார்ஜ் வாஷிங்டன், டிசம்பர், 1799ல் மறைந்தார். அவரது நினைவாக அமெரிக்க நகரம் ஒன்றுக்கு, 'வாஷிங்டன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்றுள்ளார், ஜார்ஜ் வாஷிங்டன்.
ஆரம்பத்தில், இங்கிலாந்திடம் முழு விடுதலைக்கு கோரவில்லை அமெரிக்க மக்கள்; நாடாளுமன்றத்தில், உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கையை தான் வலியுறுத்தினர். வாஷிங்டனும் இதையே வலியுறுத்தி வந்தார்.
ஆனால், இங்கிலாந்து படையுடன் போர் தீவிரமானதும், முழு விடுதலை பெறும் எண்ணம் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டது. இங்கிலாந்து ஆட்சியை அடியோடு ஒழித்துக் கட்ட விரும்பினர். களத்தில் இறங்கி போராடி வெற்றி கண்டனர்.
முற்றும்.