கண் விழித்தான் விஷ்ணு. கடிகாரத்தில் அதிகாலை, 3:00 மணி என காட்டியது.
நடந்ததை எண்ணி, கண்ணாடி முன் நின்றான்.
வாழ்க்கை மீது வெறுப்பு வந்தது.
'கடன் வாங்கி படிக்க வைக்குறாங்க... நம்மளால தான் கஷ்டம். இனியும் பெற்றோருக்கு பாரமாக இருக்க கூடாது' என, எண்ணியபடி மயங்கி சாய்ந்தான்.
கனவு போல் இருந்தது; இருவர், அருகில் நிற்பதாக பட்டது.
'நீங்க யார்...'
'ம்ம்... போலாம்...'
கணப்பொழுதில் பயம் தரும் அரசவைக்கு அழைத்துச் சென்றனர்.
எமதர்மன் முன் நிறுத்தப்பட்டான் விஷ்ணு.
'சித்திரகுப்தா... இவன் கதை என்ன...'
கேட்டார் எமதர்மன்.
'பிரபு... நடுத்தர குடும்ப தம்பதி சாரதா - சதாசிவத்தின் ஒரே மகன். எப்பாடுபட்டாவது இவனை மருத்துவம் படிக்க வைக்க ஆசைப்பட்டனர்... இவனும் அலாதி பிரியம் கொண்டான்; அதற்கான செயலிலும் ஈடுப்பட்டு, கவனத்தை எங்கும் சிதற விடாமல் படித்தான்...
'நண்பர்களுடன் ஊர் சுற்றியதில்லை; நேரத்தை வீணடித்தது இல்லை; ஆனால், நுழைவுத் தேர்வில் தோல்வியுற்றதால், தற்கொலை செய்து கொண்டான்... யாருக்கும் தீங்கு நினைத்ததில்லை; முயன்ற அளவு உதவி செய்வான்...'
முடித்தான் சித்திரகுப்தன்.
மலங்க விழித்த விஷ்ணுவிடம், 'ஏதாவது சொல்ல விரும்புகிறாயா...' என்று, கேட்டார் எமன்.
'ஐயா... வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்தேன்... ஆனால், மருத்துவ நுழைவுத் தேர்வில் சரியான மதிப்பெண் பெற முடியவில்லை; கடின உழைப்பிற்கு பின் கூட தேர்ச்சி பெறவில்லை; எல்லாரும் ஏளனமாக பேசினாங்க. அவமானம் தாங்கல... அதான்...' விரக்தியுடன் முடித்தான் விஷ்ணு.
'இவனை, தண்டனை அறைக்கு அழைத்துச் செல்லுங்கள்...' ஆணையிட்டார் எமன்.
இயற்கையின் கொடையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த அறை. பட்டு மெத்தையும், சொகுசு இருக்கைகளும், நலம் மிக்க உணவுகளும் இருந்தன.
'இதுவா தண்டனை அறை...' காவலாளியிடம், வியப்புடன் கேட்டான் விஷ்ணு.
'ஆம்...இது நுாதன தண்டனை அறை...' என்றபடி இருக்கையில் அமர வைத்தார்.
அவன் முன் ஒரு மாயக்கண்ணாடியை நிறுத்தியபடி, 'நீங்க தற்கொலை செய்யாமல், மன பலத்துடன் மேலும் முயற்சி மேற்கொண்டிருந்தால், வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை, இந்த மாயக்கண்ணாடி காட்டும்...' என கூறினார்.
காட்சி துவங்கியது.
கல்லுாரி ஒன்றில், இளம் அறிவியல் பட்டம் பெறுகிறான் விஷ்ணு; வளாக தேர்வில் வேலை கிடைத்தது.
லட்சங்களில் சம்பளம் பெறுகிறான்; பதவி உயர்வும் பெறுகிறான். சில ஆண்டுகளிலேயே, நிறுவனம் ஒன்றை துவங்குகிறான்; தொட்டதெல்லாம் துலங்குகின்றன.
அறக்கட்டளை நிறுவி, ஏழைகளுக்கு இலவசக்கல்வி, மருத்துவம் தருகிறான்.
மாயக்கண்ணாடியில் காட்சி முடிந்தது.
உடனே, எமன் பாதங்களில் விழுந்து, 'ஐயா... இதை பார்த்ததும், குற்ற உணர்ச்சி கொல்கிறது. அழகிய வாழ்க்கையை, வீணாக்கி விட்டேன்; வேறு தண்டனை எதாவது தாங்க; இல்லேன்னா வாழ இன்னொரு வாய்ப்பு தாங்க...' என கதறி அழுதான்.
'பிறப்பு, மனிதனுக்கு கிடைக்கும் பெரும் வாய்ப்பு; இதில் முயற்சி மற்றும் தன்னம்பிக்கையை பொறுத்து, வெற்றியின் அளவு இருக்கும்... முழு ஈடுப்பாட்டுடன் முயற்சிக்கும் திறன் பெற்ற நீ, பொறுமை இழந்தாய்; நிதானத்தை கை விட்டாய்; விழைவு, இன்னுயிர் துறந்தாய்; வாய்ப்பை அலட்சிய படுத்தியதால், தண்டனை அனுபவித்து தான் தீர வேண்டும்...'
புன்னகையுடன் தள்ளி விட்டார் எமன்.
கனவு கலைந்து, கண்களைத் திறந்தான் விஷ்ணு.
கடிகார சத்தம் திசை திருப்பியது.
'நடந்தது கனவா, நிஜமா' உடலை கிள்ளியபடி கேட்டான்.
மேஜையில் இருந்த, அறிவியல் கலைக் கல்லுாரி விண்ணப்பத்தை எடுத்தான். புத்துணர்ச்சியுடன் அதை பூர்த்தி செய்ய துவங்கினான்.
'ஜெயிக்கிறேனோ, இல்லையோ... கண்டிப்பா முயற்சி செய்வேன்...'
மனதில் ஏந்திய உறுதியுடன் படிக்க ஆயத்தமானான் விஷ்ணு.
குழந்தைகளே... முயற்சி முழு வெற்றி தரும்.
செ.ஜனனி