அன்புள்ள அம்மா...
நான், 11 வயது சிறுமி; 6ம் வகுப்பு படிக்கிறேன்; என் பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.
தந்தை மறுமணம் செய்து கொண்டார்; வெளியூரில் பணிபுரியும் தாய், விடுதியில் தங்கி இருக்கிறார்.
என்னை, தாத்தா, பாட்டியுடன் விட்டு விட்டார் அம்மா. முதலில், என் மீது அதிக பிரியமாக இருந்தார் தாத்தா; இப்போது கடுகடுக்கிறார்.
சிறு தவறு செய்தாலும் கண்டிக்கிறார்; சில சமயம் அடித்து விடுகிறார். பாட்டி பாசமாக இருக்கிறார்; என்னை கண்டிக்கும் தாத்தாவுடன், சண்டைக்கு போகிறார்.
தாத்தாவை ஏதாவது திருவிழாவில் தொலைத்து விடலாம் என, யோசிக்கிறேன்.
அவரை எப்படி திருத்துவது அம்மா... எனக்கு நல்ல வழிகாட்டுங்கள்.
இப்படிக்கு,
த.கார்த்திகா.
அன்பு மகளுக்கு...
இந்த நுாற்றாண்டு, தாத்தா, பாட்டியர், பேரன், பேத்தியருக்கு செல்லம் கொடுத்து கெடுப்பதில்லை.
என்ன தான், விழுந்து, விழுந்து கவனித்தாலும், பேரன், பேத்தியர் மீது, முழு உரிமை இல்லை என்பதை உணர்ந்திருக்கின்றனர்.
தாத்தாக்கள், வயது மூப்பையும் கடந்து, எதாவது பணி செய்து சம்பாதிக்கின்றனர். மகன், மகள்களுக்கு செலவு செய்வதை விட, பேரன், பேத்தியருக்கு அதிகம் செலவு செய்கின்றனர்.
இப்போது, உன் விஷயத்தைப் பார்ப்போம்...
ஆண்டில், ஒரு முறை மட்டும், தாத்தா, பாட்டி வீட்டுக்கு வந்து சென்றால், நிபந்தனையற்ற பாசத்தை, உன் மீது பொழிவர். இப்போது, முழு பொறுப்பேற்று உன்னை வளர்க்கின்றனர்.
'விவாகரத்தால், மகள் வாழ்க்கை பாழாகி விட்டதே... அவள் எதிர்காலம் எப்படி இருக்கும்' என்ற கவலையில் ஆழ்ந்திருப்பார் உன் தாத்தா. இப்போது, உனக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து கவனிக்கிறார்.
நீ, நல்லபடியாக வளர வேண்டும் என்ற கவலை அவருக்கு இருக்கும். சரியாக நீ வளரவில்லை என்றால், 'செல்லம் கொடுத்து கெடுத்து விட்டனர்...' என, உன் அம்மா பழி சுமத்த நேரிடும். எனவே, கண்டிப்புடன் இருப்பார் தாத்தா.
அதை சரி செய்யும் விதமாக செல்லம் கொடுத்து, பேலன்ஸ் செய்கிறார் பாட்டி.
'ஈகோ'வை விட்டு, தாத்தாவுடன் மனம் விட்டு பேசு. உன் மீது கூறும் குறைகளை மனதில் எண்ணிப்பார்.
தவறு எனப்பட்டால் திருத்திக் கொள்.
தாத்தாவின் கோபத்துக்கான அடிப்படையை, பாட்டியிடம் கேட்டு, உன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்.
தாத்தாவுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற நோய்கள் இருக்க கூடும். மாத்திரைகள் ஒழுங்காக சாப்பிடுகிறாரா என கவனி. தினமும், ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய சொல்.
உன்னால், தாத்தா, பாட்டி இடையே சண்டை வரலாமா...
இணக்கமாக நடந்து, அவர்களின் சண்டையை தவிர்!
மன அழுத்தத்தை போக்க, யோகா கற்றுக் கொள்; நல்ல நுால்களை வாசி. தாத்தா, பாட்டி அனுமதியுடன், வீட்டில் வண்ண மீன்கள் வளர்க்க முயற்சி செய்.
சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து, வாழ்க்கையில் முன்னேறு. சிறப்பாக படித்து, ஆரோக்கியமாக வளர்ந்து, அம்மாவுக்கு நல்லதொரு மன ஆறுதலை வழங்கு!
வாழ்த்துகள் மகளே!
- அன்புடன், பிளாரன்ஸ்.