குளிர்பானத்தில், போதைப் பொருள்!
என் தோழியினுடைய, 12 வயது மகள், 7ம் வகுப்பு படிக்கிறாள். ஒரு பிரபலமான பள்ளியில் படிக்கும் அந்த சிறுமிக்கு, படிப்பு மட்டுமில்லாமல் விளையாட்டு, கவிதை, கட்டுரை, ஆடல் - பாடல் என, எல்லாமே அத்துப்படி. இத்தனைக்கும் வகுப்புக்கு, அவள் தான் தலைவி.
திறமையான அந்த குழந்தையின் வாழ்வில், புயல் வீச ஆரம்பித்தது. ஒருநாள், அவளுடைய தோழி ஒருத்தி, 'சாப்ட் ட்ரிங்க்ஸ்' வாங்கி கொடுத்து குடிக்கச் சொல்லியிருக்கிறாள். பிரபலமான கம்பெனியின், பானம் அது. சுவையாக இருந்துள்ளதால், விடுமுறை நாட்களில் கூட, அந்த பானத்தை தன் தந்தையை வாங்கி வரச்செய்து, எல்லாரும் சேர்ந்து அதை பருகுவர்.
'இது, எங்கள் பள்ளிக்கு அருகில் விற்பது போல இல்லை...' என்பாள், அச்சிறுமி.
ஆறு மாத காலத்தில், அந்த பானத்திற்கு அடிமையானவள், சாப்பாடு கூட வேண்டாம், எப்போதும் அதையே சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இதனால், படிப்பில் கவனம் குறைந்தது. விளையாட்டு, கதை, கட்டுரை எல்லாவற்றிலுமே அவள் கலந்து கொள்ளாமல் நடைபிணமாக மாறி விட்டாள்.
ஒருநாள், நிலைமை மோசமாக, பள்ளி அருகிலிருந்த கடையிலிருந்து அந்த பானத்தை வாங்கி வந்து குடித்துப் பார்த்தார், பெண்ணின் தந்தை. மற்ற இடங்களில் வாங்குவதை விட, வித்தியாசமான சுவையில் இருக்கவே, பரிசோதித்து பார்த்ததில், போதைப் பொருள் கலந்து இருப்பது தெரிந்தது. போதைப் பொருளை கலந்து, பள்ளிக் குழந்தைகளுக்கு விற்று, அடிக்கடி வாங்கும்படி செய்துள்ளார், அந்த கடைக்காரர்.
சுதாரித்து, முறையான மருத்துவ சிகிச்சைக்கு பின், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறாள், அச்சிறுமி. பள்ளியிலும் புகார் கொடுத்து, அக்கடைக்காரரை கண்டிக்க சொல்லி இருக்கின்றனர்.
பெற்றோர்களே... இனி, உஷாராக இருங்கள்!
சு. உமா, ஆதிச்சபுரம், திருவாரூர் மாவட்டம்.
இந்த, 'ஐடியா'வை பின்பற்றலாமே!
புதிதாக அறிமுகமான தோழி ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். என் போன் நம்பர் மற்றும் முகவரியை கேட்டு, ஒரு நோட்டில் குறித்துக் கொண்டாள். அதில், அவள் மற்றும் அவளது கணவருடன் உடன் பிறந்தவர்கள், ஒன்று விட்ட உறவினர்கள், நண்பர்கள் பெயர், போன் நம்பர், முகவரியுடன் எழுதியிருந்தாள்.
காரணம் கேட்டதற்கு, 'ஒரு நல்லது கெட்டதுக்கு அழைக்கும்போது, எவ்வளவு யோசித்தாலும் யாராவது ஒருவர் பெயராவது விடுபட்டு விடுகிறது. அதனால், எங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் உறவினர், தெரிந்தவர் என அத்தனை பேர் விபரங்களையும் குறித்து, வைத்துக் கொள்வோம். எந்த ஒரு நிகழ்வானாலும், யாரும் அழைக்கப்படாமல் விடப்படுவதில்லை...' என்றாள்.
பல வைபவங்களுக்கு கடைசி நேரத்தில் எவ்வளவு தான் யோசித்தாலும், ஒரு சிலரை விட்டு விட்டு, அவர்களின் மனத்தாங்கலுக்கு ஆளாகிறோம்.
இந்த, 'ஐடியா'வை செயல்படுத்தினால், வேண்டியவர்களை, இந்த நோட்டை பார்த்தே அழைத்துக் கொள்ளலாம் அல்லவா. மேலும், நம் உறவினர், நண்பர்கள் பற்றி நம் குழந்தைகளும் அறிந்து கொள்வர்.
வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாக, நானும் எழுத ஆம்பித்து விட்டேன். நீங்களும் இந்த, 'ஐடியா'வை பின்பற்றலாமே!
— டி. சவரிமுத்தாள், துாத்துக்குடி.
குலுக்கல் முறையில் வியாபாரம்!
கட்டடத்திற்கு வெள்ளையடிக்கும் வேலை செய்து வந்தார், நண்பர். ஒருநாள், வெள்ளை அடித்துக் கொண்டிருந்தபோது, சாரம் ஒடிந்து கீழே விழுந்ததில், கால் முறிந்தது.
சில நாட்களிலேயே குணமானாலும், வேலைக்கு செல்ல முடியாத நிலை. அதிக நேரம் உட்காரவோ, நிற்கவோ முடியாது. எனவே, இருந்த இடத்திலேயே செய்யக் கூடிய வேலையை தேடி அலைந்தார்.
எதுவும் அமையாததால், வாடகைக்கு தள்ளு வண்டி பிடித்து, வீட்டு வாசலில் நிறுத்தி, வாழைப்பழம் விற்க துவங்கினார். ஆரம்பத்தில் வியாபாரம் சுமாராக இருந்தது. இதை பெரிய அளவில் கொண்டு வர விரும்பினார்.
வாழைப்பழம் வாங்க வரும் வாடிக்கையாளரிடம், மொபைல் எண்ணை வாங்கிக் கொள்வார்.
அன்று முழுதும் பழம் வாங்கியவர்களின் மொபைல் எண்களை தனித்தனி தாளில் எழுதி, குலுக்குவார். வந்த எண்ணிற்கு போன் செய்து, 'உங்களுக்கு, குலுக்கல் முறையில், 2 கிலோ வாழைப்பழம் இலவசமாக வழங்கப்படுகிறது; வந்து வாங்கிச் செல்லுங்கள்...' என்பார்.
இப்படியே தினம் ஒருவருக்கு, குலுக்கல் முறையில் 2 கிலோ வாழைப்பழம் இலவசமாக தந்து விடுவார். இதனால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரத் துவங்கினர்.
'பழம் விற்க ஆரம்பித்த நாட்களில் இரண்டு தார் பழம் தான் விற்கும். இப்போது ஒரு நாளைக்கு, 20 முதல் 25 தார் வாழைப் பழங்கள் விற்பனையாகிறது. கூலி வேலையில் கிடைத்த சம்பளத்தை விட, பன்மடங்கு லாபம் கிடைக்கிறது. மேலும், வேறு இடத்தில் இன்னொரு கடை ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன்...' என்று கூறியதை கேட்டு, சந்தோஷமாக இருந்தது.
சிறு வியாபாரிகளே... வியாபாரம் ஆகவில்லையே என்று புலம்பாமல், மாற்று யோசனை செய்து, உங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.
- எம்.எம். முத்தையா, திருப்பூர்.