கமல் - ரஜினி ரசிகர்களுக்கு ஒரு போட்டி!
'குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.,க்கு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரின் ரசிகர்களுக்கும் ஒரு புதுமையான போட்டி நடத்த வேண்டும் என்று யோசனை வந்தது.
அவர்கள் இருவரையும் சந்தித்து, அவர்களது வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி கேள்விகளைத் தயாரித்து அதை, 'குமுதம்' இதழில் வெளியிட வேண்டும். அக்கேள்விகளுக்கு, ரசிகர்களிடமிருந்து வரும் பதில்களை இருவரும் பரிசீலித்து போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்களை அந்த நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுத்து, 'குமுதம்' அட்டையில் வெளிவரச் செய்யும் பொறுப்பை, எனக்கு அளித்திருந்தார்.
இருவரையும் சந்தித்து, எங்கள் ஐடியாவை விளக்கி, சம்மதம் பெற்றேன்.
டிச., 18, 1986, 'குமுதம்' இதழில், கமல் - ரஜினி இருவரின் ரசிகர்களுக்கு, கேள்விகள் அறிவிக்கப்பட்டன. கமல் - ரஜினி இருவருடன், நான் பேசியது, அவர்கள் சம்மதம் பெற்றது ஆகியவற்றை படக்கதையாக இரண்டு பக்கம் வெளியிட்டார், ஆசிரியர். ஒரு நிருபருக்கு, கார்ட்டூன் படங்கள் வரைந்து போட்டியை அறிவித்தது, இது தான் முதல் முறை.
கமல் - ரஜினி இருவரின் ரசிகர்களும், கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பினர். அவற்றில் சிறப்பானவைகளை தேர்ந்தெடுத்தனர். அந்த வெற்றியாளர்கள், தங்களுக்கு பிடித்த நடிகருடன் படம் எடுத்தது, 'குமுதம்' அட்டையிலும் வெளியானது.
ஜூன்., 18, 1987 'குமுதம்' இதழில், கமல் - ரஜினி இருவரும் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடைகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தத்தில் இது ஒரு சுவையான அனுபவம்.
பிரபலங்களுடன் ஒரு சந்திப்பு!
பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை சந்தித்து, பேட்டி கட்டுரைகள் எழுதலாம் என்று, தினமலர் - வாரமலர் இதழ் பொறுப்பாசிரியரிடம் சொன்னபோது, ஒப்புதல் அளித்தார்.
தமிழ் பத்திரிகை வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஓவியர் கோபுலுவை முதன்முதலில் பேட்டி எடுக்க முடிவு செய்தோம். 60 ஆண்டுகளாக தொடர்ந்து, மூன்று தலைமுறைகளாக உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களை, தன் ஓவியங்களால் மகிழ வைத்தவர், ஓவியர் கோபுலு.
திரைப்படத்துறையில், எம்.ஜி.ஆர்., - சிவாஜி இருவருக்கும் எந்தளவு புகழ், கவுரவம், மரியாதை இருந்ததோ, அந்தளவுக்கு பத்திரிகை துறையில் தனிமனிதராக புகழ் பெற்றிருந்தார், கோபுலு. 50 ஆயிரம் ஜோக்குகளை, படத்தோடு எழுதி இருப்பதாக கூறினார்.
'ஒன் மேன் ஆர்மி, சிங்கிள் மேன் சிம்போனி' மாதிரி அட்டைப்பட ஜோக், கதை மற்றும் தொடர்கதைகளுக்கு படங்கள், அரசியல் கார்ட்டூன்கள், வசனம் இல்லாமல் தமாஷ் படங்கள் என்றெல்லாம் வரைந்து, சாதனை படைத்திருப்பவர்.
கொத்தமங்கலம் சுப்பு எழுதிய, 'தில்லானா மோகனாம்பாள்' கதைக்கு, மோகனாம்பாள், சண்முக சுந்தரம் இருவருக்கும் கோபுலு கொடுத்த உருவங்கள், மறக்க முடியாதவை.
'பிரபலங்களின் சந்திப்பு' என்ற இந்த தொடர் கட்டுரை, வாரமலர் இதழில்,
110 வாரங்களுக்கு மேல் வந்தது. இதுபோல், 50 வி.ஐ.பி.,களை சந்தித்து கட்டுரைகள் எழுதினேன்.
என் எழுத்துப் பணியில், 'பிரபலங்களுடன் ஒரு சந்திப்பு' மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
சித்திரம் பேசுதடி!
'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில், ஓவியர் ஜெயராஜ், பத்திரிகைப் பணியில்,
50 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதாக, பெட்டி செய்தி ஒன்று வந்திருந்தது. இதை பார்த்ததும், 'வாரமலர்' இதழ் பொறுப்பாசிரியரை தொடர்பு கொண்டேன்.
'ஜெயராஜின் வாழ்க்கை நிகழ்வுகளில், அவர் செய்த சாதனைகளை, 'தினமலர் - வாரமலர்' இதழில் கட்டுரை தொடராக எழுதலாமா...' என்று கேட்டேன்.
'சரி. 25 வாரங்கள் வருமாறு எழுதுங்கள்...' என்றார்.
அவ்வாறு உருவானது தான், 'சித்திரம் பேசுதடி...' தொடர் கட்டுரை.
யார் மனதையும் புண்படுத்தாதவர், எப்போதும் புன்சிரிப்போடு இருப்பார், ஜெயராஜ். அவரது ஓவியங்களை ரசிக்க, தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பத்திரிகைகளுக்கு வரையும் ஓவியர்களில், சூப்பர் ஸ்டார் ஆக ஜெயராஜ் இன்றும் இருந்து வருகிறார்.
காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி, நம் தேச தந்தையை பற்றி கூறியது...
பிரபல ஓவியர் ராமுவிற்கும், சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காரணம், அந்த சிலையில் வரும் ஒருவருக்கு, ஒரு மாதம், தினமும் நான்கு மணி நேரம், மாடலாக, 'போஸ்' கொடுத்திருக்கிறார், ராமு. சென்னை ஓவியக் கல்லுாரியில் முதல்வராக இருந்த தேவி பிரசாத் ராய் சவுத்ரி, உழைப்பாளர் சிலையை உருவாக்கியவர். மெரினாவில் உள்ள காந்திஜி சிலையையும் உருவாக்கியவர், அவர் தான்.
— தொடரும்
எஸ். ரஜத்