கே
சைபர் குற்றவாளிகள் கையாளும் தந்திரங்கள் எவை என்றும், அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளை, 'சைபர் கிரைம் செல்'லில் பணிபுரியும் நண்பர் ஒருவர் தெரிவித்தார். அது:
வங்கியிலிருந்து பேசுவதாக சொல்லி, அக்கவுன்ட் நம்பர், ஏ.டி.எம்., கார்டு நம்பர், பின் நம்பர், சி.வி.வி., நம்பர், ஓ.டி.பி., எண், 'நெட் பேங்கிங் பாஸ்வேர்ட்' மற்றும் கிரெடிட் கார்டு ஆகியவற்றின் நம்பர்களை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்
* சுகாதாரத் துறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு, அரசு உதவி வழங்க விபரங்களை, 'அப்டேட்' செய்ய வேண்டும் என கேட்பது போல், தகவல்களை பெற்று, உங்கள் வங்கி கணக்கை குறி வைத்து, பணத்தை பறிக்க முயற்சிப்பர்
* உங்கள் அக்கவுன்டிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ, லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ குறுஞ்செய்தி அனுப்பி, செய்யவில்லை எனில், அந்த குறுஞ்செய்தியுடன் உள்ள, 'லிங்க்'கை, 'கிளிக்' செய்ய வலியுறுத்துவர். 'கிளிக்' செய்யாமல் அதை தவிர்க்கவும். தேவைபட்டால், வங்கிக்கு நேரில் சென்று, விளக்கம் பெறவும்
* கே.ஒய்.சி., பான் எண் மற்றும் ஆதார் எண் விபரங்கள் குறித்து கேட்டாலோ, குறுஞ்செய்தி, 'லிங்க்' அனுப்பினாலோ, 'அப்டேட்' செய்ய வேண்டாம்
* வங்கி பரிவர்த்தனைக்கான மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ உடனடியாக வங்கிக்கு நேரில் தெரியபடுத்தி, விரைந்து, 'ப்ளாக்' செய்யவும்
* வலைதளத்தில் காணப்படும் வங்கி, 'கஸ்டமர் கேர்' எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. 'கஸ்டமர் கேரில்' இருந்து போன் செய்பவர், உங்களுக்கு உதவுவது போல், 'லிங்க்' அனுப்பியோ, 'ஸ்கிரீன் ஷேர்' செய்ய வலியுறுத்தியோ, ஓ.டி.பி., விபரங்கள் பெற்றும், உங்கள் கணக்கை, 'ஹாக்' செய்ய முயற்சிக்கலாம்
* உங்களது புகைப்படங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். அதை, 'மார்பிங்' செய்து பணம் பறிக்கவும், வேறு வகையில் உங்களை மிரட்டவும் செய்யலாம்
* 'பேஸ் புக்'கில் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு துவங்கி, உங்களிடம் பண உதவி கேட்க வாய்ப்புண்டு. எனவே, பணம் அனுப்பும் முன், நேரிலோ அல்லது சம்பந்தப்பட்டவரிடம் தொலைபேசியிலோ உறுதி செய்யவும்
* சமூக வலைதளங்-களில் உங்கள் தனிப்பட்ட விபரங்களை யார் யாரெல்லாம் பார்க்க வேண்டும், பார்க்க கூடாது என்பதை, 'பிரைவசி செட்டிங்'கில் தெளிவாக குறிப்பிடவும்
* சமூக வலைதளங்-களில் உங்களது அன்றாட இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய பதிவுகள், குற்றவாளிகளால் கவனிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்
* பொது இடங்களில் வைக்கப்பட்ட, யூ.எஸ்.பி., சார்ஜர்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும், உங்களது தகவல்கள், 'ஜூஸ் ஜாகிங்' முறையில் திருட்டு போக வாய்ப்புள்ளது. பொது இடங்களில் உள்ள, 'வை பை' வசதியை பயன்படுத்தும்போதும் உஷாராக இருக்கவும்
* குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, சமூக வலைதளங்-களில் வரும் தகவலின் அடிப்படையில் பொருள், 'ஆர்டர்' செய்யும்போது, கவனம் தேவை. அவை, போலியான, 'வெப்சைட்' ஆக இருக்கலாம்
* 'மொபைல்போன் டவர் அமைக்க இடம் தேவை, மாதம் 30 ஆயிரம் ரூபாய் வாடகை, 30 லட்சம் முன்பணம் வழங்கப்படும்...' என, வரும் செய்திகளை நம்பி, பணம் செலுத்தி, ஏமாற வேண்டாம்
* 'ஆப்'களின் விபரங்களை முழுவதும் அறியாமல், 'டவுண்லோடு' செய்ய வேண்டாம்
* ஆர்வத்தை துாண்டும் தலைப்புகளில் வரும் செய்தி, 'லிங்க்'குகளுக்கு பின்னால், பணம் பறிக்கும் கும்பல் மறைந்திருக்கின்றனர் என்பதை மறக்காதீர்
* 'முதலீடு செய்யும் பணத்திற்கு தினசரி, 1 சதவீத கமிஷன் வழங்கப்படும்...' என, வரும் விளம்பரத்தை நம்பி, பணத்தை முதலீடு செய்யாதீர்
* பகுதி நேர வேலை, 'ஒர்க் ப்ரம் ஹோம்' மற்றும் தினமும், 200 - 3,000 ரூபாய் என, வரும் செய்திகளை நம்பாதீர்
* உங்கள் தொலைபேசி எண்ணுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பரிசு விழுந்துள்ளது என, வரும் தகவலை நம்பி, எந்த கட்டணத்தையும் செலுத்தாதீர்
* அறிமுகம் இல்லாதவர்களிடம், 'வாட்ஸ் ஆப்' அழைப்பில் பேச வேண்டாம். உங்கள் மொபைல்போனில் உள்ள, 'ப்ரென்ட் கேமரா'வால் எதிர் தரப்பில் உள்ளவர்களால், உங்களின் நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, அந்த பதிவுகளை உறவினர்களுக்கோ, சமூக வலைதளங்-களிலோ போட்டு விடுவதாக, உங்களை மிரட்டி, பணம் பறிக்க வாய்ப்புள்ளது
* 'பாஸ்வேர்டு' விபரங்களை எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும் ஒருபோதும் கொடுக்க வேண்டாம். அடிக்கடி, 'பாஸ்வேர்டை' மாற்றவும். பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர் எனில், அனைத்துக்கும் ஒரே, 'பாஸ்வேர்ட்' கொடுக்காதீர். தங்களது ஒரு வங்கி கணக்கு பாதிக்கப்பட்டால், மற்ற எல்லா கணக்கும் முடங்கும்
* கடைகளில் ஒட்டப்பட்டுள்ள, 'க்யூ ஆர் கோட்'களை கடை உரிமையாளர்களுக்கு தெரியாமல் குற்றவாளிகளால் மாற்றி வைக்கப்படுவதால், கடை உரிமையாளர்களுக்கும், பணம் செலுத்துபவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே, 'க்யூ ஆர் கோட்'களை பாதுகாப்பாக வைக்க வேண்டும்
* பண பரிவர்த்தனை நடைபெற்றது தவறென உணர்ந்தால், உடனடியாக, 'நேஷனல் ஹெல்ப்லைன் டோல்ப்ரீ 155260' என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், சைபர் குற்றவாளிகளுக்கு பணம் செல்லாமல், தடுத்து நிறுத்த இயலும்
* வாடிக்கையாளர் பணம் எடுக்காமலே அவர் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வரும். உடனே, வாடிக்கையாளர்கள் பதறியடித்து மேற்கொண்டு அதில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளும்போது, அவர்களது பணம், பறிபோக வாய்ப்புண்டு
* வருமான வரித்துறையிலிருந்து உங்களுக்கு, 'ரீபண்ட்' வந்துள்ளதாகவும், அதை வரவு வைப்பதற்கு மேற்கொண்டு வங்கி விபரங்களை கேட்டு வரும் தகவல்களும், குறுஞ்செய்திகளும் போலியானவை
* மொத்தத்தில், அறிமுகமில்லாத எந்த செய்தியையும் அல்லது உங்களுக்கு வரும் அழைப்புகளையும் புறக்கணிப்பது பாதுகாப்பானது.
- என்று கூறி முடித்தார்.
'அம்மாடியோவ், இவ்வளவு குறுக்கு வழிகளை தெரிந்து வைத்துள்ளனரே...' என்று மலைப்பாக இருந்தது.