நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (16)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2022
08:00

முன்கதைச் சுருக்கம்: இன்ஸ்பெக்டர் தன்னை பற்றி கேட்டால் எதுவும் சொல்ல வேண்டாம் என கூறிச் சென்றான், துரையப்பன். இந்நிலையில், இக்பாலின் அப்பா போன் செய்து, சிகிச்சைக்காக டாக்டரிடம் செல்லுமாறு கூறினார் -

மொபைல்போனின் மறுமுனையில், தன் அப்பா தாஹிர் பேசியதைக் கேட்டு எரிச்சலானான், இக்பால்.
''இப்ப எதுக்கு டாட் இந்த, 'டெலி ஹெல்த் ட்ரீட்மென்ட்!' நான் இப்போ, நார்மல் ஆயிட்டேன்.''

''நீ, இப்படி சொல்றது சந்தோஷம் தான். ஆனா, நீ நார்மல் ஆகலைன்னு, டாக்டர் ப்ரவீண் குப்தா சொல்றார். உனக்கு இருக்கிற, 'பை போலார் டிஸ்ஆர்டர்' குணமாக ரெண்டு வருஷமாகும். அதுவரைக்கும், நீ சிகிச்சையில இருக்கணும்ங்கிறது அவரோட மெடிக்கல் கருத்து. அதை நாம அலட்சியம் பண்ண முடியாது.''
''அப்பா... அந்த டாக்டர், பணத்தாசைப் பிடித்தவர். நீங்க அவரை அளவுக்கு அதிகமா நம்பறீங்க. இனிமேல் எனக்கு எந்த சிகிச்சையும் வேண்டாம். நான் இப்ப நம்ம பிசினசை பார்த்துட்டு நார்மலாய் தான் இருக்கேன். நீங்க தான் பார்த்துட்டு இருக்கீங்களே!''
''நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா.''
''என்ன?''
''நீ, இன்னமும் அந்த பிரச்னையிலிருந்து முழுமையா குணமாகலை. அப்படி குணமாகியிருந்தா, அதே, 'டிஸ்ஆர்டர்' நோயால் பாதிக்கப்பட்ட உன் நண்பர்கள் தருண், ஜோஷ் ரெண்டு பேரையும் உன் கூடவே தங்க வெச்சுக்கிட்டு நெருக்கமா இருந்திருக்க மாட்டே.
''ஆந்திரா ஹனம்கொண்டா, 'மென்டல் ஹெல்த் நியூரோ சயின்ஸஸ் ஹாஸ்பிடல்'ல, அவங்க ரெண்டு பேரும், நீ சிகிச்சை எடுத்துகிட்ட அதே தீவிர சிகிச்சைப் பிரிவில் உனக்கு சக நோயாளிகளாய் இருந்தவங்க. நீ, அவங்க கூட பேசும் போதும், பழகும் போதும் ரொம்பவும் சந்தோஷமாய் இருக்கேங்கிற ஒரே காரணத்துக்காகத் தான், அந்த நட்புக்கு நான் அனுமதி கொடுத்தேன்.
''ஆனா, நீ அந்த மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' ஆகி வந்த பின்னாடியும், அந்த நட்பை தொடர்வதும், அவங்களை உன் கூடவே தங்க வெச்சுக்கறதும், என் மனசுக்கு என்னமோ சரியாப்படலை.''
''டாட்... ஒருத்தர் மனச்சிதைவு நோயிலிருந்து மீண்டுட்டாலும், இந்த உலகம் அந்த நபரை ஒரு மனநோயாளியாய் தான் பார்க்கும்ங்கிறதுக்கு, நீங்களே ஒரு நல்ல உதாரணம். தருணும், ஜோஷும், என் கூட சக நோயாளிகளாய் இருந்தவங்க தான்.
''ஆனா, இன்னிக்கு அவங்க தெளிவோடு இருக்காங்க. தருண், வங்கி அதிகாரி. ஜோஷ், ஐ.டி., கம்பெனியின் குழு தலைவன். அவங்க நார்மலாய் இல்லாத பட்சத்துல, அந்த நிறுவனங்களில் வேலை பார்க்க முடியுமா?''
''இக்பால், நீ இப்படி தெளிவாய் பேசறதை கேட்கும் போது எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கு. இருந்தாலும், அடி மனசுக்குள்ளே சின்னதா ஒரு பயம். போன தடவை உனக்கு பண்ணின, 'மைண்ட் மேப்பிங் ரிப்போர்ட்'டை மறுபடியும் எடுத்து, படிச்சுப் பாரு. உனக்கே சில விஷயங்கள் புரியும்.''
''அந்த, 'பை போலார்' பிரச்னை மறுபடியும் எனக்கு வந்துடுமோன்னு நினைக்கறீங்களா?''
''லேசா ஒரு பயம் வருது.''
''ஓ.கே., டாட்... உங்களுக்காக நான் நாளைக்குக் காலையில், 10:00 மணிக்கு டில்லியில் இருக்கிற சைக்யாட்ரிக் டாக்டர் ப்ரவீண் குப்தாவுக்கு போன் பண்ணி பேசி, அவருகிட்ட அந்த, 'டெலி ஹெல்த் ட்ரீட்மென்ட்'டை எடுக்கறேன், போதுமா!''
''இப்ப நீ சொன்னியே இது சரி. இந்த ஒரு தடவை மட்டும் அந்த டாக்டர்கிட்ட பேசிடு, போதும். நான் மறுபடியும் அடுத்த வாரத்துல ஒருநாள், அபுதாபியிலிருந்து கோயமுத்துாருக்கு வரவேண்டிய வேலையிருக்கு. அப்படி நான் வரும்போது, நீயும், நானும், ரெண்டு நாள் கேரளா போக வேண்டி வரலாம்.''
''கேரளாவா... எதுக்கு?''
''அதைப்பத்தி நேர்ல பேசுவோம்.''
''சரி... நான் போனை, 'கட்' பண்ணட்டுமா டாட்?''
''ஒரு நிமிஷம்.''
''என்ன?''
''நான் எப்பவுமே சொல்றதுதான். உன் நண்பர்கள் தருண், ஜோஷ் இந்த ரெண்டு பேரையும், 'அவாய்ட்' பண்ணு. அவங்களை உன் கூட தங்க வைக்காதே. அவங்க சரியில்லை.''
''சாரி, டாட்... இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்பவும் பிடிச்சவங்க நீங்களும், அம்மாவும் தான். அம்மா இப்ப உயிரோடு இல்லை. உங்களுக்கு அடுத்தபடியா எனக்கு தருணையும், ஜோஷையும் தான் ரொம்பவே பிடிக்குது. அதுக்கு காரணம் என்னான்னு எனக்குத் தெரியலை.
''அவங்க எது செஞ்சாலும் சரி, எதைப்பத்திப் பேசினாலும் சரி, அது என் மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குது. அந்த சந்தோஷத்தை இழக்க நான் தயாராயில்லை. அவங்க எப்பவும் என் கூடத்தான் இருப்பாங்க.''
''இக்பால்... நான் என்ன சொல்ல வர்றேன்னா அவங்க...''
''சாரி, டாட்... எனக்கு இப்போ உங்ககிட்ட பேசிட்டிருக்க நேரமில்லை. முக்கியமான ஒரு வேலையை உடனடியாய் நான் இங்கே பண்ண வேண்டியிருக்கு; எதுவாயிருந்தாலும் நாளைக்குக் காலையில் பேசிக்கலாம்.''
கோபத்தோடு சொன்ன இக்பால், மொபைல்போனின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த, 'ப்ளாட்டினம் ப்ளாக் 12 ஜி.பி., ரேம்' மொபைல்போனை கீழே போட்டு, அதன் மேல் தன் வலது பூட்ஸ் காலை வைத்து, பலம் அனைத்தையும் திரட்டி ஓங்கி உதைத்தான்.
எதிர்புற சுவரில் போய் மோதிய மொபைல்போன், நொறுங்கி, தன்னுடைய டிஜிட்டல் உடம்பின் உள்ளுறுப்புகளை சிதறடித்தபடி உயிர் விட்டது.
போலீஸ் ஸ்டேஷன்-
இரவு, 11:15 மணி.
லாக்கப்பில் இருந்த பிக்பாக்கெட் பேர்வழி ஒருவனை, லத்தியால் நலம் விசாரித்து விட்டு, நாற்காலிக்கு வந்து சாய்ந்தார், கான்ஸ்டபிள் சிவராமன். இன்னொரு கான்ஸ்டபிள் ஒருவர் வேக நடையோடு நெருங்கி, பதட்டமான குரலில், ''ஏ.சி.பி., வந்துட்டிருக்கார்,'' என்றார்.
நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி, அவசர அவசரமாய் எழுந்த சிவராமன், பெல்ட்டையும், தொப்பியையும் சரிப்படுத்தியபடி, ஸ்டேஷனின் வாசலை நோக்கிப் போனார். 'இன்னோவா' காரிலிருந்து இறங்கிய, அசிஸ்டென்ட் போலீஸ் கமிஷனர் செழியன், வராந்தா படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்.
ஸ்டேஷனுக்குள் இருந்த ஒட்டுமொத்த கான்ஸ்டபிள்களும் நேர்கோடுகளாய் மாறி, விரைப்பாய் நின்று, 'சல்யூட்' வைத்தனர். அதை ஒரு பார்வையால் ஏற்ற அந்த நடுத்தர வயது செழியன், உள்ளே நுழைந்து, நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.
பார்வையை சுற்றும்முற்றும் அலைபாய விட்டபடி, சிவராமனை ஏறிட்டபடி, ''இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் எங்கே?'' என, கேட்டார்.
''அவர், வெளியே போயிருக்கார் சார்.''
''வெளியேன்னா... பர்சனலா, 'ஆன் ட்யூட்டி'யா?''
''ஆன் ட்யூட்டி சார்... ஒரு குற்றவாளியை தேடிகிட்டு உக்கடம் வரைக்கும் போயிருக்கார்.''
''எப்ப போனார்?''
''இரவு, 7:00 மணி இருக்கும், சார்.''
''இப்ப மணி, 11:15. இன்னுமா குற்றவாளியை அங்கே தேடிகிட்டு இருக்கார்?''
''காரணம் என்னான்னு தெரியலை, சார். எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துடுவார். 12:00 மணிக்கு, காந்தி பார்க் ஏரியாவில், 'பேட்ரோலிங்' போகணும் சார்.''
''இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டு, அவர் எப்ப ஸ்டேஷனுக்கு வருவார், இப்ப எங்கேயிருக்கார்ன்னு கேளு.''
சிவராமன் தன் மொபைல்போனை எடுத்து, முத்துக்குமரன் மொபைல் எண்ணுக்கு இரண்டு தடவை முயற்சி செய்து பார்த்தார். பிறகு, பவ்யமாய், செழியனுக்கு அருகில் குனிந்தபடி, ''தொடர்பு கொள்ள முடியலை சார்... தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக, 'ரெக்கார்டட் வாய்ஸ் மெசேஜ்' வருது,'' என்றார்.
சில விநாடிகள் மவுனம் காத்த செழியன், தன் அடர்த்தியான மீசையை இடது கை விரல்களால் நெருடியபடி, ''சரி, ஹாஸ்பிடல்ல அனுமதிக்கப் பட்டிருக்கிற புவனேஷ் இப்போ எப்படி இருக்கார்?'' என, கேட்டார்.
''பரவாயில்ல சார்... இன்னும் ரெண்டு நாளில், ஐ.சி.யூ.,வில் இருந்து, 'நார்மல் வார்டு'க்கு மாற்றிடலாம்ன்னு, டாக்டர் சொன்னார்.''
''காணாமல் போன முகிலாவைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சுதா?''
''இல்ல சார்.''
''முகிலாவை கண்டுபிடிக்கிற விஷயத்துல, இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சரியான முறையில் விசாரணை நடத்தாமல், காலம் தாழ்த்திட்டதாக, கமிஷனரிடம் புகார் மனு கொடுத்திருக்கார், முகிலாவோட அப்பா. அந்த மனுவை, கமிஷனர் எனக்கு அனுப்பி, 'முகிலா விஷயத்துல என்ன நடந்துட்டிருக்கு'ன்னு கேட்கிறார். நான் அவருக்கு என்ன பதில் சொல்லட்டும்?''
''சார்... சம்பவம் நடந்து முழுசா ஒருநாள் கூட ஆகலை. இன்ஸ்பெக்டரும், 'சைபர் க்ரைம்' மூலமா, முகிலாவோட மொபைல்போன் நம்பரை வெச்சு, அந்தப் பொண்ணு இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சி செஞ்சார். ஆனா, எதிர்பார்த்த பலன் கிடைக்கலை.''
''ஆரம்பத்தில் இந்த வழக்குல, இன்ஸ்பெக்டர் அவ்வளவா ஆர்வம் காட்டாம, கொஞ்சம், கால தாமதம் பண்ணிட்டதாய் கேள்விப் பட்டேன். உண்மையா?''
''உண்மை தான் சார்... தருண், புவனேஷ் ரெண்டு பேரும் பொய் சொல்றாங்களோன்னு இன்ஸ்பெக்டர் சந்தேகப்பட்டுட்டார்.''
''புவனேஷோட நண்பன் தருண் இப்ப எங்கே?''
''அவர், வங்கி ஊழியர், சார். ஹாஸ்பிடல்ல மதியம் வரைக்கும் இருந்தார். அதுக்கப்புறம் அவரோட வங்கி அதிகாரி, 'வங்கியில ஏதோ ஒரு முக்கியமான வேலை இருக்கு'ன்னு போன் பண்ணிச் சொன்னதும், இன்ஸ்பெக்டர்கிட்ட, 'பர்மிஷன்' கேட்டுட்டு கிளம்பிப் போயிட்டார். இனி, நாளைக்குக் காலையில தான் வருவார்.''
கான்ஸ்டபிள் சிவராமன் பேசிக் கொண்டு இருக்கும்போதே, மேஜையில் இருந்த, 'லேண்ட் லைன்' டெலிபோன் முணுமுணுப்பாய் கூப்பிட்டது.
தனக்குப் பக்கத்தில் இருந்த கான்ஸ்டபிளைப் பார்த்து, செழியன் கண் அசைக்க, அவர் போய், ரிசீவரை எடுத்தார். போலீஸ் ஸ்டேஷனின் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டதும், மறுமுனையில் கரகரத்த ஒரு குரல் கேட்டது.
''சிட்டி கன்ட்ரோல் அறை அலுவலகத்தில் இருந்து சி.ஆர்.ஓ., பேசறேன். உங்க இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஸ்டேஷனை விட்டு எத்தனை மணிக்கு வெளியே போனார்?''
''இரவு, 7:00 மணிக்கு சார்.''
''யாரைப் பார்க்கப் போனார்?''
''எனக்கு அந்த விபரமெல்லாம் தெரியாது, சார்... ஒரு குற்றவாளியை தேடிட்டு போறதா சொன்னார்.''
''நடுவுல ஏதாவது போன் பண்ணினாரா?''
''இல்லை,'' என்றவர், டெலிபோனின் மறுமுனை மவுனம் சாதிக்க, ''சார்... எதுக்காக இந்த விசாரணை?'' கேட்டார், கான்ஸ்டபிள்.
''இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், இப்ப உயிரோடு இல்லை.''
''என்ன சார் சொல்றீங்க?''
''அதிர்ச்சியான செய்தி தான்... வேற வழியில்லை, நான் சொல்லிடுறேன். உக்கடம் ஏரியாவில், போத்தனுார் ரயில்வே தண்டவாளத்துக்கு பக்கத்தில் குட்டை அருகே, அவருடைய பைக் விபத்துக்குள்ளாகி, 'ஸ்பாட்'லயே இறந்துட்டார். விபத்துக்குக் காரணம், மிதமிஞ்சிய குடிபோதை.''
தொடரும்
ராஜேஷ்குமார்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X