ஒரு ஊரில், அறிவாளி ஒருவர் இருந்தார். அவருக்கு, கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போய் கடவுளை வணங்குவார். அதுக்கப்புறம், காட்டுக்கு போய் விறகு வெட்டி, விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வைத்து நிம்மதியாக வாழ்க்கை நடத்தி வந்தார்.
ஒருநாள், காட்டுக்குப் போகும் வழியில், ஒரு நரியை பார்த்தார். அதற்கு முன்னங்கால் இரண்டுமே இல்லை.
'இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை... அப்படி இருக்கறப்போ, இது எப்படி வேட்டையாடி, தன் பசியை போக்கிக் கொள்ள முடியும்...'ன்னு யோசிக்க ஆரம்பித்தார்.
அச்சமயம், அந்த பக்கமாக ஒரு புலி வந்தது. அதை பார்த்தவுடன், ஓடிப்போய் மரத்துக்கு பின்னால் ஒளிந்து, என்ன நடக்கிறது என, கவனிக்க ஆரம்பித்தார்.
பெரிய மானை அடித்து இழுத்து வந்த புலி, சாப்பிட்டது போக மீதியை அங்கேயே போட்டு சென்றது.
புலி போன பின், கால் இல்லாத நரி, மெதுவாக நகர்ந்து வந்து, மிச்சமிருந்ததை சாப்பிட்டு திருப்தியானது.
மரத்துக்கு பின் நின்று இதை கவனித்து இருந்தவர், யோசிக்க ஆரம்பித்தார்.
'ரெண்டு காலும் இல்லாத நரிக்கே, ஆண்டவன் சாப்பாடு போடுறான். அப்படி இருக்கறப்போ, தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா... எதுக்கு அனாவசியமா வெயில்லயும், மழையிலயும் கஷ்டப்படணும்... எதுக்காக வியர்வை சிந்தி விறகு வெட்டணும்...'ன்னு யோசித்தார்.
அதன்பின் அவர், காட்டுக்கே போவதில்லை. கோடாலியை துாக்கி எறிஞ்சிட்டு, ஒரு மூலையில் உட்கார்ந்துட்டார். அப்பப்போ கோவிலுக்கு மட்டும் போய், 'கடவுள் நம்மை காப்பாத்துவார். அவர், நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார்...'ன்னு நம்பி, கண்ணை மூடி கோவில் மண்டபத்தின் துாணில் சாய்ந்து உட்கார்ந்துடுவார்.
ஒவ்வொரு நாளும் கழிந்தது. சாப்பாடும் வந்தபாடில்லை; பசியால் வாடி, உடம்பு துரும்பாக இளைச்சு, எலும்பும், தோலுமாக மாறினார்.
ஒருநாள் ராத்திரி நேரம், கோவிலில் யாருமே இல்லை. மெதுவா கண்ணை திறந்து, 'ஆண்டவா... என் பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா... நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா... காட்டுல, நரிக்கு, புலி மூலமா சாப்பாடு போட்டியே... அதை பார்த்துதானே நானும் இங்கே வந்தேன். என்னை, இப்படி தவிக்க விட்டுட்டியே, இது நியாயமா...'ன்னு புலம்பினார்.
அப்போது, அசரீரி ஒலித்தது...
'முட்டாளே... நீ பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது, நரிகிட்ட இருந்து இல்ல, புலிகிட்ட இருந்து... புலி போல் உழைத்து, சாப்பிட்டு, மீதியை, இயலாதவர்களுக்கு தானமாக கொடு.
'யாரிடம் பாடம் கற்றுக்கொள்ள போகிறோம் என்று, நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஒருவன் செய்ய வேண்டியது, அறம் மட்டுமே. அதுபோல, ஒழிக்க வேண்டியது, பழி தரும் சோம்பலான செயல்களை தான்...' என்று அறிவுறுத்தியது, அசரீரி.
ஆ. சி. கோவிந்தராஜன்