காங்கிரஸ் தலைவர், தீரர் சத்தியமூர்த்தியின் பேச்சை சட்டசபையில் கேட்பது ஒரு தனி சுகம். அப்போது அவர், எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தார்.
ஒருசமயம், வைஸ்ராயின் நிர்வாக சபை உறுப்பினரான, 'சர்' பட்டம் பெற்ற ஓர் ஆங்கிலேயர், ஒரு சொற்பொழிவை தயாரித்து வந்து, சட்டசபையில் படித்துக் கொண்டிருந்தார்.
பிரமாதமான ஆங்கிலத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, சத்தியமூர்த்தி இடையே குறுக்கிட்டு, 'இது, சாமுவேல் ஜான்சன் சொன்னது... இது, எட்மண்ட் பர்க் சொன்னது... இது, பெஞ்சமின் டிஸ்ரேலி சொன்னது...' என்று சொல்லிக் கொண்டே வந்தார்.
அதைக் கேட்டுக் கொண்டே வந்த அந்த ஆங்கிலேயருக்கு, ஒரு கட்டத்தில் கோபம் வந்து, 'நீர் ஒரு முட்டாள்...' என்று, கத்தினார்.
அதற்கு சத்தியமூர்த்தி சிறிதும் கோபப்படாமல், 'இது மட்டும் தான் உமது சொந்தக் கருத்து...' என்றார்.
அதைக்கேட்ட அந்த ஆங்கிலேயர், தன் போலி மேதாவித்தனத்தை எண்ணி வெட்கப்பட்டார்.
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் என, பெயர் பெற்றவர், ஆஸ்கார் ஒயில்ட்.
அவர், வீட்டில் இருக்கும்போது, கதவை உள்பக்கமாக பூட்டிக் கொள்வார். வெளியே செல்லும்போது, கதவை பூட்டாமல் அப்படியே திறந்து விட்டுச் செல்வார்.
அவரது இந்த செயல், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு பெரும் வியப்பை அளித்தது.
ஒருநாள், அவர் வீட்டை திறந்து போட்டு விட்டு வெளியே கிளம்பியபோது, பக்கத்து வீட்டுக்காரர் வந்து, 'என்ன மிஸ்டர் ஒயில்ட்... வெளியே செல்லும்போது, வீட்டை திறந்து போட்டு செல்கிறீர்களே... வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை யாராவது களவாடிச் சென்றுவிட மாட்டார்களா...' என்று, கேட்டார்.
அதைக் கேட்டு புன்னகைத்த, ஆஸ்கார் ஒயில்ட், 'என் வீட்டிலிருக்கும் ஒரே மதிப்புள்ள பொருள், நான் தான். நானே வெளியில் சென்று விட்ட பிறகு, வீட்டை எதற்காக பூட்ட வேண்டும்...' என்றார்.
இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம்.
புதுச்சேரியில், ஆங்கிலேயருக்குத் தெரியாமல், மறைமுகமாக விடுதலைப் புரட்சி வீரர்களுக்கு, துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார், வ.வே.சுப்ரமணிய ஐயர்.
துப்பாக்கி சுடப் பயிற்சி பெற்றவர்களில், சுப்ரமணிய பாரதியும் ஒருவர். அவர், மிக விரைவிலேயே குறி பார்த்துச் சுட கற்றுக் கொண்டார்.
அதைக்கண்டு ஆச்சரியப்பட்ட ஒரு விடுதலை புரட்சி வீரர், 'குறி தவறாமல் சுட எப்படி இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டீர்கள்... நானும் தொடர்ந்து முயற்சிக்கிறேன். ஆனால், என் குறி தவறி விடுகிறது...' என்று, வருத்தத்துடன் கூறினார்.
அதைக் கேட்டு புன்னகைத்த பாரதி, 'அது மிக எளிது. நீ குறி பார்க்கும் பொருளை, ஒரு ஆங்கிலேயனாக நினைத்துக் கொள். அந்த வெறி பிடித்தவனின் தலையையோ, மார்பையோ குறி வைத்துச் சுடுவது போல் சுடு; குறி தவறாது. நான் இப்படி நினைத்துத் தான் குறி தவறாமல் சுடக் கற்றுக் கொண்டேன்...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்