அன்புள்ள சகோதரிக்கு —
என் வயது: 49. நானும், கணவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டவர்கள். நான், பத்திர பதிவு அலுவலகத்தில் பணிபுரிகிறேன். பெயின்டராக இருக்கிறார், கணவர். எங்களுக்கு மகன், மகள் இருக்கின்றனர். மகள் தான் மூத்தவள்.
வயது: 25. எங்களது பிள்ளைகளும் யாரையாவது காதலித்தால், அவர்களுக்கே திருமணம் செய்ய எண்ணியிருந்தோம். மகள், யாரையும் காதலிக்கவில்லை, என்றாள்.
தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக மகன் கூறியதால், அப்பெண்ணையே அவனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தோம்.
அதற்கு முன், மகளுக்கு திருமணம் செய்து விடலாம் என்று, வரன் தேடினோம்.
தெரிந்த இடத்திலிருந்து, பெண் கேட்டு வந்தனர், மாப்பிள்ளை வீட்டினர். வரனுக்கு மூன்று அண்ணன் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர். மாப்பிள்ளை பற்றி விசாரித்தோம். அவர், சென்னையில் வேலை பார்ப்பதாகவும், அவரது குடும்பத்தினர், கேரளாவில் வசிப்பதாகவும், மாப்பிள்ளை நல்ல குணமுடையவர், மகளை நன்றாக வைத்துக் கொள்வார், என்று கூறினர். அதை நம்பி, அவரையே மகளுக்கு நிச்சயம் செய்தோம்.
நிச்சயமானதிலிருந்து, தினமும் மகளுக்கு போன் செய்து பேசுவார், மாப்பிள்ளை.
அப்போது, என் மகள் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். காலை, 8:00 மணிக்கு வேலைக்கு போனால், இரவு, 7:00 மணிக்கு தான் திரும்புவாள். மிகவும் களைப்புடன் வருவதால், மாப்பிள்ளை போன் செய்தால், 'இப்போதுதான் வேலை முடிந்து, வீட்டிற்கு வந்துள்ளேன். மிகவும் களைப்பாக இருப்பதால், சிறிது நேரத்துக்கு பின் பேசுகிறேன்...' என்பாள்.
உடனே, அவர் கோபமடைந்து, 'ஏன் என்னை உனக்கு பிடிக்கவில்லையா... நான் எப்போது போன் செய்தாலும் இதே பதிலை கூறுகிறாய்...' என்று, கேட்டுள்ளார்.
அதற்கு, 'உங்களை பிடிக்காமலா திருமணத்துக்கு சம்மதித்தேன். வேலை பளு காரணமாக அடிக்கடி பேச முடிவதில்லை...' என்றிருக்கிறாள்.
இது எதையும் காதில் போட்டுக் கொள்ளாத மாப்பிள்ளை, தன் அக்கா மற்றும் அண்ணியுடன் எங்கள் வீட்டிற்கு வந்து, 'உங்கள் மகள் என்னுடன் சரியாக பேசுவதில்லை. என்னை பிடிக்கவில்லை என்றால் கல்யாணத்தை நிறுத்தி விடுங்கள்...' என்றார்.
'அவள், வேலை முடிந்து களைப்புடன் வருவதால், எங்களுடன் கூட சரியாக பேசுவதில்லை...' என்று சமாதானம் கூறி அனுப்பினோம்.
ஒரு வழியாக மகள் திருமணம் முடிந்தது. அதன்பின், மகன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து, மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்றோம்.
அப்போதும், அதே பல்லவியை பாடினார், மாப்பிள்ளையின் அக்கா. ஏதேதோ சொல்லி சமாளித்து விட்டு வந்தோம்.
மகன் திருமணத்துக்கு வந்த மகளிடம், 'என்ன பிரச்னை?' என்று விசாரிக்க, 'மாப்பிள்ளைக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. வீட்டிலேயே தினமும் மது அருந்துகிறார். மேலும், 'வயாக்ரா' போன்று ஏதோ ஒரு மாத்திரையை போட்டுக் கொண்டு, என்னுடன் உறவு வைத்துக் கொள்கிறார்...' என்று கூறி, அழுதாள்.
மாப்பிள்ளையின் அக்கா மற்றும் அண்ணியிடம் இது குறித்து கேட்டதற்கு, மீண்டும் எங்களையே குறை கூறுகின்றனர்.
'இனி, அவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. மீறி என்னை அங்கு அனுப்பினால், ஏதாவது செய்து கொள்வேன்...' என்று அழுகிறாள், மகள்.
குடிப்பழக்கத்தையும், மாத்திரை சாப்பிடுவதையும் நிறுத்த, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக... மாப்பிள்ளையிடம், கெஞ்சி கேட்டு விட்டேன்.
'உங்கள் மகளை, இனி இங்கு அனுப்ப வேண்டாம். அவளுடன் வாழ விரும்பவில்லை...' என்று கூறிவிட்டார், மாப்பிள்ளை.
இதற்கிடையில், அவரது அக்கா கணவர் போன் செய்து, 'உங்கள் மகள் நடத்தை சரியில்லை; விவாகரத்து வாங்கி கொடுத்து விடலாம்...' என்று கூறினார்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை; தெளிவான ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
உங்கள் மகளின் கணவரை பற்றிய நிறைகுறைகளை அலசுவோம்...
* குடும்ப அங்கத்தினர் அதிகம் இருக்கும் வீட்டில் வாழ்க்கைப்படுவது அவலமான விஷயம்
* பொதுவாக தமிழ்நாட்டு திருமணங்களில் நிச்சயதார்த்தத்துக்கும், திருமண தேதிக்கும் இடையே இரண்டு மூன்று மாத இடைவெளி இருந்து விடுகிறது. இந்த இடைவெளியில் தினம், 8 -- 10 மணி நேரம், வருங்கால தம்பதியினர் பேசி, வில்லங்கத்தை வரவழைத்து பிரித்து விடுகின்றனர். உங்கள் மகள், மாப்பிள்ளையுடன் ஈடுபாடாய் போனில் பேசுவதில்லை என்ற புகார் வரும்போதே, இந்த சம்பந்தத்தை நீங்கள் ரத்து செய்திருக்க வேண்டும்
* இள வயது குடி நோயாளிகள் சிறப்பான தாம்பத்யம் செய்யவோ, குடும்பத் தலைவன் என்ற பதவியை வகிக்கவோ தகுதியற்றவர்கள்
* பெண்களுக்கு திருப்திகரமான தாம்பத்ய சுகம் தர ஒருபோதும், 'வயாக்ரா' உதவாது. புகுந்த வீட்டில் அமைதி, மகிழ்ச்சிகரமான உணவு, கணவரின் காதலான அங்கீகரிப்பு போன்ற காரணிகள் தான், பெண்களை திருப்திப்படுத்தும்
* ஆணுக்கும், பொண்ணுக்குமான திருமண வாழ்க்கையில், வெளி ஆட்கள் ஊடுருவி நாட்டாமை பண்ணக் கூடாது. உங்கள் மகளின் நடத்தைக்கு மாப்பிள்ளையின் மச்சான் எப்படி எதிர்மறை சான்றிதழ் தரலாம்? உங்கள் மகள் வாழ்வில் குறுக்கீடுகள் அதிகம்
* உங்கள் மகளுக்கு குழந்தைகள் இல்லை; அவள் வேலை பார்த்து சொந்தக்காலில் நிற்கிறாள். திருமணத்தில் உங்கள் மகளுக்கு டன் கணக்கில் அதிருப்தி இருக்கிறது. உங்கள் மகளின் அபிப்ராயத்தை புறம் தள்ளினால், அவள் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் உள்ளது.
இத்தனை பாதகங்களுடன் இந்த திருமணம் தொடர வேண்டுமா? மகளை, உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள்.தகுந்த உரிமையியல் வழக்கறிஞர் மூலமாக, குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யுங்கள்.
விவாகரத்து கிடைத்தவுடன் மகளின் மறுமணத்துக்கு அவசரப்படாதீர்கள். மிக மிக நிதானமாக வரன் பாருங்கள். செவி வழி செய்திகளை நம்பாமல், மாப்பிள்ளையை பற்றி முழுமையாக விசாரியுங்கள்.
தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், உங்கள் மகளை தொடர்ந்து படிக்க வையுங்கள். மகளின் மறுமண வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை வேண்டுங்கள்.
மகளுடன் மனம் விட்டு பேசுங்கள். அவளது விருப்பு, வெறுப்புகளை முழுமையாக அறிந்து செயல்படுங்கள்.
வாழ்த்துகள்!
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.