சடாரென்று பால் பொங்கி வழிய, உடனே, அடுப்பை அணைத்தாள், வசுமதி. 10 வினாடிகள் தான். இந்த வாரத்தில், பர்னர் நனைந்தது, நான்காவது முறையா, ஐந்தாவது முறையா?
உள்ளே இருந்த கவலை, கண்களில் வழிந்தது. கவனம் தடுமாறுகிறது. யோசனைகள் ஆழமாக இல்லை. உப்பு போட மறக்கிறாள். அன்று, பருப்பு, காய்கறி, சாம்பார் பவுடர், பெருங்காயம் என்று கரைத்து விட்டுப் பார்த்தால், புளியே ஊறப் போடவில்லை. கடை வீதிக்குப் போனபோது, மஞ்சள் புடவைக்கு சம்பந்தமே இல்லாமல், நீல ரவிக்கை அணிந்திருந்தாள்.
வங்கியில் காசோலையை நீட்டும்போது, தேதியைத் தவறாகப் போட்டிருப்பதை சுட்டிக் காட்டினாள், இளம்பெண்.
கூந்தல் நரைக்க, 60ஐ நெருங்கும் வயது. முட்டி வலி லேசாக எட்டிப் பார்த்தது. கண்ணாடி இல்லாமல் வாசிக்க முடியவில்லை.
''அம்மா... இன்னிக்கு, 'போர்ட் மீட்டிங்' மதிய சாப்பாடு வெளில; நீ எதையும், 'பேக்' பண்ணி வெச்சுடாதே,'' என்று குரல் கொடுத்தான், ராகேஷ்.
''அப்படியா... கடலை ஊற வெச்சுட்டேன். ராத்திரிக்கு, சப்பாத்தியும், சன்னா மசாலா பண்ணட்டுமா?'' என்றாள்.
''அய்யோ, பாப்ரே அதெல்லாம் வேண்டாம்... நீ பண்ற வத்தக் குழம்பையும், கத்தரிக்காய் வதக்கலையும் ஒழுங்கா பண்ணு போறும்... எதுக்கு சன்னாவை கஷ்டப்படுத்தறே?'' என்று சிரித்தான், ராகேஷ்.
''ஏன் அப்படி சொல்றே... சின்ன வயசுல, 'பூண்டு அதிகமா போட்டு, நீ பண்றது பிரமாதமா இருக்கும்மா'ன்னு என் கையைப் பிடிச்சுகிட்டு சொல்லுவே... வாரத்துல, மூணு நாள் சாப்பிடுவே... இப்போ என்ன ஆச்சு?'' என்றாள்.
அவள் குரல் அவளுக்கே கேட்டதா என்று தெரியவில்லை.
''ஆமாம்மா, அது அந்தக் காலம். உன் திறமை, ஆர்வம் எல்லாமே, 'டாப்'ல... அதனால, சமையலும் சூப்பரா இருந்தது. இப்போ வயசாகுது இல்லையா, எதையாவது மறந்து போயிடறே... இட்ஸ், ஓ.கே., ரெஸ்ட் எடுத்துக்கோ,'' என்று எழுந்து, 'ஹெட்போன்' மாட்டியபடி சென்று விட்டான்.
மொபைல் போன் அழைத்தது.
''ஹலோ, அம்மா... எப்படி இருக்கே?'' ஆர்த்தியின் குரல்.
மகளின் அழைப்பு, உடனே மனதை இதமாக்கியது.
''நல்லா இருக்கேன், ஆர்த்தி... பூனால இருந்து, மாப்பிள்ளை வந்துட்டாரா... நிவின் குட்டி எப்படி இருக்கான்... எல்லா, 'ரைம்சும்' சொல்றானா? வந்து,10 நாளாச்சே... இந்த வாரக் கடைசில கூட்டிகிட்டு வாயேன்,'' என்றாள்.
''அய்யோ, அம்மா... ஏன் இப்படி, 'எக்ஸ்பிரஸ் ஸ்பீட்'ல... ஒரே நேரத்துல, எவ்வளவு கேள்வி... சரியான மக்கும்மா நீ,'' என, ஆர்த்தி சிரித்தபோது, அதில் இருந்த நையாண்டி, நெஞ்சைக் கீறியது.
''சாரி ஆர்த்தி... சொல்லு.''
''உடனே, 'ஆப்' ஆயிட்டியா... அதான் உன்கிட்ட பிரச்னை,'' என்று, பெருமூச்சு விட்டாள், மகள்.
''சரி... சொல்லு ஆர்த்தி.''
''நிவின் அங்க வந்தபோது, 'சோலார் சிஸ்டம்' பத்தி சொல்லிக் கொடுத்தியா?''
''ஆமாம்... ஏன்?''
''ஒன்பது கிரகங்கள்ன்னு சொன்னியா?''
''ஆமாம்... கதை சொல்லு கதை சொல்லுன்னு கேட்டான்... ஒரு மாறுதலுக்காக, சூரிய குடும்பம் பத்தி சொன்னேன். ஏன், ஆர்த்தி?'' என்றாள்.
''ஏம்மா, இந்த வேண்டாத வேலை... உனக்கோ, 60 ஆகுது... 'அப்டேஷன்' இல்லை; படிச்சது நினைவுலயும் இல்லே... இப்பல்லாம், ஒன்பது இல்லே, எட்டு கிரகங்கள் தான்... புளூட்டோ இப்போ கிரகம் என்ற அந்தஸ்துல இல்லே, எடுத்தாச்சு...
''நீ என்னடான்னா அவன்கிட்ட புளூட்டோ ஒரு கிரகம்ன்னு சொல்லியிருக்கே... அவன் மனசுல தப்பா பதிஞ்சு, நான் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன்கிறான்.. நமக்கு, ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சாத்தான் சொல்லணும்... இல்லேன்னா, காக்கா, குருவி கதைன்னு சொல்லிட்டு விட்டுடணும். போம்மா நீ,'' என்று, பொரிந்து தள்ளினாள், ஆர்த்தி.
உண்மை தான். எப்படி மறந்து போனாள்? ஆர்வத்துடன் வாசித்த வானியல், விருப்பமான பாடம் அல்லவா. ஆனால், நினைவுகள் சரியாக இல்லை. காலம் தலையில் முதுமையைக் கட்டியது. அது தந்த பரிசு, இந்த மறதி. தடுமாறினாள், வசுமதி.
''சாரி, ஆர்த்தி... இனி, கவனமா இருக்கேன். இப்பெல்லாம் பழைய மாதிரி இல்ல; நிறைய மறதி. நேத்திக்கு என்ன சமையல்ன்னு யாராவது கேட்டால், சட்டுன்னு சொல்ல முடியலே.''
''அதாம்மா, நிவின்கிட்ட கூடுதல் கவனமா இரு... ஒருநாள், வீட்டு வேலையில், டிகாஷன்னு நெனச்சு, பால்ல வத்தக் குழம்பை விட்டியாம்... முடிஞ்சா டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன். 'இப்படியே விட்டா, 'அல்சைமர்' அது இதுன்னு கொண்டு போய் விட்டுடும்...'ன்னு, அப்பா சொன்னார். உன்னால எல்லாரும் கஷ்டப்படணும்... ஓ.கே., வெச்சுடறேன்ம்மா.''
கண்ணீர் பெருக்கெடுக்க, தொடர்பை துண்டித்தாள், வசுமதி.
'முதுமை பெருந்தொற்றா... ஏன் இப்படி வெறுக்கின்றனர். மறதி இருந்தால் என்ன, அது காலத்தின் கொடை என்று நினைக்கக் கூடாதா... இளமை நிரந்தரமில்லையே... ஒருவரின் கடமை என்பது, மற்றவரின் மனதை நிறைவு செய்வதுதானே.
'இவ்வளவு காலத்தில், என் கடமையை, பேரன்புடன், பொறுப்புடன், மகிழ்ச்சியுடன் சரியாகத்தானே செய்தேன். ஆனால், இப்போது வேண்டாத மனுஷியாகி விட்டேனா? ஆம், அப்படித்தான். அதில் பிழையில்லை. மனிதனின் முதல் கடமையே, அருகில் இருப்பவனுக்கு உதவுவதுதானே... உபத்தரவமாக, மற்றவருக்கு தொந்தரவு தருபவளாகி விட்டேன்.
'அய்யோ...' என, மன வேதனையுடன், காலணி அணிந்து, மாடியிலிருந்து இறங்கி நடந்தாள். காற்று கூட இதமாக இல்லை. எதிரில் வந்த பால்காரர், அவள் கால்களை வித்தியாசமாக பார்த்தபடி சென்றார். அப்போது தான் கவனித்தாள், கருப்பும் பச்சையுமாக இரு வெவ்வேறு காலணிகள் அணிந்திருந்தாள்.
''வசும்மா!'' என்று, குரல் கேட்டது.
திரும்பினாள்.
பெரிய, 'ஹோண்டா சிட்டி' கார் ஒன்றிலிருந்து இளைஞன் ஒருவன் இறங்கினான்.
''நல்லா இருக்கீங்களாம்மா... எவ்வளவு வருஷமாச்சும்மா, நாந்தான் கதிர்வேல், அஞ்சலை மகன்,'' என்று, சிரித்தான்.
சட்டென்று நினைவு வந்தது. பெரம்பூரில் நான்காவது மாடி, ப்ளாட்டில் இருந்தபோது, வீட்டு வேலை செய்ய வந்த அஞ்சலை மகன், கதிர்வேல். கையில் பாடப்புத்தகத்துடன் தாயின் கூடவே இருப்பான்.
''கதிர்வேல்... நல்லா இருக்கியாப்பா, அம்மா நலமா... நாங்க, அண்ணாநகர் வந்து, 15 வருஷமாச்சுப்பா,'' என்றாள், மலர்ச்சியுடன்.
''அம்மா, நல்லா இருக்காங்க... எப்பவும் உங்களை நெனச்சு, உங்களைப் பத்திதான் பேசுவாங்க; நானும்தாம்மா... எனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பீங்க... 'ஸ்கூல் பீஸ்' கட்டியிருக்கீங்க... தவிர, இந்தக் கார், என் ஆபிஸ், பிசினஸ் எல்லாமே நீங்க போட்ட பிச்சை, வசும்மா,'' என்றான்.
''அய்யோ... என்னப்பா பிச்சை அது இதுன்னுகிட்டு... நீ நல்லா படிக்கிற பையன்... அதுதான் இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கும்,'' என்றாள்.
''இல்லம்மா... பெரிய இன்ஜினியர் படிப்பு, சட்டப்படிப்பு, ஆடிட்டர் படிப்புக்கே வேலை சரியா கிடைக்காத காலம்மா... நான் படிச்ச பி.எஸ்சி.,க்கு என்னம்மா கிடைக்கும்? ஆனால், நான் இப்போ முதலாளி... நீங்க உருவாக்கின முதலாளிம்மா!''
''புரியலையே?''
''ஏழாம் வகுப்புல, கணக்கு, அறிவியல் ரெண்டு பாடத்துலயும் பெயில்... அம்மாவுக்கு மனசு ரொம்ப வேதனை; எனக்கும் தான். கடல்ல விழுந்து, உயிரை விட்டுடலாம்ன்னு நெனைச்சேன். அப்ப, நீங்க தான், எனக்கு நாய்க்குட்டி ஒண்ணு பரிசா கொடுத்தீங்க... நினைவிருக்கா?''
''ஆமாம்... நீ அதுக்கு, 'புரூஸ்லீ'ன்னு பேர் வெச்சே,'' என்று, சிரித்தாள்.
''ஆமாம்மா அதே தான்... அது, என்கிட்ட அன்பைப் பொழிஞ்சுது; நிபந்தனை இல்லாத அன்பு. மனம் மாறி, தற்கொலை எண்ணமெல்லாம் ஓடியே போச்சு. என் கூடவே அதுவும் வளர்ந்து, ஆறு குட்டிகள் போட்டது. எல்லாமே அழகழகான குட்டிங்க. நான், நீன்னு போட்டி போட்டு வாங்கிட்டுப் போனாங்க, பங்களாக்காரங்க...
''கனவு போல, கையில், 20 ஆயிரம் ரூபாய். என்னால நம்ப முடியல. அந்த பணத்துக்கு, மூணு நாய்க்குட்டி வாங்கி, இதை தொழில் போலவே துவங்கினேன். இப்ப, 'வசும்மா பெட் ஹோம்' தான் டாப்... மூணு கார், ரெண்டு வீடு, பணம்ன்னு வளர்ந்துகிட்டே இருக்கேன்.
''வெறும் விலைக்கு மட்டும் நாய்க்குட்டிகளை கொடுக்க மாட்டேன். என்னைப் போலவே பாசத்தோட வளர்க்கிற குழந்தைகள் இருக்காங்களான்னு பார்த்து, அவங்ககிட்ட பேசிட்டுதான் கொடுப்பேன். உங்களை, இன்னிக்கு நேரில் பார்பேன்னு கனவுல கூட நினைக்கலேம்மா!''
நெக்குருகி நின்றாள், வசுமதி.
உள்ளே இருந்த கசடுகள், கவலைகள், கசப்புகள் என, எல்லாவற்றையும் காட்டு
வெள்ளம் அடித்துப் போவதைப் போலிருந்தது. இனி, 'கீழ்நோக்கி பார்க்க வேண்டாம், உயரே நட்சத்திரங்களைப் பார்ப்போம்...' என்று தோன்றியது.
மனம் விட்டு, அழகாக புன்னகைத்தாள்.
வி. உஷா