ஆண்களை குறிப்பிட்டே குடும்பங்கள் அடையாளம் பெற்றுக் கொண்டிருந்த இயல்பை உடைத்து, தன் பெயரால் அடையாளம் அமையும்படி உயர்ந்த பெண்களில் இவரும் ஒருவர்.
'நீங்க கலைமணி கணவர்தானே?' - கோவை மாவட்டம் தாமஸ் வீதியில் டீக்கடை நடத்தும் கணவர் அழகு, தொடர்ந்து எதிர்கொள்ளும் கேள்வி இது!
ஆயிரம் சொல்லுங்க அழகு, ஆனாலும்...
நீங்க எப்படி பேசினாலும் என் மனசுல சின்ன கறை கூட ஏற்படாது. என்கூட நின்னு டீ ஆத்திட்டு இருந்த என் மனைவி, ஒருநாள்... விளையாட்டு உடையில வந்து நின்னதும் ஊரே ஆச்சரியப்பட்டுப் போச்சு; எல்லார் பார்வையிலேயும் உங்க உணர்வுதான்; அன்னைக்கும் என் பதில் இதுதான்...
'எனக்கு மனைவின்னா உயிர்; அவளுக்கு... நானும் விளையாட்டும் உயிர்!'
'கலைமணி - அழகு' இடையில் இந்த புரிதல் இல்லாதிருந்தால்...
என்னை பெண் பார்க்க வந்த அன்னைக்கே இவர்கிட்டே, 'எனக்கு விளையாட்டுல சாதிக்கணும்னு ஆசை; திருமணத்துக்கு பிறகும் நான் விளையாடுவேன்; சம்மதம்தானே'ன்னு கேட்டுட்டேன்.
எதிர்பார்த்தபடியே அமையும் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது; கணவருக்கு சம்மதமே என்றாலும் கலைமணியின் ஆசைப்படி எதுவும் நிகழவில்லை. வீட்டுச்சூழல், இரண்டு மகன்களையும் மகளையும் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு, கடை வேலை எல்லாமும் சேர்ந்து இவரை சோர்வாக்கிட... 10 ஆண்டுகளுக்கும் மேலாக மைதானத்தின் பக்கமே இவர் செல்லவில்லை.
அப்புறம் எப்படிங்க இந்த அடையாளம்?
'இப்படி இவ முடங்கிட்டா நம்ம வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாம போயிடும்'னு தோணிட்டே இருந்தது. ஒருநாள், 'மூத்தோருக்கான தடகளப் போட்டி' விளம்பரம் பார்த்தேன். கடையில பாய்லர் முன்னால நின்னுட்டு இருந்தவகிட்டே அதை காமிச்சு, 'நாளைக்கு போட்டி... கலந்துக்குறியா'ன்னு கேட்டேன்!
'பயிற்சி எடுக்க எனக்கு அவகாசமில்லை; 24 மணி நேரத்துல போட்டி; ஆனாலும், ஒரு நம்பிக்கை; அத்தனை வருஷமா தேக்கி வைச்சிருந்த வெறியை ஓட்டத்துல காட்டினேன்; முதல் பரிசு கிடைச்சது' பரவசத்துடன் பேசும் கலைமணியின் வயது 49. மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பல வெற்றிகளை குவித்துவைத்திருக்கிறார்.
டீக்கடை வருமானம் - மனைவியின் கனவு; சிரமமாச்சே அழகு...
எல்லாத்தையும் பணம் அடிப்படையில பார்க்க ஆரம்பிச்சிட்டா, வாழ்க்கையில சந்தோஷத்துக்கு இடமில்லாம போயிடும்! 'நான் ஜெயிச்சா என் கணவர் சந்தோஷப்படுவார்'னு என் கலைமணி சொல்றா; இந்த அன்புக்கு முன்னாடி எதுவும் எனக்கு சிரமமா தெரியலை!
உங்களுக்குன்னு ஆசைகள் ஏதும்...
'கோவையோட அடையாளம் கலைமணி'ங்கிற சூழல் வரணும்; அதுக்கு நான் காரணமா இருக்கணும்; இருப்பேன்.