நிலவுக்கும் நெருப்பென்று பேர்! (17)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2022
08:00

முன்கதைச் சுருக்கம்: சிகிச்சைக்காக டாக்டரிடம் செல்வதாக அப்பாவிடம் பேசி முடித்த இக்பால், கோபத்தில் மொபைலை உடைத்து நொறுக்கினான். கான்ஸ்டபிள் சிவாவிடம், ஏ.சி.பி., விசாரித்துக் கொண்டிருந்த நிலையில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் விபத்தில் இறந்து விட்டதாக, 'சிட்டி கன்ட்ரோல் ரூம்' அலுவலகத்தில் இருந்து போனில் தகவல் தெரிவித்தனர் -

காலை, 7:00 மணி.
கிட்டத்தட்ட எல்லா, 'டிவி' சேனல்களிலும், இயந்திரத்தனமாய் அந்தச் செய்தியை வாசித்துக் கொண்டிருந்தனர், செய்தி வாசிப்பாளர்கள்.

'கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமரன், தன் இரு சக்கர வாகனத்தில் ஒரு பழைய குற்றவாளியைத் தேடி, உக்கடம் பகுதிக்குச் சென்றார். அப்போது, போத்தனுார் ரயில் பாதை அருகே, நிலை தடுமாறி விழுந்து, தலையில் அடிபட்டு உயிரிழந்தார். விபத்து நடந்தபோது, அவர் மிதமிஞ்சிய குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது...'
சோபாவில் சாய்ந்தவாறு, 'டிவி' செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த தருண் மற்றும் ஜோஷை பார்த்து கண் சிமிட்டினான், இக்பால்.
''நியூஸ் கேட்டீங்களா... இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனின், 'டெட் பாடி'யை எவ்வளவு புத்திசாலித்தனமா, 'டிஸ்போஸ்' செய்திருக்கோம்ன்னு, இப்ப உங்க ரெண்டு பேருக்கும் புரியுதா? ஸ்காட்லாண்ட் போலீசே வந்து இந்த விபத்தைப் பத்தி விசாரிச்சாலும், இது கொலை தான்னு கண்டுபிடிக்க முடியாது.''
''இக்பால்... நீ என்னதான் தைரியமா பேசினாலும், என்னோட அடி வயித்துல ஒரு பயம், கோடு போட்டுக்கிட்டே இருக்கு,'' என்றான், தருண்.
''என்ன பயம்?''
''இன்ஸ்பெக்டர் ஒரு பழைய குற்றவாளியைத் தேடிக்கிட்டு, உக்கடம் ஏரியாவுக்கு வந்தபோது, இந்த சம்பவம் நடந்திருக்கு. அந்தப் பழைய குற்றவாளி யாருன்னு போலீஸ் தேட ஆரம்பிச்சா, கொஞ்சம் பிரச்னை தான்.''
''பிரச்னை எப்படி வரும்ன்னு சொல்றே?''
''இன்ஸ்பெக்டர் தேடிட்டு வந்த பழைய குற்றவாளி, உக்கடம் துரைதான்னு போலீஸ் கண்டுபிடிச்சுட்டா, அவனை சும்மா விடமாட்டாங்க... 'லாக் - அப்'புக்கு கூட்டிட்டு போய் விசாரிக்கும்போது, அவன், நம் வீட்டுக்கு வந்து, உன்கிட்ட விசாரிச்சுட்டு போனதையும் சொல்ல வாய்ப்பிருக்கு.''
''உக்கடம் துரையைப் பத்தி நாம கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவன் ஒரு கிரிமினல். போலீசை எப்படி, 'ஹேண்டில்' பண்றதுன்னு, அவனுக்கு நல்லாவே தெரியும். நாம இப்ப உடனடியாய் பண்ண வேண்டிய வேலை என்ன தெரியுமா?
''மயக்க நிலையில் இருக்கிற முகிலாவை, இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ளே இந்த வீட்டிலிருந்து, பொள்ளாச்சியில் இருக்கிற என்னோட, 'டாப் ஸ்லிப் கெஸ்ட் ஹவுசு'க்கு கொண்டு போயிடணும். அவளை, இங்கே ரொம்ப நேரத்துக்கு வெச்சிட்டிருக்க முடியாது. அதுதான் உண்மையிலேயே ரிஸ்க்,'' என்றான், இக்பால்.
தலையசைத்தான், ஜோஷ்.
''நீ சொல்றது சரிதான். எப்ப கிளம்பலாம்?'' என்றான், தருண்.
''டிபன் சாப்பிட்டுட்டு உடனடியாய் கிளம்ப வேண்டியது தான். இனிமேல் வரப்போகிற ஒவ்வொரு நிமிஷத்தையும் நாம ஜாக்கிரதையாய் கையாளணும். இல்லேன்னா, போலீசோட சந்தேக வளையத்துக்குள்ளே மாட்டிக்க வேண்டி வரலாம்,'' என, இக்பால் பேசிக் கொண்டிருக்கும் போதே, தருணின் மொபைல்போன் சிணுங்கியது. எடுத்து அழைப்பது யாரென்று பார்த்து, லேசாய் முகம் மாறினான்.
''போன்ல யாரு?'' கேட்டான், ஜோஷ்.
''புவனேஷ், 'அட்மிட்' ஆகியிருக்கிற, 'குட் ஹோப் ஹாஸ்பிடலில்' இருந்து போன் பண்றாங்க.''
''ஸ்பீக்கரை ஆன் பண்ணி பேசு.''
'ஸ்பீக்கர் ஆன்' செய்தான், தருண்.
மறுமுனையில் ஒரு பெண் குரல் ஒலித்தது.
''மிஸ்டர் தருண் தானே பேசறது...''
''ஆமா.''
''நான் ஸ்டாப் நர்ஸ் ஞானம் பேசறேன்.''
''என்ன விஷயம் சிஸ்டர்?''
''உங்க நண்பர் புவனேஷை பார்க்க, நீங்க ஹாஸ்பிடலுக்கு வருவீங்களா?''
''வருவேன்.''
''எத்தனை மணிக்கு?''
''மதியத்துக்கு மேல்.''
''காலையில, 10:00 மணிக்குள்ளே வந்தா பரவாயில்லை. புவனேஷ் உங்ககிட்ட ஏதோ பேசணுமாம்.''
''என்ன விஷயம், புவனேஷோட உடல் நிலையில் ஏதாவது பிரச்னையா?''
''நோ... நோ... ஹி ஈஸ் ஆல் ரைட். அநேகமாய் இன்னிக்கு சாயந்தரம், 'ட்ரிப்சை' நிறுத்திட்டு, அவரை, சாதாரண வார்டுக்கு மாத்திடலாம்ன்னு டாக்டர் சொன்னார்.''
''சிஸ்டர்... என்னால காலை நேரத்துல ஹாஸ்பிடலுக்கு வர முடியுமான்னு தெரியலை. மதியம் 2:00 மணிக்கு மேல வர்றேன். பை த பை, ஹாஸ்பிடலுக்கு புவனேஷ் சிகிச்சை சம்பந்தமாய், பணம் ஏதாவது கட்ட வேண்டியிருக்கா?''
''அது ஒரு பிரச்னையே இல்லை. ஏன்னா புவனேஷோட அண்ணன், பணத்தை கட்டிட்டார். நீங்க மட்டும் கொஞ்சம் சிரமம் பார்க்காம, இன்னிக்கு காலை நேரத்திலேயே ஹாஸ்பிடலுக்கு வந்து புவனேஷைப் பார்த்துப் பேசிட்டா பரவாயில்லை. நீங்க வருவீங்கன்னு அவர் ஆவலா காத்திருக்கார்.''
''ஓ.கே., சிஸ்டர்... நான், 11:00 மணிக்கு வர்றேன்,'' என்று சொல்லி மொபைல்போனின் இணைப்பைத் துண்டித்த தருண், ஒரு பெருமூச்சோடு இக்பாலையும், ஜோஷையும் பார்த்தான்.
''புவனேஷ் எதுக்காக என்னை வரச் சொல்றான் தெரியுமா?''
''தெரியும். முகிலா காணாம போனதுக்கு, நானும், இக்பாலும் தான் காரணம்ன்னு அவன், அனுமானிச்சு உன்கிட்ட சொல்லி இருக்கான். மேற்கொண்டு அதைப் பத்திப் பேசத் தான், உன்னை எதிர்பார்த்து காத்திட்டிருக்கான்னு நினைக்கிறேன்,'' என, இறுகிய முகத்தோடு கூறினான், ஜோஷ்.
இடது கை விரல்களால் நெற்றியைத் தேய்த்தபடி அலட்சியமாய், ''நினைக்கிறதென்ன, அதே தான்,'' என்றான், இக்பால்.
எரிச்சலோடு அவர்களைப் பார்த்தான், தருண்.
''முகிலாவை, 'காஸ்மெடிக்ஸ்' விளம்பரப் படத்துல நடிக்க வைக்க, நீங்க ரெண்டு பேரும் அவளைப் போய்ப் பார்த்தது, கட்டாயப்படுத்தினது, எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பவாவது உங்களுக்குப் புரியுதா?''
''நல்லாவே புரியுது தருண்... கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டோம். நீதான் உன் நண்பன் புவனேஷ்கிட்ட ஏதாவது ஒரு சரியான காரணத்தைச் சொல்லி, எங்க மேல இருக்கிற அந்த அபிப்பிராயத்தை மாத்தணும்.''
''அவன் நம்புவானா?''
''நம்பற மாதிரி சொல்லு... உன் மேல புவனேஷுக்கு அளவு கடந்த நம்பிக்கை. நீ எதைச் சொன்னாலும் அவன் நம்புவான்.''
''சரி... நான் குளிச்சு, சாப்பிடுட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பறேன். நீங்க ரெண்டு பேரும் முகிலாவுக்கு மயக்கம் தெளியறதுக்கு முந்தி அவளை, 'டாப் ஸ்லிப் கெஸ்ட் ஹவுசு'க்கு கொண்டு போயிடுங்க. நான் சாயந்தரம், 6:00 மணிக்கு மேல அங்கே வந்து உங்களோடு சேர்ந்துக்கிறேன்.''
''ஏன் அவ்வளவு லேட்... 6:00 மணி ஆயிடுமா?''
''ஒரு வேஷத்தைப் போட்டுக்கிட்டா, ஒழுங்கா நடிக்கணும். புவனேஷை இன்னிக்கு மதியத்துக்கு மேல் ஐ.சி.யூ.,வில் இருந்து நார்மல் வார்டுக்கு மாத்தப் போறாங்க. அதுவரைக்கும் நான் அந்த, 'ஸ்பாட்'ல இருந்தாத்தான் போலீசுக்கும், புவனேஷோட அண்ணன், அண்ணிக்கும், முகிலாவோட அப்பாவுக்கும், என் மேல் சந்தேகம் வராது.''
''அதுக்காக ரொம்பவும், 'லேட்' பண்ணிடாதே, தருண். இன்னிக்கு, 'பர்ஸ்ட் டே' கொண்டாட்டம். அதைக் கொண்டாட வேண்டாமா?''
''எப்படியும், 6:00 மணிக்குள்ள வந்துடுவேன். முகிலா நம்மோடு இருக்கிற இந்த நாளை விமரிசையாய் கொண்டாடிவோம்,'' சொல்லிவிட்டு கண்ணைச் சிமிட்டியபடி சிரித்தான், தருண்.

போலீஸ் கமிஷனர் அலுவலகம். காலை, 10:30 மணி.
கமிஷனர் பொய்யாமொழிக்கு முன், நாற்காலியின் நுனியில் விறைப்பாய் உட்கார்ந்தபடி பேசிக் கொண்டிருந்தார், அசிஸ்டென்ட் கமிஷனர் செழியன்.
''சார்... இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், நேத்து ராத்திரி நடந்த விபத்துல, இறந்து போனது சம்பந்தமான விசாரணையை முடிச்சுட்டேன். இந்த விசாரணையில், இன்ஸ்பெக்டர் எந்த குற்றவாளியை தேடிக்கிட்டு அந்த ராத்திரி நேரத்துல உக்கடம் ஏரியாவுக்கு போனார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கலை.
''ஸ்டேஷன்ல இருக்கிற கான்ஸ்டபிள்களுக்கும் தெரியலை. வீட்ல அவரோட மனைவிகிட்டேயும் கேட்டுப் பார்த்துட்டேன். அவங்களும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க.''
கமிஷனர் சில விநாடிகள் நிசப்தம் காத்துவிட்டு, நிதானமான குரலில், ''முத்துக்குமரனோட, 'சர்வீஸ் குட் புக் ரிப்போர்ட்ஸ்' படிச்சுப் பார்த்தீங்களா?''
''பார்த்தேன் சார்.''
''ரிப்போர்ட், என்ன சொல்லுது?''
''அவ்வளவு திருப்தியா இல்ல சார். ஆட்சியில் யார் இருக்காங்களோ அவங்களுக்கு விசுவாசமாய் இருந்துகிட்டு நிறைய லஞ்சம் வாங்கியிருக்கார். குடிப்பழக்கம் இருந்திருக்கு. சென்னையில் ஒரு சின்ன வீடு, தவிர போதாதகுறைக்கு...''
செழியன் பேசிக் கொண்டிருக்கும் போதே கமிஷனரின் மேஜை மேல் இருந்த, 'இன்டர்காம்' முணுமுணுத்தது. ரிசீவரை எடுத்தார். மறுமுனையில் கமிஷனரின் உதவியாளர், ''சார்... ஜி.ஹெச்., சீப் டாக்டர் சுகன்யா, முக்கியமான விஷயமாய் பார்த்துப் பேச வந்துருக்காங்க... அனுப்பி வைக்கட்டுமா?'' என்றார்.
''உடனே அனுப்புங்க.''
கமிஷனர் காத்திருக்க, மொட மொடப்பான கைத்தறி சேலை அணிந்து, ஒரு வெளிச்சக்கீற்று மாதிரி அறைக்குள் நுழைந்தாள், டாக்டர் சுகன்யா. 55 வயது இருக்கலாம். பெப்பர் சால்ட் கொண்டையும், தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியும், டாக்டரின் சதைப்பிடிப்பான முகத்திற்கு கூடுதல் அழகு சேர்த்தது.
''குட்மார்னிங் சார்.''
''குட்மார்னிங் மேடம்... இப்படியொரு, 'சர்ப்ரைஸ் விசிட்'டை, நான் எதிர்பார்க்கலை. உட்காருங்க மேடம்!''
நன்றி சொல்லியபடி, செழியனுக்கு அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள், சுகன்யா.
''சொல்லுங்க மேடம்.''
''ஒரு முக்கியமான விஷயத்தை உங்க கூட, 'ஷேர்' பண்ணிக்கணும்,'' சுகன்யா சொல்லிக் கொண்டே, செழியனை தயக்கமாய் பார்க்க, கமிஷனரின் உதடுகளில் புன்முறுவல் பரவியது.
''நீங்க சொல்லப் போறது, உங்க பர்சனல் மேட்டரா?''
''இல்லை... அது உங்க டிபார்ட்மென்ட் சம்பந்தப்பட்ட விஷயம்.''
''அப்படீன்னா நீங்க தாராளமாய் பேசலாம். இவர், மிஸ்டர் செழியன்; ஏ.சி.பி.,''
''தெரியும்... ரெண்டு மூணு விழாவில் பார்த்திருக்கேன்.''
''அப்புறமென்ன... என்ன விஷயம் சொல்லுங்க?''
சில விநாடிகள் தயக்கமாய் இருந்துவிட்டு மெல்லப் பேச்சை ஆரம்பித்தாள், சுகன்யா.
''இன்ஸ்பெக்டர் முத்துக்குமரனின், 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்' காப்பியைப் படிச்சுப் பார்த்தீங்களா சார்?''
''ம், படிச்சோம். அதைப் பத்தி தான் பேசிட்டிருந்தோம்.''
''அவரோட மரணத்தைப்பத்தி என்ன நினைக்கறீங்க?''
''நினைக்க என்ன இருக்கு மேடம்... குடிச்சுட்டு பைக்கை ஓட்டினா இப்படிப்பட்ட மரணங்களை தவிர்க்க முடியாது.''
''சாரி சார்... முத்துக்குமரன் விபத்தில் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கார்.''
''மேடம், என்ன சொல்றீங்க?'' அதிர்ச்சியுடன் கேட்டார்.
''ஆமாம், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.''

தொடரும்
ராஜேஷ்குமார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X