நாடு பிடிக்கும் ஆசையில், போர் வெறி பிடித்து, வலிய சண்டைக்குப் போகும், கஜினி முகமதுவின் பெயரைக் கேட்டாலே, மற்ற நாட்டு அரசர்கள் பயந்து, அலறினர்.
அந்தக் காலகட்டத்தில், பாரசீகத்தின் ஒரு பகுதியாக, ஈராக் நாடு இருந்தது. அதன் மன்னர், திடீரென காலமாகி விட, உடனே, அவரது மனைவி, அந்நாட்டின் அரசியாக அரியணையில் அமர்ந்தாள்.
அதை அறிந்த கஜினி முகமது, 'கப்பம் கட்டுகிறாயா அல்லது படையெடுத்து வரட்டுமா...' என்று, கடிதம் எழுதி அனுப்பினார்.
அதைப் படித்த அரசி, பயப்படவில்லை. அவளும் உடனே, கஜினி முகமதுக்கு கடிதம் எழுதினாள்.
'பேரரசரான தாங்கள், ஒரு பெண்ணின் மீது படையெடுத்து வரும் அளவுக்குத் தாழ்ந்து போய் விடவில்லை என எண்ணுகிறேன். போரில் நான் வென்றால் தங்களுக்கு அவமானம். நான் தோற்றால், ஒரு பெண்ணை வெற்றி கொண்டதில் என்ன வீரம் வெளிப்பட்டிருக்கிறது என்று எண்ணும்போது, அதுவும் தங்களுக்கு அவமானம் தான். ஆகவே, என் விஷயத்தில், தாங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள் என, நினைக்கிறேன்...' என்று எழுதியிருந்தாள்.
அதைப் படித்து, அதிலிருந்த உண்மையை உணர்ந்த கஜினி முகமது, ஈராக்கை அந்தப் பெண் ஆட்சி செய்யும் வரை, அவளுடன் போர் செய்வதில்லை என்று தீர்மானம் செய்து கொண்டார்.
மகாபாரதத்தில் ஒரு கட்டம்.
உணவருந்தி, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார், கர்ணன்.
அப்போது, ஓர் ஏழை அந்தணர், அவர் பக்கம் வந்து நின்று தர்மம் கேட்டார்.
அவருக்கு தர்மமாக கொடுக்க, தன்னிடம் எதுவும் இல்லையே என்று வருந்திய கர்ணனின் கண்களில், தான் இடப்பக்கம் வைத்திருந்த தங்கக் கோப்பை பட்டது. உடனே, இடக்கையால் அதை எடுத்து, அந்த அந்தணருக்குக் கொடுத்தார்.
தங்கக் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அந்தணர், கர்ணனை வணங்கிச் சென்றார்.
அப்போது, கர்ணனின் அருகே இருந்த பணியாள், 'அரசே... தர்மத்தை இடக்கையால் செய்வது ஆகாது அல்லவா...' என்று, கேட்டான்.
அதற்குக் கர்ணன், 'தர்மம் என்றால் சிறிது கூட யோசிக்காமல் உடனே கொடுத்து விட வேண்டும். நான் இருந்த சூழ்நிலையில், உடனே வலக்கையால் தங்கக் கோப்பையை எடுக்க முடியவில்லை. இடக்கையால் எடுத்து வலக்கைக்கு மாற்றுவதற்குள் ஒருவேளை, என் மனது மாறினாலும் மாறிவிடும். அதனால் தான், அதை இடது கையால் உடனே கொடுத்து விட்டேன்...' என்றார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்திலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம், 1967ல், பொன்விழா கொண்டாடியது. அதில் கலந்துகொண்ட சர்.சி.வி.ராமன், பல்கலைக் கழக மாணவர் கூட்டத்தில், வைரங்கள் பற்றி உரை நிகழ்த்தினார்.
உரை முடிவுற்றதும், ஒரு மாணவன் எழுந்து, 'ஐயா... வைரங்களின் தன்மை, குணம், ஒளிச்சிதறல் ஆகியவை பற்றித் தெளிவாக கூறினீர்கள். ஆனால், வைரம் தயாரிப்பது எப்படி என்று தாங்கள் கூறவில்லையே...' என்று, கேட்டான்.
பேராசை கொண்ட அந்த மாணவனை பார்த்து, 'அது ரொம்ப சுலபம். ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள். அதை பூமியில், 1,000 அடி ஆழத்தில் புதைத்து வைத்துவிடு. பின்னர், 1,000 ஆண்டுகள் கழித்து பூமியைத் தோண்டிப் பார். வைரம் கிடைக்கும்...' என்றார்.
அதைக் கேட்டு, சபையே சிரித்தது.
நடுத்தெரு நாராயணன்