அன்புள்ள அம்மா —
பெற்றோருக்கு நான் ஒரே பெண். வயது: 26. அப்பா, வங்கி மேனேஜர். அம்மா, இல்லத்தரசி. சிறு வயது முதலே மருத்துவராக ஆக விருப்பம். அதற்கேற்ப நன்றாக படித்தேன். பள்ளி இறுதி வகுப்பில், முதல் மதிப்பெண் பெற்று, மருத்துவ கல்லுாரியில் சேர்ந்தேன்.
எம்.பி.பி.எஸ்., முடித்து, 'ஹவுஸ் சர்ஜனும்' முடித்தேன். உடனே, ஏதாவது ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்ந்து விட நினைத்தேன். ஆனால், அது நிறைவேறவில்லை.
வெறும், எம்.பி.பி.எஸ்., படித்தால் மட்டும் போதாது, ஏதாவது ஒரு துறையில் சிறப்பு படிப்பு படித்தால் தான் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்ற யதார்த்தம் புரிய, நொறுங்கி போனேன்.
சரி... மேற்படிப்பு படிக்கலாம். அதே சமயம், பொது மருத்துவராக கொஞ்சம் அனுபவம் கிடைக்கட்டுமே என்று, தனியார் மருத்துவமனையில் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். அங்கு நடக்கும் ஊழலையும், பகல் கொள்ளைகளையும் சகித்துக் கொள்ள முடியாமல், வேலையிலிருந்து நின்று விட்டேன்.
உயர் படிப்புக்காக, வெளிநாடு செல்லவும் நான் தயார். ஆனால், 'உன்னை பிரிந்து எங்களால் இருக்க முடியாது. இங்கேயே இருந்து விடு. சொந்தமாக, 'கிளினிக்' வைத்து தருகிறோம்...' என்றனர், பெற்றோர்.
வீட்டின் முன் பக்கத்திலேயே சிறிதாக, 'கிளினிக்' வைத்துக் கொடுத்தார், அப்பா.
இரண்டு, மூன்று பேர் வந்தாலே பெரிய விஷயம். 'சின்ன பொண்ணா இருக்கா... அனுபவமில்லாமல், ஏதாவது எக்குதப்பா மருந்து, மாத்திரை கொடுத்துட்டா என்ன செய்வது?' என்று கூறி, வந்த வழியே சென்று விட்டனர்.
என் கனவு, தகர்ந்து போனதில், மனம் நொந்தேன். படித்து முடித்து நான்கு ஆண்டுகள் முடிந்தன. மேற்படிப்பும் அரைகுறையாகி உள்ளது. வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறேன். சுயபச்சாதாபமே மிஞ்சுகிறது.
என் அம்மாவோ, 'கல்யாணம் செஞ்சுட்டு, வாழ்க்கையில், 'செட்டில்' ஆக பாரு...' என்கிறார்.
நான் படித்தது வீண் தானா... என் லட்சியத்தை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் மேற்கொண்டு செய்யக் கூடிய விஷயங்களை பார்ப்போம்.
* 'நீட்' தேர்வு எழுதி எம்.டி., - எம்.எஸ்., படிக்கலாம்
* முதுகலை பட்டபடிப்புகளுக்கு சமமான பட்டய படிப்புகளை படிக்கலாம்
* பி.எல்.ஏ.பி., அல்லது யு.எஸ்.எம்.எல்.ஈ., தேர்வுகள் எழுதி, வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்கலாம்
* மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நுழைவுத்தேர்வு எழுதி, மத்திய - மாநில அரசு பணி பெறலாம்
* ராணுவத்தில் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனைகளை கடந்து, நல்ல சம்பளத்துடன் கூடிய பணி பெறலாம். ராணுவ மருத்துவமனைகளில், 'இன்பன்டரி யுனிட்'களில் பணி செய்யலாம்
* 'அப்போலோ, போர்டிஸ்' போன்ற தனியார் மருத்துவமனைகளில் சேரலாம்
* மருத்துவ மேல் படிப்புக்கு அதிகம் செலவாகும் என பயந்தால், மருத்துவ நிர்வாகம் சார்ந்த மேலாண்மை படிப்பு படித்து, மருந்து நிறுவனம் மற்றும் மருத்துவ காப்பீடு நிறுவனங்களில் வேலை பெறலாம். உயரதிகாரி பணி கிடைக்கும்
* ஆராய்ச்சி சார்ந்த மேல்படிப்பு படிக்கலாம்
* உனக்கு வயது, 26 ஆகிறது. 'நீட்' தேர்வு எழுதிய பின், முதுகலை மருத்துவம் படித்து முடிக்க, 30 வயதாகி விடும். அதன் பின் நீ, வேலைக்கு போய், 'செட்டில்' ஆக, மேலும் இரண்டு ஆண்டுகள் கரைந்து விடும்.
32 வயதுக்கு பின்தான் உனக்கு திருமணம் நடக்க வாய்ப்பிருக்கிறது.
தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் ஊழல் மற்றும் பகல் கொள்ளைகளில் நீ நேரடியாக பங்கேற்காமல், உன்னளவில் நேர்மையாக பணி செய்யலாம். கொள்கையில் சமரசம் செய்யாமல் சற்றே வளைந்து கொடுக்கலாம்
* முதுகலை மருத்துவம் படித்த வரன் பார்த்து, திருமணம் செய்து கொள். அவருக்கு துணையாக, 'கிளினிக்'கில் நீ பணிபுரியலாம். கணவருடன் இணைந்து, அவரது, 'கிளினிக்'கில் மூன்று வருடம் பணிபுரி. நல்ல அனுபவம் கிடைக்கும்
* நகரில் உனக்கு, 'கிளினிக்' வைக்க தோதான இடத்தை தேர்ந்தெடு. ஜன நடமாட்டம் அதிகம் உள்ள, வாகனங்கள் நிறுத்த தோதான இடம் பார். அரச மரத்தை சுற்றி வந்தபின் அடிவயிற்றை தொட்டு பார்த்த கதையாய், 'கிளினிக்' வைத்தவுடன் நோயாளிகள் குவிந்து விடுவர் என எண்ண வேண்டாம்.
மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து, 50 சதவீதம் என்றால், அவரின் கனிவான அணுகுமுறை, 50 சதவீதம் நோயை குணபடுத்தும் காரணிகள். ஒரு நோயாளியை நீ சிறப்பாய் கவனித்து அனுப்பினாய் என்றால், அவர் போய் உன்னை பற்றி நல்லவிதமாய் பேசி, 10 நோயாளிகளை அழைத்து வருவார். மருத்துவ சேவை வெற்றி பெற, வாய்வழி விளம்பரம் மிக முக்கியம்.
தினம் நீ, உன் மருத்துவ அறிவை மேம்படுத்திக் கொண்டே இரு. தனியார், 'கிளினிக்' வெற்றி பெற குறைந்தபட்சம், 5 - 10 ஆண்டுகள் ஆகும். பொதுவாக ஒரு டாக்டர், வாழ்க்கையில் செட்டிலாக, 40 வயதாகும்
* நோயாளிகள், சிறப்பு மருத்துவரை தேடி ஓடும் காலமிது. மேற்படிப்பு படிக்காத குறையை, குறைந்த கட்டணம் மற்றும் நிறைவான சேவை மூலம் நிவர்த்தி செய்யலாம்.
நாளை நமதே மகளே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.