காஷ்மீர் கடல்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2022
08:00

கைபேசி எடுத்து, 10 இலக்க எண்ணை முயற்சித்தேன்; எதிர்முனை உயிர்த்தது. காஷ்மீரத்து பெண் ஹனியா, அழகிய முகமன் கூறினாள்.
தம்பிமலை பல்கலைக்கழகத்தில் நான் பணிபுரிந்த போது, முகநுால் நட்பானவள். ஸ்ரீநகரில் வசித்தவள், கர்நாடக மாப்பிள்ளையை திருமணம் செய்து, பெங்களூருவில் செட்டில் ஆனாள். அவளின் கல்யாணத்துக்கு எங்களை அழைத்திருந்தாள். எங்களால் போக முடியவில்லை.
பதில் அழகிய முகமன் கூறினேன்.

எங்கள் உரையாடல் ஆங்கிலத்தில் தொடர்ந்தது.
''எப்படியம்மா இருக்கிறாய்?''
''நன்றாக இருக்கிறேன் அப்பா.''
''உன் கணவரும், குழந்தையும் எப்படி இருக்கின்றனர்?''
''சிறப்பாக இருக்கின்றனர்.''
''பாகிஸ்தான் மாப்பிள்ளையை தான் கட்டிக் கொள்வேன் என சொல்வாயே... இப்ப எங்களின் இந்திய மாப்பிள்ளை இனிக்கிறதா?''
''என்னிடம் வம்பு பேச ஆரம்பித்து விட்டீர்களா? நீங்க கூடதான் உங்க மகனுக்கு ஒரு காஷ்மீர் பெண்ணை திருமணம் செய்து வைக்க விரும்புனீர்கள்... நடந்ததா? சரி... என்னப்பா விஷயம்.''
''நானும், அம்மாவும் காஷ்மீர், 'டூர்' போக விரும்புகிறோம். ஸ்ரீநகரில் இருக்கும் உன் வீட்டில் தங்கி, 10 நாள் ஊர் சுற்றி பார்க்க அனுமதிப்பாயா?''
''விருந்தோம்பல், காஷ்மீரிகளின் பிறவிக்குணம். நீங்கள் உங்கள் பயணத் தேதியை சொல்லுங்கள். ஸ்ரீநகரில் எங்கு இறங்கினாலும் உங்களை, 'பிக் - அப்' செய்து கொள்வார், என் தந்தை. அவர் பெயர் ஆரிஸ். பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.
''எங்கள் வீட்டு முகவரி, தந்தையின் கைபேசி எண் விபரங்களை, 'வாட்ஸ் ஆப்'ல் அனுப்புகிறேன். உங்க பயண நிரலை எனக்கு, 'வாட்ஸ் ஆப்'ல் அனுப்புங்கள். ரயிலில் போகிறீர்களா, விமானத்தில் போகிறீர்களா?''
''ரயிலில்.''
''உங்களின் சுற்றுலா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.''
''நன்றி அம்மா.''

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்.
அந்தமான் எக்ஸ்பிரசில், நானும், வகிதாவும் ஏறினோம். இருவருக்கும் எதிர் எதிர், 'லோயர் பெர்த்'கள். பகல் பொழுதுகளில் எடுத்துப் போயிருந்த நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். என் மனைவியோ சக பயணியருடன் கதைத்துக் கொண்டிருந்தாள்.
ஐம்பத்தியெட்டு மணி நேர பயணத்துக்கு பின், ஜம்முவில் இறங்கினோம். ஸ்ரீநகருக்கு போக பேருந்து வசதிகள் கிடையாது. ஜீப்கள் காத்திருந்தன. ஒரு ஜீப்பில் ஏற்கனவே நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர். நாங்களும் போய் அமர்ந்தோம். கைபேசியில் ஆரிஸ் அழைத்தார். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
உடைந்த ஆங்கிலத்தில் வினவினார்.
''நீங்கள் அமர்ந்திருக்கும் ஜீப்பின் பதிவெண்ணை கூறுங்கள்.'' கூறினேன்.
''ஜீப் ஓட்டுனரிடம் போனை கொடுங்கள்.''
கொடுத்தேன். எங்களை பாதுகாப்பாக அழைத்து வர பணித்திருப்பார் போலும்.
திரும்ப பேசினேன்.
''இப்போது மணி மதியம், 1:00 ஆகிறது. ஆறு மணி நேர பயணம். இரவு, 7:00 மணிக்கு ஸ்ரீநகருக்கு வந்து விடுவீர்கள். காத்திருந்து, உங்களை காரில் கூட்டி செல்கிறேன்.''
''சரி.''
ஜீப் கிளம்பியது. வழி எங்கும் ராணுவத்தினர் நின்றிருந்தனர். வழியில் ஜீப்பை நிறுத்தி, எங்களை விசாரித்தனர். எங்களது ஆதார் அட்டைகளையும், தடுப்பூசி சான்றிதழ்களையும் வாங்கி பார்த்தனர்.
ஸ்ரீநகரில் ராணுவத்தினர் கொட்டி கிடந்தனர்.

எங்களை வரவேற்றார், ஆரிஸ்.
170 செ.மீ., உயரத்தில் ரோஜா நிறமாய் இருந்தார். அவரது காரில் ஏறினோம். ஸ்ரீநகரிலிருந்து, 40 கி.மீ., துாரத்தில் இருக்கும் அவரது கிராமத்துக்கு பறந்தோம். அழகிய மர வீடு. ஆரிசின் மனைவியும், ஹனியாவின் இரு இளைய சகோதரிகளான நயனிதாவும், இக் ஷாவும் எங்களை வரவேற்றனர்.
சுடுநீரில் குளித்து வந்த எங்களுக்கு, இரவு உணவு பரிமாறினார், ஆரிசின் மனைவி. சாப்பிட்டு முடிக்கும் வரை எங்களுக்கு எதிரே முழங்காலிட்டு அமர்ந்து, உபசரித்தார்.
கனத்த கம்பிளிகளுடன் கூடிய கணகணப்பான படுக்கையில் படுத்தோம்.
ஆரிஸ் எங்களிடம் தன் காரை காட்டி, ''அடுத்த, 10 நாட்களுக்கு என் கார் உங்களுடையது. காரை ஓட்ட ஓட்டுனரை அமர்த்தியுள்ளேன். இவர் பெயர் ரிஸ்வான். உங்களுடன் வழிகாட்டி போல, என் கடைக்குட்டி மகள் நயனிதா வருவாள். சுற்றி பார்த்து மகிழுங்கள்.''
ரிஸ்வானுடன் பேசிக் கொண்டே வந்தோம்.
''ரிஸ்வான்... நீங்கள் படித்திருக்கிறீர்களா?''
''ஆம்... நான் ஒரு பட்டதாரி.''
''காஷ்மீரில் நான் பார்த்த வரைக்கும் ஒருவருக்கும் தொப்பை இல்லையே.''
''ஆம்... காஷ்மீரிகள் கடுமையான உழைப்பாளிகள்.''
''காஷ்மீரிகளின் மூதாதையர்கள் யார்?''
''நாங்கள், பாரசீகர்களின் வழி தோன்றல்கள் என நம்புகிறோம். ஆனால், சரித்திரம் எங்களை இஸ்ரேலின் பழங்குடி மக்கள் என கூறுகிறது.''
தால் ஏரியை பார்த்ததும், ரா.கி.ரங்கராஜனின், 'படகு வீடு' கதை ஞாபகம் வந்தது. படகில் ஏறி, ஏரியை வலம் வந்தோம்.
அதற்கடுத்த நாட்களில்...
இந்திராகாந்தி நினைவு துலிப் தோட்டம், ஷாலிமார் பாக் மொஹல் தோட்டம், பாரி மஹால், பேதாப் சமவெளி, டச்சிகாம் தேசிய பூங்கா, குல்மார்க்கில் இருக்கும் அபர்வாத் சிகரம், சின்தன் டாப், பாகு கோட்டை, பிர் பான்சல் கணவாய்.
லால் சவுக் மார்க்கெட், ஸ்ரீபிரதாப்சிங் அருங்காட்சியகம், வெரிநாக் ஊற்று, துாத்பத்ரி சமவெளி, சாஸ்மா சாகி ஊற்று, ஜாமியா மஜித் மற்றும் ஹஜ்ரத்பால் தர்காவை சுற்றி பார்த்தோம்.
ஒருநாள் சுற்றுலாவாக லடாக்கிலுள்ள, ஜோஜி லா கணவாய்க்கு போய் வந்தோம்.
எங்களை அசைவ சமையலால் திணறடித்து விட்டார், ஆரிஸ்.
அரிசி சாதத்துடன், யாக்னி ஆட்டுக்கறி. மட்டன் ரோகன் ஜோஷ் மசாலா. வீட்டு பாலாடை கட்டிகளால் செய்யப்பட்ட பன்னீர் சாமன். கோஷ்தபா எனப்படும் தயிரில் ஊறிய மட்டன் உருண்டை. உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட காஷ்மீரி ராஜ்மா. மீனில் செய்யப்பட்ட தம் ஓல. மோதோர் புல. ஷீர்மால் எனப்படும் மொறுமொறு பிரட் மற்றும் நாதிர் மன்ஜி எனப்படும் பொரித்த தாமரைத்தண்டு.
குங்குமப்பூ தேநீரும், காஷ்மீரி கிரீன் டீயும் வாரி வாரி வழங்கினர்.

நாங்கள் ஊருக்கு திரும்ப வேண்டிய நாள் வந்தது. ஒரு பெட்டி நிறைய ஆப்பிள் பழங்களும், ஒரு கிலோ காஷ்மீரி மிளகாய் துாளும் வழங்கினாள், ஆரிசின் மனைவி.
''எங்கள் விருந்தோம்பலில் ஏதேனும் குறைகள் இருந்தால் மன்னியுங்கள்,'' என்றார், ஆரிஸ்.
''நாங்கள் பேசியதில் ஏதேனும் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால், எங்களை மன்னியுங்கள். காஷ்மீர், இந்திய தாயின் கழுத்து நெக்லஸ். உங்களை யாருக்காகவும் எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்.''
''மகிழ்ச்சி.''
''நீங்கள் ஒருமுறை சிதம்பரம் வாருங்கள்.''
''அங்கு என்ன இருக்கிறது?''
''கடல் இருக்கிறது.''
இக் ஷாவும், நயனிதாவும் துள்ளி குதித்தனர்.
''காஷ்மீரில் பனி சூழ் சிகரங்கள் உள்ளன. ஆப்பிள் மரங்கள் உள்ளன. கணவாய்கள் உள்ளன. ஆனால், கடல் இல்லை. வாழ்நாளில் ஒரு தடவையாவது நாங்கள் கடலை பார்க்க விரும்புகிறோம்,'' என்றார், ஆரிஸ்.
''ஒரு பிரச்னையும் இல்லை. அடுத்த மாதமே சிதம்பரத்துக்கு கிளம்பி வாருங்கள். நாகூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி, பரங்கிப்பேட்டை மற்றும் பிச்சாவரம் என சுற்றி, கடல்களை ஆசை தீர பார்த்து விடலாம். கடல் மீன் சமையலை திகட்டதிகட்ட சுவைத்து விடலாம்!''
''இன்ஷா அல்லாஹ்... பெங்களூரில் இருக்கும் மகளை பார்க்க வருவோம். அப்போது அவளுடன் சேர்ந்து சிதம்பரம் வருகிறோம்.''
ஆரிசும், நானும் கட்டியணைத்து, முஸாபஹா கொடுத்துக் கொண்டோம்.

மூன்று மாதம் கடந்தது...
காஷ்மீர் ஆரிஸ், தன் மனைவி மகள்கள் மற்றும் மருமகனுடன் சிதம்பரம் வந்தார். சாமியார்பேட்டை கடற்கரையில் இரு கார்களில் போய் இறங்கினோம்.
ஹனியா, இக் ஷா, நயனிதா மூவரும் கடலை பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்தனர். கடற்கரை நண்டுகளை துரத்தி விளையாடினர். சிப்பிகளை சேகரித்தனர்.
கடலலைகள் சடுகுடு ஆடும் ஈரத்தரையில் கம்பளத்தை விரித்து இரு ரக்காயத்துகள் தொழுதார், ஆரிஸ். கடல்நீரை ஒரு சிறுபாட்டிலில் சேகரித்தாள், இக் ஷா.
கடலுடன் சேர்ந்து நின்று ஏராளமான, சுயமிகள் எடுத்தனர்.
இருகைகளையும் வானத்துக்கு உயர்த்தி, ''ஓ இந்தியாவே... நீ ஒரு பேரழகி. உன்னில் பனி படர்ந்த சிகரங்களும், ஆர்ப்பரிக்கும் கடல்களும் உள்ளன. நான் ஒரு காஷ்மீரி இந்தியன் என்பதில் பெருமைபடுகிறேன். எல்லாவற்றுக்கும் இறைவன் போதுமானவன். ஒரு அமைதியான இந்தியாவை வருங்கால சந்ததியினருக்கு பரிசளித்து விட்டு போவோமாக,'' என்றார், ஆரிஸ்.
''ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்,'' என்றேன், நான்.

ஆர்னிகா நாசர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-மே-202213:11:35 IST Report Abuse
Ponni Rangan இப்போது எல்லாம் வாரம் ஒரு முறை மாற்று மதம் சார்ந்த பாத்திரங்கள், பழக்க வழக்கங்கள் மட்டும் உள்ள கதைகள் வருகின்றன.. காரணம் தான் புரியவில்லை . !!
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
29-மே-202208:47:29 IST Report Abuse
NicoleThomson அருமையான கதை , வெளிநாட்டு மொழி கலப்பு இல்லாமல் தமிழில் இருந்திருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X