மதுரை, கீரைத்துறை, அரசு உதவி பெறும் பள்ளியில், 2000ல், 10ம் வகுப்பு படித்த போது, சராசரிக்கும் குறைவான மாணவியாக இருந்தேன். பாடத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்று வந்தேன்.
மிகவும் பக்குவமாக, 'நீ கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த பிள்ளை போல தெரிகிறது... எனவே, படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற முயற்சி செய்...' என எடுத்துரைத்தார் அறிவியல் ஆசிரியை ஜெயமதி.
அறியாமையால் அந்த அறிவுரையை அலட்சியம் செய்தேன். அவர் கூற்றில் உண்மை இருப்பதாக மனதில் பட்ட போதும் திருந்தவில்லை. அரையாண்டு தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்தேன்.
பொது தேர்வில், தேர்ச்சி பெற வாய்ப்பு இல்லை என, எல்லா ஆசிரியர்களும் கை விட்டனர். அதை பொருட்படுத்தவில்லை அந்த ஆசிரியை. கனிவுடன் தனி கவனம் செலுத்தி, 390 மதிப்பெண் பெற வைத்தார். தொடர்ந்து நன்றாக படித்து, ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றேன்.
தற்போது, என் வயது, 37; அரசு பள்ளியில், முதுகலை தமிழாசிரியராக பணியாற்றுகிறேன். பண்பின் உறைவிடமாக திகழ்ந்த அந்த ஆசிரியையை போற்றுகிறேன்.
- க.சத்யாதேவி, மதுரை.
தொடர்புக்கு: 99523 02366