நீலமலை நாட்டு மன்னர் கிள்ளிவழவன், நீதி தவறாதவர். அவரை மக்கள், 'நீதிமான்' என அழைத்தனர். அன்று, அமைச்சர்களுடன் நாட்டு நடப்பு பற்றி கலந்தாலோசித்து கொண்டிருந்தார்.
அப்போது காவலாளி, 'புகார் அளிக்க இரு பெண்கள் வந்துள்ளனர்...' என்றான்.
'வரச்சொல்...'
காவலர்கள் அந்தப் பெண்களை அழைத்து வந்தனர்.
நடுத்தர வயதுள்ள பெண்ணிடம், 'அம்மா... உங்க புகார் என்ன...' என்றார் மன்னர்.
'என் பெயர் ரமாதேவி; ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவள்; அருகில் நிற்பவள் உமா; மூன்று நாட்களுக்கு முன்வரை என்னிடம் வேலை செய்த பணிப்பெண்...
'என் ஆபரண பெட்டியை திறந்துப் பார்த்தேன்... அதில் வைத்திருந்த வைர மாலையை காணவில்லை; அறை முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. விசாரித்த பின், இவள் தான் களவு செய்து மறைத்திருக்கிறாள் என தெரிய வந்தது. என் வைர மாலையை மீட்டு தர வேண்டும்...' என்றாள்.
உமாவிடம், 'இந்த குற்றசாட்டிற்கு, உன் பதில் என்ன...' என்றார் மன்னர்.
'பணிப் பெண்ணாக வேலை செய்தது உண்மைதான் ஐயா; வைர மாலையை நான் திருடவில்லை. நீங்கள் தான், அந்த வைர மாலையை கண்டு பிடித்து, நான் நிரபராதி என சபைக்கு அறிவிக்க வேண்டும்...'
இரு கைகளை கூப்பி நின்றாள் உமா.
'அம்மா... அந்த பெண் தான் களவு செய்தாள் என்பதற்கு ஆதாரம் உண்டா...'
ரமாதேவியிடம் வினவினார் மன்னர்.
'என் அறையை பராமரிக்கும் பொறுப்பு, இவளிடம் தான் இருந்தது... இவளைத் தவிர, யாருக்கும் அங்கு அனுமதி கிடையாது; அதனால், இவள் தான் மறைத்து வைத்திருக்கிறாள் என்பது உறுதி...'
சிறு யோசனைக்கு பின், 'காவலரே... இருவரையும் சிறையில் அடையுங்கள்; வைர மாலையை கண்டுப்பிடித்த பின் விடுவிக்கலாம்...' என கட்டளையிட்டார் மன்னர்.
இதை கேட்டதும், 'நான் எதற்கு சிறை செல்ல வேண்டும்... புகார் அளிக்க வந்தவள் சிறை செல்வது எவ்வகையில் நியாயம்...' என கோபத்தில் கேட்டாள் ரமாதேவி.
'வைர மாலையை காணவில்லை என்று மட்டும் புகார் கூறியிருந்தால், உங்களை வீட்டுக்கு அனுப்பி இருப்பேன் அம்மா; இந்தப் பெண் தான் களவாடினாள் என்று புகார் செய்துள்ளீர்; அது உண்மையா, பொய்யா என தெரியாது; உண்மை தெரியும் வரை நீங்களும் குற்றவாளியே...' என்றார் மன்னர்.
'நான், ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவள்; சிறை செல்லமாட்டேன். சிறை சென்றவள் என்ற, அவதுாறு பெற அனுமதிக்க மாட்டேன்...'
பயம் கலந்த நடுக்கத்துடன் கூறினாள்.
'நீதிக்கு முன், பணக்காரன், ஏழை, உயர்ந்தவன், தாழ்ந்தவன், அரசன், ஆண்டி என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது...'
விளக்கம் அளித்த மன்னர் இருவரையும் இழுத்து செல்ல ஆணையிட்டார்.
'கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொள்கிறேன்; அந்த வைர மாலை வேண்டாம்; என்னை விட்டு விடுங்கள்...'
பயம் கலந்த குரலில் கூறினாள் ரமாதேவி.
புன்னகைத்த மன்னர், 'கொடுத்த புகாரை, திரும்ப பெற்று விட்டதால், குற்றம் சுமத்தி நிறுத்தப்பட்டுள்ள பெண்ணிற்கு நீதி வழங்க முடியாது; காணாமல் போன வைர மாலையைக் கண்டு பிடித்தே ஆக வேண்டும்; அதுவரை இருவரும் சிறையில் தான் இருந்தாக வேண்டும்...' என்றார்.
'நான் கூறியது பொய் புகார்... வைர மாலை என்னிடம் தான் உள்ளது; இவள் மீது ஏற்பட்ட பொறாமையால் இவ்வாறு நடந்து கொண்டேன்; என்னை மன்னித்து விடுங்கள்...'
கண்ணீர் மல்க கூறினாள் ரமாதேவி.
புன் சிரிப்புடன், 'பொய் புகார் கூறினீர் என்பது தெரியும்; உங்கள் வாயால் உண்மை வெளிவரவே இந்த நாடகம் நடத்தினேன்...' என்றார் மன்னர்.
குழந்தைகளே... மன்னரை போல் நீதி தவறாமல் வாழ்ந்தால் நாடும், வீடும் நலம் பெறும்!
எம்.ஆர்.மனோகர்