மலைத்தேன்!
தேனில் பல ரகங்கள் உள்ளன. ரகத்துக்கு ஏற்றாற்போல் விலையில் வித்தியாசம் உண்டு. சில இடங்களில் சேகரிக்கப்படும் தேன், நம்ப முடியாத விலையில் விற்கப்படுகிறது.
உலகில் விலை மதிப்புள்ள தேன் குறித்து பார்ப்போம்...
எல்விஷ் ஹனி: உலகில் விலை அதிகமுள்ளது இந்த தேன். ஒரு கிலோ விலை, 5,000 யூரோ. இந்திய மதிப்பில், 45 லட்சம் ரூபாய். மத்திய கிழக்கு நாடான துருக்கியின் வடகிழக்குப்பகுதியில் உள்ள குகையில் சேகரிக்கப்படுகிறது.
இந்த குகையில் மிக அபூர்வ ரக தாவரங்கள் வளர்கின்றன. அவை பூத்து குலுங்கும் காலத்தில் சேகரிக்கப்படும் தேனுக்கு, மருத்துவ குணம் அதிகம். முதன் முதலில் துருக்கியை சேர்ந்த தேன் சேகரிப்பாளர் குனே குந்தஸ், இங்கு சேகரித்த தேனை, 2009ல் சந்தையில் விற்றார். பின் தான் இது குறித்து உலகுக்குத் தெரிய வந்தது.
இதில் மருத்துவக்குணம் இருப்பதை அறிந்த, ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ் ஸ்டாக் எக்சேஞ்ச் நிறுவன உயர் அதிகாரிகள், வாங்கி பயன்படுத்தினர். தொடர்ந்து ஆசிய நாடான சீனாவில் உள்ள மருந்து கம்பெனியும், இந்த தேனை வாங்க போட்டி போட்டது. இப்போது, சந்தையில் அதிக விலையில் விற்கப்படுகிறது.
மானுகா ஹனி: ஆஸ்திரேலிய கண்டம், நியூசிலாந்தில் வளரும் மானுகா என்ற செடி, பூக்கும் காலத்தில் கிடைக்கிறது இந்த தேன். மருத்துவக்குணம் நிறைந்தது. உடலில் பாக்டீரியாவை தடுக்கும் சக்தி உள்ளது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த தேனை வாங்கவும் கடும் போட்டி நிலவுகிறது.
சிதர் ஹனி: மேற்காசிய நாடான ஏமனில் உள்ள சிதர் மரம், பூக்கும் காலத்தில் கிடைக்கும் தேன் இது. மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது, 7 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே கிடைக்கும்.
அமெரிக்காவில் கிலோவுக்கு, 1,000 டாலர் விற்கிறது; இந்திய மதிப்பில், 75 ஆயிரம் ரூபாய் வரை விலை உள்ளது.
ஜிம்பி ஜிம்பி!
பார்ப்பதற்கு, சாதாரண செடி போல் தோன்றும். தொட்டால், கடும் வேதனை தரும். அது தான் ஜிம்பி ஜிம்பி செடி! ஆஸ்திரேலிய மழைக்காடுகளில் அதிகம் வளர்கிறது. இந்த செடிக்கு அங்குள்ள பழங்குடியான, குப்பிகுப்பி இன மக்களே இந்த பெயரை சூட்டினர்.
இது முட்களால் நிரம்பியது. அதன் மீது லேசாக உரசினால், 'ஷாக்' அடித்தது போன்ற உணர்வு ஏற்படும். தீக்காயம் போல் வலி தரும். இந்த உணர்வு நீங்க, நீண்ட நாட்களாகும். செடியின் தண்டு, கிளை, இலை, காம்பு, பழம் என, அனைத்தும் முட்களால் மூடப்பட்டிருக்கும்.
இந்த தாவரத்தை மிகவும் கவனமாக கையாளுகின்றனர் பழங்குடி மக்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.