'தண்டனை கொடுப்பதால் மட்டும் குற்றவாளியை திருத்த முடியாது; அன்பும் கருணையான அணுகுமுறையால் கடின உள்ளத்தையும் வெல்லலாம்' என நிரூபித்தவர் எலிசபெத் பிரை.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, நார்விச், எர்ல்ஹாமில், மே 21, 178௦ல் பிறந்தார். இவரது தந்தை, ஜான் கெர்னி பொது சேவைகளில் ஈடுபட்டு வந்தார். அவர் போல, எலிசபெத்துக்கும் சேவை செய்ய ஆர்வம் ஏற்பட்டது. ஏழை எளியவர்களுக்காக, ஒரு பள்ளியை துவங்கி இலவசமாக நடத்தி வந்தார்.
வங்கி அதிபரை திருமணம் செய்து, லண்டனுக்கு குடிபெயர்ந்தார்; அங்கும், ஏழை எளிய மக்களுக்கு உதவியை தொடர்ந்தார். ஒருநாள் லண்டன் சிறைச்சாலைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு பெண் கைதிகளில் சிலர், குழந்தைகளுடன் இருந்ததைக் கண்டார். மிகுந்த பரிவுடன் அந்த குழந்தைகளை நலம் விசாரித்தார்.
எலிசபெத்தின் அன்பால் ஈர்க்கப்பட்ட கைதிகள், குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து தர கண்ணீர் மல்க வேண்டினர். இதையடுத்து, சிறைச்சாலை சூழலை மாற்ற திட்டமிட்டார் எலிசபெத். கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
சிறையில் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்று துவங்கப்பட்டது.
சிறையில் பெண் கைதிகளுக்காகவும் ஒரு பள்ளியை துவங்கினார். அங்கு வழக்கமான கல்வி மட்டுமின்றி, தொழிற் பயிற்சி வழங்கவும் நடவடிக்கை எடுத்தார். பயனுள்ள வகையில், பெண் கைதிகள் நேரத்தை செலவிட வழிவகை செய்தார்.
கைதிகளின், கை, கால்களில் விலங்கு பூட்டும், கொடிய பழக்கத்தை அடியோடு ஒழிக்க முயற்சிகள் எடுத்தார். அதற்காக, பெண் கைதிகள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். அதன் மூலம், 'சிறையில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்; என்ன விதமான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்' என, அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பினார்.
சிறை தண்டனை முடிந்து விடுதலையாகும் பெண்கள், எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள தொழில், வேலை வாய்ப்பை உருவாக்கினார் எலிசபெத்.
பெண் கைதிகளை நாடு கடத்தும், கொடிய தண்டனையை ரத்து செய்ய முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் அடைந்தார்.
ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், ஹாலந்து, டென்மார்க் ஆகியவை, சிறைச்சாலையில் சீர்த்திருத்தம் செய்ய அவரிடம் ஆலோசனை கேட்டன. அங்கும் கைதிகள் நலனுக்கு சிறப்பு திட்டங்களை வகுத்து கொடுத்தார்.
அவரது மகத்தான சேவையைப் பாராட்டி, இங்கிலாந்து ராணி விக்டோரியா, மதிப்புமிகு பட்டம் வழங்க முன்வந்தார். மிகவும் தன்னடக்கத்துடன், 'தன்னலமற்ற தொண்டுக்கு பரிசு பெற விரும்பவில்லை' என, மறுத்து விட்டார்.
கைதிகள் நலனுக்காக வாழ்நாளை செலவிட்ட எலிசபெத் அக்., 12, 1845ல், தன் ௬௫ம் வயதில் மரணம் அடைந்தார். அவர் புகழ் நிலைத்துள்ளது.