நாட்டின் எல்லையை விஸ்தரிக்க தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான் மன்னன்.
அதற்காக, தொலை துாரத்தில் ராணுவ பாசறையில், இரவு தங்கியிருந்தான். அவன் காதில் ஒரு பூச்சி நுழைந்தது. திடுக்கிட்டு எழுந்தான்.
பூச்சியை எடுக்க நடந்த முயற்சி பலிக்கவில்லை.
வீரர்கள் சிலருடன் தலைநகருக்கு புறப்பட்டான் மன்னன். ராஜ வைத்தியரிடம் பிரச்னையை கூறினான். மூலிகைகளை வரவழைத்து, சாறு எடுத்து மன்னன் காதில் ஊற்றினார். எதற்கும் பலன் இல்லை.
மன்னன் காதில் நுழைந்த பூச்சியை எடுப்பவருக்கு பிரமாண்ட பரிசு அறிவிக்கப்பட்டது. எங்கிருந்தோ வைத்தியர்கள் வந்தனர். பூச்சியை எடுக்க முடியவில்லை. காதுக்குள் பூச்சி பறந்து கொண்டிருந்ததால் மன்னனால் துாங்க முடியவில்லை; உண்பதும் குறைந்தது.
கம்பீரமாக உலா வந்தவன் பஞ்சத்தில் அடிப்பட்டவனை போல் படுக்கையில் வீழ்ந்தான். உயிர் பிரியும் காலம் நெருங்கி விட்டதாக எண்ணி, 14 வயதுள்ள மூத்த மகனுக்கு, வாள் பயிற்சி, குதிரையேற்றம் எல்லாம் கற்பித்தான்.
அச்சமயம், இமயமலையில் இருந்து சீடர்கள் புடை சூழ வந்தார் ஒரு துறவி. அவர் பாதங்களில் பணிந்து, 'கணவனை காப்பாற்ற வேண்டும்...' என்று மன்றாடினார் ராணி.
அரண்மனைக்கு வந்து மன்னன் காதை கூர்ந்து கவனித்து, ராஜ வைத்தியருடன் ஆலோசித்தார் துறவி. சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்தார்.
அன்று மாலை மன்னனையும், ராணியையும் தனியாக சந்தித்து, 'காதில் நுழைந்துள்ளது மிகவும் அபூர்வ வகை பூச்சி; நாட்டு மூலிகைகளுக்கு கட்டுப்படாது; அபூர்வமான மூலிகைக்கு தான் கட்டுப்படும்... அதை எடுத்து வர சீடர்களை அனுப்புகிறேன்; அவர்கள் திரும்பியதும் பிரச்னை தீர்ந்து விடும்...' என்றார் துறவி.
மூன்று வாரங்களில், மூலிகை வந்தது.
மன்னன் காதில் மூலிகை சாறு ஊற்றினார் துறவி; சில நொடிகளில், பூச்சி வெளியில் வந்து விழுந்தது. துறவியின் பாதங்களில் பணிந்தான் மன்னன். நிம்மதியாக துாங்கி, நன்றாக உண்டு, பழைய பொலிவை அடைந்தான்.
துறவிக்கு உரிய மரியாதை செய்து, அனுப்பி வைத்தான்.
நாட்டு எல்லையை தாண்டியதும், சீடர்களில் ஒருவன், 'குருதேவா, அந்த அற்புத மூலிகை பற்றி கூற இயலுமா...' என்றான்.
மற்றொரு சீடன், 'மூலிகையை விட பூச்சி அற்புதம்; மன்னனை பாடாய் படுத்தி இருக்கிறது; அது விசேஷ பூச்சியாக இருக்க வேண்டும்; அதைப் பற்றி கூறுங்கள்...' என்றான்.
புன்னகை பூத்தார் துறவி.
'பூச்சி, இத்தனை நாளாக எங்கே இருந்தது...'
'மன்னனின் காதுக்குள்...' என்றனர் சீடர்கள்.
'இல்லை... காதில் பூச்சி சென்றது உண்மையாக இருக்கலாம்; சிறிது நேரத்தில் அது செத்திருக்கும்; அல்லது வெளியே வந்திருக்கும்... அது, காதுக்குள் ஏற்படுத்திய குறுகுறுப்பு உணர்வு மன்னன் மனதில், ஆழமாக பதிந்து விட்டது. அது, உயிருடன் இருப்பதாகவே எண்ணிக் கொண்டிருந்தான் மன்னன்...'
'அதை விளக்கி, குணப்படுத்தி இருக்கலாமே...'
'மனோவியாதியை, அப்படி எளிதாக குணப்படுத்தி விட முடியாது... பிரச்னை, தீவிரமானது என்று நினைத்தவனிடம், சிகிச்சையும் தீவிரமானது என பாசாங்கு செய்தேன்... பொய் கூறினேன்... ஏற்கெனவே பிடித்து வைத்திருந்த பூச்சியை காதில் இருந்து வந்ததாக காட்டினேன்; நோய் தீர்ந்தது... இன்றைய நோய்களில் பெரும்பான்மை மனதில் தான் இருக்கிறது...' என்றார் துறவி.
வியப்புடன் குருவை பார்த்தனர் சீடர்கள்.
குழந்தைகளே... இல்லாத பிரச்னையை நினைத்து வாய்ப்புகளை தவறவிடக்கூடாது. கவனத்துடன் செயலில் இறங்குங்கள்.
வி.சி.கிருஷ்ணரத்னம்